Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

முன்னுரை

எவ்விதத் தியாகமும், உழைப்பும் செய்யாமல் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை வாரிசு முறையில் நாம் பெற்றுள்ளோம். இதனால் தானோ என்னவோ இம்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உணராதவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் பெயரால் யார் எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் அல்லது சிந்திக்க வேண்டிய முறையில் சிந்திக்காமல் நம்பி விடுகிறோம்.

இவ்வுலகத்தின் பொருட்களையும், வசதி வாய்ப்புகளையும் தேர்வு செய்வதில் நாம் காட்டும் அக்கரையில் பத்தில் ஒரு பகுதி கூட மார்க்க விஷயத்தில் நாம் காட்டுவதில்லை. நமது இந்த அலட்சியத்தைப் பயன்படுத்தித் தான் தர்கா வழிபாடு இச்சமுதாயத்தில் நுழைந்தது. மூட நம்பிக்கைகள் புகுந்தன. அனாச்சாரங்கள் தலை விரித்து ஆடின.

நமது இந்த அலட்சியத்தைப் பயன்படுத்தித் தான் இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் இஸ்லாத்தின் காவலர்கள் வேடம் போட முடிகிறது. இஸ்லாத்தைத் தகர்க்கும் கொள்கை கூட உண்மை இஸ்லாம் என்ற போர்வையில் உலா வருகிறது.

இது போன்ற கொள்கைகளில் ஒன்று தான் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கை. குர்ஆனை மதிக்கிறோம் என்ற போர்வையில் நபிவழியை மட்டுமின்றி குர்ஆனையும் இவர்கள் மறுக்கின்றனர் என்பதைச் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம். இந்தக் கொள்கையுடையோர் விரல் விட்டு எண்ணத்தக்க அளவுக்குக் குறைவாக இருந்தாலும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்வது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் அளவுக்குப் பெருங்குற்றம் என்பதால் முக்கியத்துவம் கொடுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இக்கொள்கைக்கு எதிராக சில அறிஞர்கள் அரபு மொழியில் சில நூல்களை எழுதி இருந்தாலும் அவை முழுமையானதாக இல்லை.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்று வாதிடுவோருக்கு மறுப்பு எழுதும் போது அவர்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறிக் கொள்ளும் குர்ஆனிலிருந்து தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஆனால் இவர்களுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல்களில் நபி வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி மறுப்பு எழுதியுள்ளனர். ஹதீஸைப் பின்பற்ற மாட்டோம் எனக் கூறுவோருக்கு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுவது எப்படி பயனளிக்கும்?

மேலும் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டத்தினர் கேட்கும் எதிர்க் கேள்விகளுக்கும் தக்க பதில் கூறும் வகையில் அவர்கள் எழுதிய மறுப்புகள் அமையவில்லை. எனவே முற்றிலும் குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்நூலில் நிலை நாட்டியுள்ளோம்.

ஹதீஸ் மறுப்பாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் வாய் திறக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக மறுப்பளித்துள்ளோம். மேலும் அவர்கள் கியாம நாள் வரை முயன்றாலும் பதில் அளிக்க முடியாத பல கேள்விகளையும் நூலில் எழுப்பியுள்ளோம்.

இஸ்லாத்தை விட்டு ஒரு முஸ்லிமை வெளியேற்றும் இந்தக் கொள்கையில் யாரும் விழுந்து விடக் கூடாது என்பதும், ஏற்கனவே விழுந்தவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்பதுமே இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்