Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: திருமறையின் தோற்றுவாய்

Last Updated on February 24, 2022 by

1) முன்னுரை

திருக்குர்ஆனில் ஏழு வசனங்களைக் கொண்ட அல்ஹம்து அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் தாய் என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். முழுக் குர்ஆனுக்கும் இது தாயாகத் திகழ்கிறது என்றால் அந்த அளவுக்கு ஆழமான கருத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே தான் இந்த அத்தியாயத்துக்கு தனியாக விளக்கவுரை எழுதும் உந்துதல் ஏற்பட்டது. இந்த அத்தியாயத்தில் இன்னும் கவனம் செலுத்தி ஆராய்பவர்கள் இதை விட அதிகமான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்த அத்தியாயம் ஆழம் நிறைந்தது. இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் ஆழமாக ஒருவர் அறிந்து கொண்டால் மொத்தக் குர்ஆனிலும் கூறப்பட்ட போதனைகளை அறிந்து கொண்டவராவார்.

எனவே தான் இந்த அத்தியாயத்திற்கு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. முந்தைய பதிப்புகளை விட இதில் ஏராளமான விளக்கங்கள் சேர்த்துள்ளேன். ஹதீஸ்களை அரபு மூலத்துடன் தந்துள்ளேன். தேவையற்றவை எனக் கருதும் விஷயங்களை நீக்கியுள்ளேன்.

இஸ்லாத்தின் ஜீவ நாடியாகத் திகழும் ஏகத்துவக் கொள்கை குறித்தும், அதற்கு எதிரான வாதங்களுக்கு எவ்வாறு விளக்கமளிப்பது என்பது குறித்தும் இயன்ற அளவு முழுமையான விளக்கத்தை உரிய இடத்தில் சேர்த்துள்ளேன்.

ஏகத்துவக் கொள்கையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நூலின் ஒரே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,

பி.ஜைனுல் ஆபிதீன்.