Tamil Bayan Points

02) ஈமான், இஸ்லாம் , இஹ்ஸான்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 1

ஈமான், இஸ்லாம் , இஹ்ஸான்

 

ஈமான் என்றால் என்ன?

 ‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் ‘இறைநம்பிக்கை’ என்று பொருள். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும் என்று கூறினார்களோ அவற்றில் எதையும் அதிகமாக்காமலும் எதையும் விட்டுவிடாமலும் உள்ளதை உள்ளபடி உண்மையென உள்ளத்தால் உறுதிகொள்வதே ‘ஈமான்’ என்பதாகும்

ஈமானின் கடமைகள்  எத்தனை?

ஈமானின் கடமைகள் ஆறு ஆகும் . பின்வரும் ஹதீஸி­ருந்து அவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்

ஜிப்ரீல் ( அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஈமான்(இறைநம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின்  (நாட்டமாகிய) விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்  உமர் (ரலி­)

நூல் : முஸ்லி­ம் (9)

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டதாகும்.  . பின்வரும் ஹதீஸி­ருந்து அவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி என்க்கு அறிவிப்பீராக என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் இஸ்லாம் என்பது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும் நிச்சமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் , தொழுகையை நிலைநாட்டுவதும் , ஸகாத்தை நிறைவேற்றுவதும் , ரமலான் மாதம் நோன்பு நோற்பதும், (பொருளாலும் , உடலாலும் ) சென்று வர சக்தி பெற்றிருந்தால் அல்லாஹ்வுடைய (கஃபா) எனும் ஆலயத்தை ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்  உமர்(ரலி­)           

நூல் : முஸ்­ம் (9)

 

இஹ்ஸான்  என்றால் என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்  உமர்(ர­லி)

நூல் : ­முஸ்லி­ம் (9)

 

ஈமானின் கிளைகள்  எத்தனை?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை’ என்ற சொல்லாகும். அவற்றில் கடைசியானது (மக்கள் நடமாடும்) பாதையில் இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும். ‘வெட்கம்’ என்பதும் ஈமானின் ஒரு கிளையாகும்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி­) 

நூல் : முஸ்லி­ம்