Tamil Bayan Points

09) தீர்க்கதரிசியானவர் யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 27, 2022 by

09) தீர்க்கதரிசியானவர் யார்?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மற்றுமின்றி புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் (ஸல்) குறித்து பல முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.

புதிய ஏற்பாட்டின் யோவான், மத்தேயு ஆகிய சுவிசேஷங்களில் இந்த முன் அறிவிப்பைக் காணலாம். இந்த முன்னறிவிப்பை விரிவாகப் பார்ப்போம்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தம் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டவாறு மூன்று நபர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.

எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.

(யோவான் 1:19,22)

யோவான் (யஹ்யா நபி) இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர். இயேசுவுக்கே ஞானஸ்நானம் வழங்கியவர். அவர் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்ட போது யூதர்கள் அவரிடம் சென்று கேள்வியைக் கேட்டனர். ”நீர் கிருஸ்துவா? அல்லது எலியாவா? தீர்க்கதரிசியானவரா? இது தான் அவர்களின் கேள்வி.

அன்றைக்கு வேதம் கொடுக்கப்பட்டிருந்த யூதர்கள் உலகைத் திருத்த மூன்று நபர்கள் வர வேண்டியுள்ளது என்பதை விளங்கி இருந்தனர். இது வரை அம்மூவரில் ஒருவரும் வரவில்லை எனவும், இனிமேல் தான் அம்மூவரும் வர வேண்டும் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதனால் தான் யோவான் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்ட போது, ”நீர் கிறிஸ்துவா? எலியாவா? தீர்க்கதரிசியானவரா?” என்று கேட்டுள்ளனர். இந்த வசனங்களைச் சிந்திக்கும் எவருமே இந்த விபரங்களை அறியலாம்.

இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் பைபிள் வசனத்தைப் பாருங்கள்! 

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய் தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார். அவர் யோவான் ஸ்நானகளை குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்போது அறிந்து கொண்டார்கள்.

(மாத்தேயு 17:11-13)

இந்த வசனத்தில் மேலும் சில விபரங்களும் நமக்குக் கிடைக்கின்றன. அதாவது கிரிஸ்துவின் வருகைக்கு முன்னர் எலியா வந்து சீர்படுத்த வேண்டும் என யூத வேதங்களில் கூறப்பட்டிருந்தது.

அதனால் இயேசு தம்மைக் கிறிஸ்து எனக் கூறிய போது ”நீர் கிறிஸ்து என்றால் உமக்கு முன்னர் எலியா வர வேண்டுமே” என்று யூதர்கள் ஐயத்தை எழுப்புகிறார்கள். எலியா வந்து நிலைமையைச் சீர்படுத்துவார் என்பது உண்மை தான். எலியா எனக்கு முன்னர் வந்து விட்டார்.

அவர் தான் யோவான், யோவான் தான் எலியா என்பதை மக்கள் அறியாமல் அவரைத் தொல்லைப்படுத்தினார்கள். எலியாவுக்குப் பின் நான் வந்துள்ளதால் நான் தான் கிறிஸ்து என்று இயேசு கூறுகிறார்.

இந்த விபரங்களை மேற்கண்ட வசனங்களைச் சிந்திக்கின்ற யாருமே அறிந்து கொள்ளலாம். யோவான் தன்னை எலியா அல்ல என ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். யோவானை அந்த மக்கள் சித்திரவரை செய்ததால் மறுத்திருக்கலாம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

எலியாவின் வருகையை யூதர்கள் எதிர்பார்த்தனர். அவர் வந்து விட்டார். அவர் தான் யோவான். அவரைத் தொடர்ந்து கிறிஸ்து வர வேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தனர். அவரும் வந்து விட்டார். அவர் தாம் இயேசு கிறிஸ்து.

தீர்க்கதரிசியானவர் வர வேண்டுமே? அவர் யார்? யோவான் காலம் முதல் இன்று வரை தீ்ரக்கதரியாக வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். இயேசுவிற்குப் பிறகு வந்த தீர்க்கதிரிசியானவரை – நபிகள் நாயகத்தை கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்கள் பைபிளின் போதனையை மறுக்கிறார்கள் என்பது பொருள்.

இந்த நம்பிக்கையினடிப்படையில் தான் ஜெருசலேமிருந்து யூதர்கள் வலசை புறப்பட்டு மதினாவில் குடியேறினர். தீர்க்கதரிசியானவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இல்லை என்றால் மதீனாவுக்கு யூதர்கள் வரவேண்டிய அவசியமே இல்லை.

கிறித்தவ நண்பர்களே! பைபிளில் காணப்படும் இந்த முன்னறிவிப்பை சிந்திக்க மாட்டீர்களா?