Tamil Bayan Points

09) இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம்

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

Last Updated on February 2, 2023 by

இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம்

பிறருக்கு நோவினை செய்யாதவனே முஸ்-ம் என்று இஸ்லாம் கூறுகின்றது. வரதட்சணையால் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நோவினைப்படுகிறார்கள். எனவே வரதட்சணை வாங்குபவர்கள் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடைவிதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே (உண்மையான) முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி (6484)

புனிதம் பாழ்படுத்தப்படுகின்றது

ஒரு முஸ்லிமுடைய உயிரும் உடைமையும் பொருளும் புனிதமானவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கஃபா எவ்வாறு புனிதமானதோ அது போன்று இவையும் புனிதமானவை. வரதட்சணை வாங்குவோர் ஒரு முஸ்லிமுடைய பொருளை அநியாயமாக அபகரித்து உடலளவிலும் மனதளவிலும் அவனை காயப்படுத்தி இந்த புனிதத்தை பாழ்படுத்திவிடுகின்றனர்.

أَلاَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ ” قَالُوا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ – ثَلاَثًا – وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ، انْظُرُوا، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»

 ‘அறிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் உங்களின் இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகிறதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, ‘நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (சேர்த்து விட்டீர்கள்)’ என்று பதிலளித்தனர்.

நூல் : புகாரி-4403

சகோதரத்துவம் அழிகின்றது

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான். தன்னுடன் பிறந்த சகோதரனிடத்தில் நாம் எப்படி அன்புடன் நடந்துகொள்கின்றோமோ அது போன்ற நம்முடன் பிறவாத இஸ்லாமியர்களிடத்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَالِمًا أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான்.

ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) 

நூல் : புகாரி-2442

வரதட்சணை வாங்குவது இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்திற்கு நேர் எதிரானதாகும். வீட்டுக்குப் புதிதாக வரும் மணப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தினால் அவளுடைய உள்ளத்தில் கணவனைப் பற்றியும் கணவனின் உறவினர்களைப் பற்றியும் கெட்ட மதிப்பீடு ஏற்படும்.

இதன் காரணத்தால் அவள் பிற்காலத்தில் மாமனார் மாமியாரை பழிவாங்கும் என்னத்துடன் செயல்படுவாள். மாப்பிள்ளை பெண்ணிடம் கை நீட்டி பணம் வாங்கியதால் பெண் செய்யும் தவறுகளை அவனால் கண்டிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே வரதட்சணை வாங்குவது குடும்நலத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.