Tamil Bayan Points

08) 6 வது வசனத்தின் விளக்கம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

6 வது வசனத்தின் விளக்கம்

கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்று இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்:36:06.)

இதில் 6 வது வசனத்தில் “முன்னோர் எச்சரிக்கப்படாமல் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக” என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நபியின் சமுதாயத்திற்கு நபியவர்களுக்கு முன் எந்த தூதரும் வரவில்லை. சிலை வணக்கம் போன்றவை கூடாது என்றும் அதனுடைய தீமைகளும் அவர்களுக்கு விளக்கி கூறப்படவில்லை. அதனாலேயே முன்னோர் எச்சரிக்கப்படாத சமுதாயம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். இக்கருத்து மேலும் சில வசனங்களிலும் உள்ளது.

“இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

(அல்குர்ஆன்:32:3.)

நாம் அழைத்த போது தூர் மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. மாறாக உமது இறைவனின் அருளால், இதற்கு முன் எச்சரிக்கை செய்பவர் வராத ஒரு சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)

(அல்குர்ஆன்:28:46.)

இறைத்தூதர் வராதவர்களின் மறுமைநிலை என்ன?

இதிலிருந்து நபியவர்களின் சமுதாயத்திற்கு நபி ஸல் அவர்களையே எச்சரிக்கும் இறைத்தூதராக அனுப்பி உள்ளான். நபிக்கு முன் எந்த தூதரும் அச்சமுதாய மக்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை அறியலாம். இந்நேரத்தில் நமக்கு ஒரு கேள்வி எழலாம். நபிகள் நாயத்தின் வருகைக்கு முன் தூதர் வராத நிலையில் அச்சமுதாய மக்களில் சிலர் இறந்திருப்பார்களே அவர்களின் மறுமைநிலை என்ன?

அவர்களுக்கு மறுமையில் கேள்வி கணக்கு உண்டா?

தூதர்களே வரவில்லையென்றால் இஸ்லாமிய சட்டங்கள் அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டிருக்காது. இவ்வாறு பிரச்சாரமே சென்றடையாத சமுதாயத்திற்கு எப்படி அல்லாஹ் கேள்வி கேட்பான்? இவ்வாறான கேள்விகள் எழலாம். இது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

தூதர் விளக்கவேண்டியது பற்றி கேள்வியில்லை

நபி (ஸல்) அவர்களின் தாய், தந்தை போன்ற தூதர் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்து மரணித்தவர்களை பொறுத்தவரை அவர்களிடம் தூதரின் துணையில்லாமல் எவற்றை அறிந்து கொள்ளவே முடியாதோ அவைகள் பற்றி கேள்வி கேட்கப்படாது. உதாரணமாக தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், திக்ரு, தஸ்பீஹ் போன்ற வணக்கங்களை தூதர் வந்துதான் விளக்கவேண்டும்.

ஒருவர் தாமாக சிந்தித்து ஒரு நாளைக்கு எத்தனை ரக்அத் தொழுகைகள், எத்தனை மாதங்கள் நோன்பு நோற்பது? எப்படி நோன்பு நோற்பது? போன்றவற்றை பகுத்திறவு கொண்டு விளங்கமுடியாது. தூதரின் உபதேசமோ வழிகாட்டலோ இல்லாமல் இவற்றை விளங்க இயலாது என்பதால் இதை பற்றி அல்லாஹ் அவர்களிடம் கேட்கமாட்டான்.

தவ்ஹீதை பற்றி கேட்பான்

ஆனால் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இணையாக யாருமில்லை. அவனை மட்டும்தான் வணங்கவேண்டும் என்ற ஏகத்துவ கொள்கையை இறைவன் வழங்கிய பகுத்தறிவால் அறிந்து கொள்வது அனைவர் மீதும் அவசியமான ஒன்றாகும்.

ஏனெனில் இவ்விஷயத்தை தூதர் வந்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பகுத்தறிவு போதுமானது. விளங்கத்தக்க சான்றுகளும் உலகில் உள்ளன. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை படைத்துள்ளான்.

ஸாபியீன்கள்

ஸாபியீன்கள் என்ற சிலர் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்பே இருந்துள்ளனர். அல்லாஹ் அதை விவரிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:5:69.)

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

(அல்குர்ஆன்:22:17.)

மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்ற ஸாபியீன்கள் என்பவர்கள் தூதர்கள் தங்களிடம் வராவிட்டாலும் ஓரிறைக்கொள்கையை சிந்தித்து ஏற்று செயல்பட்ட மக்களாவர். அரபுகளின் சிலை வணக்கத்தை விட்டு தவிர்ந்திருந்தனர். இணைவைப்பு காரியங்களை செய்யாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்றிருந்தனர்.

நம்பத்தகுந்த அத்தாட்சிகளை நம்பியிருந்தனர். எனவே தூதர் வராவிட்டாலும் ஸாபியீன்கள் போன்று பகுத்தறிவு அடிப்படையில் சிந்தித்து, ஓரிறைக் கொள்கையை ஏற்று செயல்பட்டிருக்கவேண்டும்.

சிந்திக்க வைக்கும் ஒப்பந்தம்

தூதர் வராவிட்டாலும் நம்முடைய பகுத்தறிவே ஓரிறைக் கொள்கையை விளங்கப் போதுமானது என்பதற்கு பின்வரும் அல்லாஹ்வின் ஒப்பந்தம் ஒரு சான்றாகும்.

“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்;

நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.) அவர்கள் திருந்துவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

(அல்குர்ஆன்:7:172,173,174.)

இறைவனை நிராகரித்தவர்கள் மறுமையில் ஓரிறைக் கொள்கை பற்றி எங்களுக்கு தெரியாது என்று கூறிவிடக்கூடாது என்பதற்காகவும் இதை முன்னேற்பாடாக அல்லாஹ் ஆக்கிவைத்திருக்கிறான்.

நம்பத்தகுந்த சான்றுகள்

இதுமட்டுமின்றி ஓரிறைக்கொள்கையை விளங்குவதற்கு ஏராளமான நம்பத்தகுந்த சான்றுகளும் உலகில் உள்ளன. தூதர் வராவிட்டாலும் அத்தகைய சான்றுகளை சிந்தித்தாலே இறைவன் இருக்கிறான் என்ற முடிவிற்கே நமது பகுத்தறிவு நம்மை அழைத்து செல்லும்.

சூரியன், சந்திரன் இயக்கம்

சூரியன், சந்திரன் போன்ற கோள்கள் சீரான முறையில் இயங்குகின்றன. தானாக இயங்கினால் இவ்வாறு இருக்காது. இதை பார்க்கின்ற எவரும் இதை யாரோ இயக்குகிறார்கள் என்று விளங்கிக்கொள்வார். ஏனெனில் தானாக இயங்குகின்ற எந்த ஒன்றும் சீராக இயங்காது.

உதாரணமாக ஓட்டுநர் இல்லாத பேருந்து சிறிது தூரம் சென்றாலும் பிறகு நிலை தடுமாறிவிடும். தானியங்கி பேருந்தாக இருந்தாலும் யாராவது அதில் பதிவு செய்த தொழில்நுட்பத்தின் படிதான் இயங்கும். இது போன்று ஏராளமான சான்றுகள் உண்டு.

மரங்கள் முளைத்தல்

பொதுவாக மண்ணில் எந்த பொருளை புதைத்தாலும் அதை மண் அரித்துவிடும். உதாரணமாக ஆப்பிளை புதைத்தால் அதை மண் அரித்து தின்று விடும். இரும்பை புதைத்தால் அதையும் மண் அரித்து விடும். மனிதனை புதைத்தாலும் அவனுக்கும் இதே நிலை தான். இதில் நபிமார்களுடைய உடல் மட்டும் விதிவிலக்காகும். ஏனெனில் நபிமார்களின் உடலை மண் தீண்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிமார்களின் உடல்களை தீண்டக்கூடாது என பூமிக்கு அல்லாஹ் தடைசெய்துவிட்டான்.

இதை அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் நஸாயீ-1357

அத்தனையையும் அரித்து, தின்று தீர்க்கும் தன்மை கொண்ட மண், நெல் விதை, மா விதை போன்ற மனிதன் உண்பதற்காக விதைப்பவற்றை மண்ணில் புதைத்தால் அதை மண் அரித்துவிடாமல் மனிதன் பயன் பெறும் வகையில் நமக்கே திருப்பித்தருகிறது. இதை பார்க்கும் யாரும் தானாக நடப்பது என்று கூறமாட்டார்கள். திட்டமிட்ட நிகழ்ச்சி அதில் தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே இந்த நிகழ்வு சாத்தியமாகும்.

ஏனெனில் தானாக நடப்பது என்றால் அனைத்தையும் மண் அரிப்பதை போல மனிதன் உணவுக்காக எதை விதைக்கின்றானோ அவற்றையும் மண் அரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. எனவே இந்த குறிப்பிட்ட மாற்றங்களை பேராற்றல் கொண்ட ஒருவன் இயக்குகிறான் என்பதை அறியலாம்.

மேலும் மா, பழா, வாழை போன்றவற்றை ஒரே இடத்தில் விதைத்தாலும் அவற்றின் சுவைகள் வெவ்வேறாக இருக்கிறது. மேலும் நாம் விதைத்த விதையில் எவ்வித சுவையும் இல்லை. சுவைமிகுந்த நீரையும் அதற்கு பாய்ச்சவுமில்லை. சாதாரண நீரைதான் பாய்ச்சுகிறோம். ஆனால் பழங்களோ மிகுந்த சுவையுடையதாக இருக்கின்றன. இவை தானாக நடப்பது என்றால் அனைத்தும் ஒரே சுவையாக இருக்கவேண்டும். ஆனால் வெவ்வேறாக இருப்பது இவற்றை இயக்கும் பேராற்றல் கொண்ட இறைவன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்” என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?

நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?

இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பலனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.

எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

(அல்குர்ஆன்:56: 64 லிருந்து 74 வரை.)

மனிதர்களிலும் பல அத்தாட்சிகள் உண்டு

பூமி விளைவிப்பவற்றில் மட்டுமின்றி மனிதர்களிலும் பல அத்தாட்சிகள் உண்டு. மனித உடல்களில் உள்ள உறுப்புகளை பற்றி சிந்தித்தாலே இதை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கண், நாக்கு போன்ற உறுப்புகள்

நம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்பான கண் மிகப்பெரிய அத்தாட்சியாகும். ஏனெனில் நவீன கண்டுபிடிப்பாகிய கேமரா அனைத்தையும் படம் பிடித்தாலும் கண் போன்று தெளிவாக இருக்காது. ஆனால் நமது கண் அத்தகையதல்ல. நமது கண்ணானது எந்த திசையில் திரும்பினாலும் உடனடியாக துல்லியமாக பார்க்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

மேலும் மனிதனின் நாக்கு என்பதும் மிகப்பெரிய அத்தாட்சியே. ஏனெனில் பேசும் திறன் உள்ளவருக்கும் பேசும் திறனில்லாத ஊமைகளுக்கும் ஒரே நாக்குதான் உள்ளது. இரண்டும் ஒரே அளவுதான் உள்ளது. ஆனால் ஒருவருக்கு மட்டும் பேச்சு வரவில்லை. கட்டளையிட்டு இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதையே இந்த வேறுபாடு உணர்த்துகிறது.

ஐம்பது கிராம் எடையுள்ள நாக்கின் மூலமாக நாம் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை பேசுகிறோம். இவ்வாறு பேசுவதற்கு நாக்கின் எடைதான் காரணம் என்றால் எருமை மாட்டின் நாக்கு நம்மைவிட அளவில் மிகப்பெரியதாகும். அது நம்மைவிட அதிகமான மொழிகளை பேசவேண்டும் ஆனால் மனிதன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அதற்கு ஒரு மொழி கூட பேசமுடிவதில்லை. ஏனெனில் படைத்த இறைவன் அதற்கு மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேசும் திறனை வழங்கவில்லை என்பதே காரணம்.

எனவே ஓரிறைக் கொள்கையை புரிந்து ஏற்றுக் கொள்ள இறைத்தூதர் வரவேண்டும் என்ற அவசியமில்லை.

இதுபோன்ற நுணுக்கமான வேறுபாடுகளையும் துல்லியமான இயக்கங்களையும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்தாலே இவற்றை இயக்கும் இறைவன் இருக்கிறான் என்பதை விளங்கி ஸாபியீன்கள் ஓரிறைக்கொள்கையோடு வாழ்ந்தது போன்று தூதர்வராத மக்களும் வாழலாம். ஆதலால் அவர்களுக்கு எவ்வித கேள்விகளும் இல்லை என விளங்கக்கூடாது. மாறாக தூதர் விளக்கவேண்டிய கேள்விகளை தவிர்த்து ஓரிறைக்கொள்கையை பற்றிய கேள்விகள் அவர்களுக்கும் உண்டு.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரின் மறுமை நிலை என்ன?

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த இணைவைப்பாளர்கள் நரகவாசிகள்தான் என்பதில் முஸ்லிம்களில் அனைத்து பிரிவினர்களும் ஒரே கருத்தை கொண்டுள்ளனர்.

எனினும் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் குறித்து மட்டும் சிலர் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். நபியின் பெற்றோர் நரகவாசிகள் அல்ல. சொர்க்கவாசிகள்தான். ஏனெனில் உலகத்தின் அருட்கொடையாகிய நபியை சுமந்து பெற்றெடுத்துள்ளனர். எனவே அவர்களை நரகவாசிகள் என்பது தகுதியானதல்ல என்று கூறுகின்றனர். ஆனால் இதைப்பற்றி நபி (ஸல்) அவர்களே தெளிவாக விளக்கிவிட்டார்கள்.

நபியின் தாயாருக்கு பாவமன்னிப்பு இல்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் முஸ்லிம்-1776

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தன் தாயாருக்காக பாவமன்னிப்பு கோர இறைவனிடம் அனுமதி கேட்கும் போது அவர்களுடைய அடக்கத்தலத்தை சந்திக்கலாம் என்ற அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் பாவமன்னிப்பு கோர அனுமதி கிடைக்கவில்லை.

(பொதுவாக அடக்கத்தலங்களை சந்திப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது. மாறாக தர்கா போன்ற அனாச்சாரங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்லக்கூடாது என்றுதான் தடுத்துள்ளது.) இதற்கான காரணம் பிற வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்க அனுமதி கிடையாது என அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன்:9 : 113.)

இணைகற்பிப்பபோருக்கு பாவமன்னிப்பு கிடையாது என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். நபியின் தாயார் இணைவைப்பாளராக இருப்பதால்தான் அவருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என தடுத்துள்ளான். அவர் சொர்க்கவாசியாக இருந்திருந்தால் தாராளமாக அனுமதி வழங்கியிருப்பான். எனவே இத்தடை மூலமும் நபியின் தாயார் நரகவாசிதான் என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்களின் தந்தையும் நரகவாசி

மேலும் நபியவர்கள் தன் தந்தை பற்றியும் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-347.

கேள்வி கேட்ட மனிதரிடம் நபியவர்கள் தன் தந்தையின் மறுமை நிலையை விளக்கும்போது அவர் நரகவாசி என்று கூறுகிறார்கள். தாயைப்போன்று தந்தையும் இணைவைப்பாளராக இருந்ததால் அவரும் நரகவாசி என்று கூறுகிறார்கள். எனவே நபிகாலத்து மக்களைப்போன்று நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் இருவரும் நரகவாசிகள்தான். மேலும் இவர்களை ஸாபியீன்கள் போன்றவர்கள் என்று கூறுவதும் தவறாகும்.

தனது பெற்றோர் நிலை குறித்து நபிகளார் தெளிவாக விளக்கிய பின் இதில் கருத்து வேறுபாடு கொள்வதில் எவ்வித நியாயமுமில்லை.