Tamil Bayan Points

08) ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 27, 2022 by

08) ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் தானியேல் என்றொரு ஆகமம் உள்ளது. அந்த ஆகமத்தில் ஒரு முன்னறிவிப்பு காணப்படுகிறது. அது நபிகள் நாயகத்தின் வருகையையும் இஸ்லாமிய எழுச்சியையும் முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமைந்துள்ளது அதன் விபரம் வருமாறு:

”நெபு காத்நேச்சர்” என்ற அரசன் இருந்தான். அவன் ஒரு கனவு கண்டான். அதன் விளக்கம் அவனுக்குப் புரியவில்லை. மந்திரவாதிகள், குறி சொல்லுகிறவர், சூனியக்காரரையெல்லாம் அழைத்து கனவுக்கு விளக்கம் கேட்டான். ”விளக்கம்” என்ற பெயரில் எதையாவது உளறிவிடக் கூடாது என்பதற்காக தனது கனவை அவன் யாரிடமும் கூறவில்லை.

கனவுக்கு விளக்கம் கூறக் கூடியவர்கள் நான் கண்ட கனவையும் ஊகித்துக் கூறிவிட்டு அதன் பிறகு விளக்கம் கூற வேண்டும் என்று அவன் கூறினான். யாராலும் கூற முடியவில்லை. இதனால் மந்திரவாதிகள், குறி சொல்பவர், சூனியக்காரர் அனைவரையும் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டான்.

இந்தக் கால கட்டத்தில் தானியேல் எனும் தீர்க்கதரிசி வாழ்ந்தார். அவர் அரசரின் கனவையும் அதற்கான விளக்கத்தையும் தன்னால் கூற முடியும் என்றும் அதற்குச் சிறிது அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த விபரங்கள் தானியேல் எனும் ஆகமம் 2:1 முதல் 2:15 வரை உள்ள வசனங்களில் விரிவாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு நடந்தது தான் நமது ஆய்வுக்குரியது. அதை மட்டும் பார்ப்போம்.

அதன் பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட அரியோகினிடம் சென்று, பாபிலோனின் ஞானிகளை அழிக்க வேண்டாம், என்னை ராஜாவின் சமூகத்திற்கு அழைத்துக் கொண்டு போ, ராஜாவுக்குச் சொப்பனத்தின் பொருளைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.  அப்பொழுது அரியோகு விரைவாகத் தானியேலை ராஜ சந்ததிக்கு அழைத்துப் போய், சிறைபட்டு வந்த யுதேயா தேசத்தாரில் ஒருவனைக் கண்டுபிடித்தேன்.

அவன் ராஜாவுக்கு பொருளைத் தெரிவிப்பான் என்று சொன்னான். ராஜா பேல் தாஷாத்சாரென்னும் பேர் கொண்ட தானியேலைப் பார்த்து, நான் கண்ட சொப்பனத்தையும் அதன் பொருளையும் நீ எனக்கு அறிவிப்பாயாக என்று கேட்க, தானியேல் ராஜாவுக்கு மறுமொழியாக, ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்கு தெரிவிக்க ஞானிகளாலும், குறி சொல்லுகிறவர்களாலும், மந்திரவாதிகளாலும், ஜோசியராலும் முடியாது.

பரலோகத்திலிருக்கிற கடவுளோ மறை பொருட்களை வெளிப்படுத்துகிறவர், வரும் நாட்களில் சம்பவிக்கப்போவதை ராஜாவாகிற நெபுக்காத் நேச்சருக்கு அறிவித்திருக்கிறார்.

உமது சொப்பனமும், உமது படுக்கையின் மேல் நீ கண்ட தரிசனங்களும் இவைகளே, ராஜாவே, உமது படுக்கையின் மேல் நீர் படுத்திருக்கையில் இனிமேல் சம்பவிப்பது என்னவென்று நினைத்துக் கொண்டிருந்தீர், அப்பொழுது மறை பொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப் போகிறது இன்னதென்று உமக்கு அறிவித்தார் நான் உயிரோடிருக்கிற எல்லாரைப் பார்க்கிலும் அதிக ஞானமுடையவன் என்பதினாலல்ல, சொர்ப்பனத்தின் பொருள் ராஜாவுக்குத் தெரிய வேண்டுமென்றும், உமது இருதயத்தின் நினைவுகளை நீ்ர் அறிய வேண்டுமென்றும் இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

ராஜாவே நீர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு பெரிய சிலை காணப்பட்டது. அந்த சிலை மிகுந்த உயரமும் மகா பிரகாசமுமுள்ளதாய் உமக்கு எதிரே நின்றது, அதன் தோற்றம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசம்பொன், அதன் மார்பும் அதன் புயங்களும் வெள்ளி, அதன் வயிறும் அதன் இடுப்பும் வெண்கலம், அதன் கால்கள் இரும்பு, அதன் பாதங்கள் பாதி இரும்பு, பாதி களிமண், நீர் பார்த்துக் கொண்டிருந்த போது, கை படாமலே ஒர கல் பெயர்ந்து உருண்டு வந்தது, அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப் போட்டது.

அக்கணமே அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் நொறுக்குண்டு கோடைகாலத்தில் போரடிக்கின்ற களத்திலிருந்து பறக்கும் பதர் போலாயின. காற்று அவைகளை அடித்துக் கொண்டு போகவே, அவை போன இடம் தெரியாமற் போயின, சிலையை மோதிய கல்லோவெனில் ஒரு பெரிய மலையாகிப் பூமியனைத்தையும் நிறப்பிற்று, சொர்ப்பனம் இதுவே. அதன் பொருளை ராஜாவுக்குத் தெரிவிப்போம்.

ராஜாவே, நீர் ராஜாதி ராஜா, அரசாட்சி, பராக்கிரமம், வல்லமை மகிமை இவற்றை பரலோகத்தின் கடவுள் உமக்கு அருளினார். எவ்விடங்களிலுமுள்ள மனிதரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக் கொடுத்தார். அவைகளையெல்லாம் நீரே ஆளும் படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

உமக்குப் பிறகு உமது ராஜ்யத்திலும் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும். பின்பு வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். அது பூமியனைத்தையும் ஆண்டு கொள்ளும். நாலாவது ராஜ்யம் ஒன்று எழும்பும், அது இரும்பைப் போன்றது, இரும்பு எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிப் போடுவதினால் அது பலமுள்ளது. இரும்பு அழித்துப் போடுகிறது போல இது அவற்றையெல்லாம் உடைத்து அழித்துவிடும்.

பாதங்களும், கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, நீர் இப்படிக் கண்டது பிரிவுள்ள ராஜ்யம் என்பதைக் குறிக்கும். ஆகிலும் இரும்பின் பலத்தில் கொஞ்சம் அதிலே இருக்கும், களிமண்ணோடே இரும்பு கலந்திருக்கக் கண்டீரே, கால் விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்த படியே அந்த ராஜ்யம் பலமும் பல வீனமுமாயிருக்கும், இரும்பு களிமண்ணோடே, கலந்திருக்க நீர் கண்டபடியே, அவர்கள் மற்ற ஜாதிகளோடே சம்பந்தங்கலப்பார்கள், ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலவாதது போல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்வதில்லை. அந்த ராஜாக்களின் நாட்களில், பரலோகத்தின் கடவுள் என்றென்றும், அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறெ ஜனத்துக்கு விடப்படுவதில்லை.

அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்து விடும். தானே என்றும் நிலைத்திருக்கும். ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டுவந்து இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியயும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகத்தான கடவுள் ராஜாவுக்கு அறிவித்திருக்கிறார், சொர்ப்பனம் நிச்சயம், அதன் அர்த்தம் உண்மை என்று சொன்னான்.

(தானியேல் 2:16-45)

நெபுகாத் நேச்சரின் கனவின் விளக்கம் யாரைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன் அவர் எந்தப் பகுதியை ஆண்டு வந்தார் என்பதை அறிந்து கொள்வோம்.

பாபிலோன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இராக், ஈரான் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். எனவே இவர் கண்ட கனவு இராக், ஈரான் ஆட்சி பற்றிய முன்னறிவிப்பாகவே அமைந்துள்ளது.

அப்பகுதியில் நெபுகாத் நேச்சர், அவரைத் தொடர்ந்து அவரது மகன் பெல்ஷாத் சார், அதைத் தொடர்ந்து கி.மு,536 ல் கியானியர், மாவீரர் அலெக்சாண்டர் என சில ஆட்சிகள் தோன்றின.

ஆயினும் எந்த ஆட்சியும் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒரே ஒரு ஆட்சிதான் உலகம் உள்ளளவும் அங்கே நீடித்து நிலைத்து நிற்கும். எல்லா ராஜ்யங்களையும் அடித்து நொறுக்கும். அதுவும் பரலோகத்தின் கடவுள் அந்த ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார் என்ற வாசகம் ஊன்றிக் கவனிக்கத்தக்கது.

நபிகள் நாயகம் (ஸல்) உருவாக்கிய ஆட்சி மன்னராட்சியாக இருக்கவில்லை. கடவுளின் ஆட்சி என்றே அதைக் குறிப்பிட்டார்கள். கடவுளின் சட்டங்கள் தான் ஆட்சி செய்யும் என்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய அந்த ஆட்சி இராக், ஈரானைக் கைப்பற்றியது முதல் இன்று வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் ஆட்சியே நடக்கிறது.

எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் ஆட்சியை ஏற்படுத்துவார் என்பதையும் அவர் கடவுளின் திருத்தூதர் என்பதையும் சந்தேகமற முன்னறிவிக்கின்றது.