Tamil Bayan Points

08) உண்மையை பேசுவோம்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

உண்மையை பேசுவோம்

நம்முடைய நாவின் மூலம் உண்மையை மட்டுமே பேசவேண்டும். உண்மைக்குப் புறம்பானதை ஒரு போதிலும் பேசிவிடக்கூடாது. நாம் ஒரு விஷயத்தை பேச வாயெடுப்பதற்கு முன் அது உண்மைதானா? என்று உறுதியாக அறிந்த பிறகே பேச வேண்டும். ஒரு மனிதன் உண்மையை மட்டுமே பேசி பழகினால் அவனிடம் உள்ள தீமைகள் வெகு சீக்கிரத்தில் காணமல் போய்விடும் சொர்க்கத்திற்குரியவர்களாக நம்மை மாற்றுவதற்கு உண்மை ஓர் பலமான ஆயுதம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார், அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் வாய்மையாளர் (சித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்

அறிவிப்பாளர் : அப்துல்லா பின் மஸ்டீத் ரலி

நூல் : முஸ்லிம்-5083

உண்மை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் என்று கூறிவிட்டு தொடர்ந்து உண்மை பேசிவந்தால் இறைவனிடம் சித்தீக் அதாவது உண்மையாளர் என்ற நற்பெயரை எடுத்துவிடலாம் என நபிகளார் கூறுகின்றார்கள். இறைவனிடம் உண்மையாளர் என்ற நற்பெயரை எடுப்பது சாதாரணமான பட்டமா? இறைவனே தரும் பட்டமிது மற்ற யார் தரும் பட்டத்தை விடவும் இறைவன் தரும் பட்டம் மிக சிறந்தது.

இதை பெறுவதற்கு நாம் முயற்சி எடுத்ததாக தெரியவில்லை நம்மில் பலர் சர்வ சாதாரணமாய் பொய் பேசுவதையும் எதற்கெடுத்தாலும் அண்டப்புளுகு புளுகுவதையும் காணலாம் இன்னும் சிலர் தாங்கள் பேசுவது பொய் என்று தெரிந்த பிறகும் அல்லாஹ்வை அதற்கு சாட்சியாக்குவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சொல்வது உண்மை என்று துணிந்து இறைவனை சாட்சியாக்கி பொய் மூட்டையை அவிழ்த்து விடுவார்கள்.

(இது போன்று பொய் பேசுபவருக்கு கிடைக்கும் தண்டனைப்பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது) நாம் உண்மை பேசுவதையே இறைவன் விரும்புகின்றான். ஆகவே தான் உண்மையாளர்களாக ஆகிவிடுங்கள் என்று உண்மை பேசுவதின் பக்கம் அழைப்பு விடுக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள் உண்மையாளர்களுடன் ஆகுங்கள்

(அல்குர்ஆன்:9:119.) 

தன்னைச் சார்ந்த தோழர்கள் கூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உண்மையை தவிர்த்து வேறதனையும் பேசிவிடக்கூடாது என்பதில் நபிகளார் மிகுந்த அக்கறை காட்டினார்கள் அதன் காரணமாகவே தன்னிடம் எடுக்கப்படும் பைஅத் எனும் உறுதிமொழியில் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவோம் என்ற உறுதிமொழியையும் சேர்த்து ஸஹாபாக்களிடம் வாங்கினார்கள்.

இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும் அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும் நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதி மொழி அளித்தோம்

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல் : முஸ்லீம்-3754