Tamil Bayan Points

08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on October 1, 2022 by Trichy Farook

08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது என்று கருதினார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ
خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ، فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالُوا: أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَقَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ: مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا»، فَقَالَ أُسَيْدُ بْنُ الحُضَيْرِ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، قَالَتْ: فَبَعَثْنَا البَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ، فَأَصَبْنَا العِقْدَ تَحْتَهُ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாதுல் ஜைஷ் என்னும் இடத்தை வந்தடைந்த போது எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம்.

நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததைப் நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்து விட்டார்கள். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர்.

அபூபக்ர் (ரலி) (என்னருகே) வந்த போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையை என் மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்து விட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் இல்லை எனக் (கடிந்து) கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு தனது கையால் என் இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் தலை என் மடி மீது இருந்த காரணத்தினால் தான் நான் அசையாது இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மமுடைய வசனத்தை இறக்கினான். எல்லோரும் தயம்மும் செய்து கொண்டனர்.

நூல் : புகாரி-334 

، فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ، فَجَاءَتْ زَيْنَبُ، فَمَدَّ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتْ: هَذِهِ زَيْنَبُ، فَكَفَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَتَقَاوَلَتَا حَتَّى اسْتَخَبَتَا، وَأُقِيمَتِ الصَّلَاةُ، فَمَرَّ أَبُو بَكْرٍ عَلَى ذَلِكَ، فَسَمِعَ أَصْوَاتَهُمَا، فَقَالَ: اخْرُجْ يَا رَسُولَ اللهِ إِلَى الصَّلَاةِ، وَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ عَائِشَةُ: الْآنَ يَقْضِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، فَيَجِيءُ أَبُو بَكْرٍ فَيَفْعَلُ بِي وَيَفْعَلُ، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، أَتَاهَا أَبُو بَكْرٍ، فَقَالَ لَهَا قَوْلًا شَدِيدًا، وَقَالَ: أَتَصْنَعِينَ هَذَا

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஆயிஷா (ரலி)யும் ஸைனப் (ரலி)யும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டும் கூட அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே அவர்களின் வாயில் மண்ணைத் தூவிவிட்டு நீங்கள் தொழச் செல்லுங்கள் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்று விட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் இப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (என் தந்தை) அபூபக்ர் வருவார். என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள் என்று கூறினார்கள். (அதைப் போன்றே) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்து கடுஞ் சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும் இப்படியா நீ நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள்.

நூல் : முஸ்லிம்-2898 

நண்பர்களாக நெருங்கி பழகினாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளும் போது குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு நட்பில் விரிசல் ஏற்படுகிறது. தம் மகள் என்பதால் அவளுக்கு ஆதரவாகப் பேசத்தான் எல்லாப் பெற்றோர்களும் முயற்சிப்பார்கள்.

ஆனால் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மருமகனார் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது நபி (ஸல்) அவர்களின் உண்மை நிலையை அறிந்து தம் மகளை அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர்கள் இருக்க பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க நான் எதையேனும் சொல்லப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதரே என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க நான் அவரை நோக்கி எழுந்து அவரின் கழுத்தில் அடித்து விட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி அவர்கள் கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா? என்று அவ்விருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒரு போதும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று கூறினர்.

நூல் : முஸ்லிம்-2946 

நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறுவதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி வேண்டினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் உரத்த சப்தத்தைச் செவுயுற்றார்கள். அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சப்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி ஆயிஷாவை அடிப்பதற்காக அவர்களை அபூபக்ர் பிடிக்கலானார்.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்ர் கோபமுற்றவராக வெளியே சென்றார். அபூபக்ர் வெளியே சென்ற பிறகு நான் அந்த மனிதரிடமிருந்து எப்படி உன்னைக் காப்பாற்றினேன் என்பதை நீ கவனித்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி)யிடம்) கூறினார்கள். அபூபக்ர் பல நாட்கள் (ஆயிஷாவின் வீட்டிற்கு வராமல்) இருந்தார்கள்.

பின்பு (ஒரு முறை) அனுமதி கேட்டு (வீட்டிற்கு வந்த போது) நபி (ஸல்) அவர்களையும் ஆயிஷா (ரலி) அவர்களையும் இணக்கமாகிக் கொண்டவர்களாகக் காணும் போது உங்களுடைய சண்டையில் என்னைக் கலந்து கொள்ளச் செய்தது போல் உங்கள் இணக்கத்திலும் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சேர்த்துக் கொண்டோம். சேர்த்துக் கொண்டோம் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத்-4999 (4347)