Tamil Bayan Points

07) பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

Last Updated on February 2, 2023 by

பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது

மணக்க விரும்பும் ஆணிடம் பெண் எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்கலாம். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ளது. இந்த உரிமைக்கு பங்கம் வரும் திருமண முறைகளை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இரண்டு நபர்களில் ஒவ்வொருவருக்கும் சகோதரி உள்ளது.

இவர்களில் ஒருவர் மற்றவரின் சகோதரியை திருமணம் செய்யும் முடிவுக்கு வருகின்றனர். இப்போது இருவரும் மஹர் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் என் சகோதரிக்கு நீ மஹர் தர வேண்டியதில்லை. உன் சகோதரிக்கு நான் மஹர் தரமாட்டேன் என்று பேசிக்கொள்ளும் முறைக்கு ஷிகார் என்று அரபியில் சொல்லப்படுகின்றது. இந்தத் திருமண முறையை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الشِّغَارِ» قُلْتُ لِنَافِعٍ: مَا الشِّغَارُ؟
قَالَ: «يَنْكِحُ ابْنَةَ الرَّجُلِ وَيُنْكِحُهُ ابْنَتَهُ بِغَيْرِ صَدَاقٍ، وَيَنْكِحُ أُخْتَ الرَّجُلِ وَيُنْكِحُهُ أُخْتَهُ بِغَيْرِ صَدَاقٍ»

உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார் என்று என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிடம், ‘ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?’ என்று கேட்டேன்.

அவர்கள், ‘ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி-6960

ஷிகார் என்ற இந்த திருமண முறையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்றனர். இது தவறில்லை என்பது போல் தோன்றினாலும் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள ஒரு உரிமை இங்கு பரிக்கப்படுவதாலே இதை நபியவர்கள் தடைசெய்கிறார்கள். மஹர் எவ்வளவு வாங்க வேண்டும்? வாங்கலாமா? அல்லது தள்ளுபடி செய்யலாமா? என்று முடிவு செய்யும் அதிகாரம் பெண்ணுக்கு மாத்திரமே உள்ளது.

இந்த உரிமை ஷிகார் என்ற திருமண முறையில் இல்லை என்பதால் இஸ்லாம் இதை தடைசெய்கின்றது. மஹர் விசயத்தில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமை நம் சமூகப் பெண்களுக்கு கிடைப்பதில்லை. வரதட்சணைக் கொடுமையால் வதங்கிய பெண்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை மஹர் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நம்மிடம் வரதட்சணை கேட்காமல் இருந்தாலே பெரும் பாக்கியம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

எனவே வரதட்சணைக் கொடுமை பெண்களை பயமுறுத்தி அவர்களின் உரிமையை கேட்டுப் பெறவிடாமல் தடுக்கின்றது.

மனைவி ஹலால் இல்லை

அந்நிய ஆணும் அந்நியப் பெண்ணும் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் மூலம் அவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு ஹலால் ஆகின்றார்கள். இந்தத் திருமணத்தில் மஹர் என்ற மணக்கொடையை ஆண் பெண்ணுக்கு வழங்கினாலே அவனுக்கு அவள் ஆகுமானவள்.

வியாபாரியிடமிருந்து ஒரு பொருளை வாங்கும்போது அந்தப் பொருளுக்குரிய தொகையை கொடுத்து வாங்கினால் தான் அந்த பொருள் நமக்கு சொந்தமாகும். பணம் கொடுக்காமல் பொருளையும் வாங்கிவிட்டு பொருளைக் கொடுத்தவனிடத்தில் பணத்தையும் கேட்பது எவ்வளவு பெரிய அநியாயம்? இதை விட மிகப் பெரிய கொள்ளை ஏதுமில்லை.

வரதட்சணை வாங்குவோர் இது போன்ற கொள்ளையடிக்கும் வேலையை செய்து தான் திருமண வாழ்வை துவங்குகின்றனர். எனவே இவர்கள் மனைவியிடம் வாங்கியதை திருப்பிக்கொடுத்து மஹரையும் முறையாக ஒப்படைக்காதவரை மனைவி இவர்களுக்கு ஹலால் ஆகமாட்டாள். பெண்ணுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் அந்தப் பெண் ஆணுக்கு ஆகுமானவள் என்பதை பின்வரும் குர்ஆன் வசனமும் நபிமொழியும் கூறுகின்றது.

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰ تَيْتُمُوْهُنَّ

அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை.

அல்குர்ஆன் (60 : 10)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الفُرُوجَ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் “மஹ்ர்’ தான். இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (2721)