Tamil Bayan Points

07) பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 26, 2022 by

07) பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் உபாகமம் என்ற ஆகமம் உள்ளது. இந்த ஆகமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) குறித்த மற்றொரு முன்னறிவிப்பு காணப்படுகிறது.

மோசேவின் வேதமான உபாகமம் 33:1,2 ஆகிய இரு வசனங்களில் இந்த முன்னறிவிப்பைக் காணலாம். கடவுளின் மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துக் கூறிய ஆசீர்வாதமாவது,

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,

சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,

பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார்.

அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.

(உபகாமம் 33:1,2)

கடவுளாகிய கர்த்தர் தனது வேத வெளிப்பாட்டை தீர்க்கதரிசிகளுக்கு வழங்கிய இடங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

”கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி” என்பது சீனாய் மலையைக் குறிப்பிடுகிறது. சீனாய் மலையில் தான் மோசேவுக்கு வேதம் அருளப்பட்டது. கர்த்தரின் வழிகாட்டுதல் சீனாய் மலையில் வழங்கப்பட்டதால் ”கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி” எனக் கூறப்படுகிறது. கர்த்தர் எழுந்தருளி என்பதன் பொருள் என்ன என்பதை அறிய முடிகிறது.

”சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்” என்பதன் பொருள் என்ன? மோசேவுக்கு அருளப்பட்ட இவ்வேதத்தில் ”சேயீரிலிருந்த அவர்களுக்கு உதயமானார் எனக் கூறப்படுகிறது. இது சேயீரிலிருந்து ஒரு தீர்க்கதரிசிக்கு வேதம் அருளப்பட்டதைக் குறிக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மோசேவுக்கு அருளப்பட்ட இந்த முன்னறிவிப்பு இயேசுவின் வருகை மூலம் நிறைவேறியது.

”பாரான் மலையிலிருந்து பிரகாரமாய்த் தோன்றி” என்பதன் பொருள் என்ன?

அதை நாம் அறிந்திட பாரான் மலை எதுவென நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பாரான் மலை என்பது மோசே வாழ்ந்த பகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும்.

இதை நாம் சொல்லவில்லை. பைபிளே கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்ரவேல் சந்ததயில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் கிறித்தவர்களும் யூதர்களும் அறிவார்கள். இஸ்மாயீல் என்னும் இஸ்மவேல் மக்கா நகரில் தான் வளர்ந்தார், வாழ்ந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஸம்ஸம் எனும் நீரூற்று இஸ்மவேல் குழந்தையாக இருந்த போது அவரது தாகம் தனிப்பதற்காக கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அந்த நீரூற்று இன்று வரை மக்காவில் இருந்து வருகிறது.

இஸ்மவேல் எந்தப் பகுதியில் வளர்ந்தார், வாழ்ந்தார் என பைபிளும் கூறுகிறது.

கடவுளோ ஆபிரகாமைப் பார்த்து அந்தப் பிள்ளையின் பொருட்டு உன் அடிமைப் பெண்ணின் பொருட்டும் நீ வருத்தப்பட வேண்டாம் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றிற்கும் செவிகொடு, ஈசாக் மகனிடமே உன் சந்ததி விளங்கும். அடிமைப் பெண்ணின் மகனையும் ஒர ஜனமாக்குவேன். அவனும் உன் சந்ததியே என்றார்.

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, ஆகாரமும் ஒரு துருத்தித் தண்ணீரும் எடுத்து ஆகாரிடம் கொடுத்து, அவள் தோளின் மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப்போய், பெயர்ஷெபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள்.

துருத்தியிலிருந்து தண்ணீர் செலவழியவே, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்ப்பேனோவென்று சொல்லி, அம்பு பாயும் தூரத்தில் போய், எதிரே உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.

கடவுள் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். கடவுளின் தூதனானவன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, ஆகாரே உனக்கு நேரிட்டதென்ன? பயப்படாதே. பிள்ளை இருக்கும் இடத்தில் கடவுள் அவன் சப்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து, அவனை உன் கையால் பிடித்துக் கொண்டு போ! அவனைப் பெரிய ஜனமாக்குவேன் என்றார். கடவுள் அவளுடைய கண்களைத் திறந்தார்.

திறக்கவே தண்ணீருள்ள ஒரு துரவை அவள் கண்டு, போய், துருத்தியில் தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுள் பிள்ளையோடிருந்தார். அவன் வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானான். பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ் செய்வித்தான்.

(ஆதியாகமம் 21:12-21)

இஸ்மவேல் பாரான் வனாந்தரத்தில் வசித்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்லாமிய வரலாறு மக்கா எனக் கூறுவதும், பைபிள் பாரான் எனக் கூறுவதும் ஒரே பகுதி தான். என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். இந்தப் பகுதியில் வாழ்ந்த இஸ்மவேலின் வழித்தோன்றல்களாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

மோசேயின் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பாரான் மலையிலிருந்து வேத வெளிப்பாடு யாருக்காவது கிடைத்ததா? என்றால் நபிகள் நாயகம் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,

சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,

பாரானில் தோன்றிய பிரகாசம் எது? அப்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் கர்த்தரின் தூதர் எனக் கூறியதில்லை. மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை பாரானின் மக்கள் அறியாமை இருளிலேயே மூழ்கியிருந்தனர்.

எனவே பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது நபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் தான் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை.