Tamil Bayan Points

06) போராட்ட நாயகர் பகதூர் ஷா

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

06) போராட்ட நாயகர் பகதூர் ஷா.

மொகலாயப் பேரரசின் கடைசிச் சக்கரவர்த்தி பகதூர் ஷா என்றழைக்கப்படும் முஹம்மது சிராஜீத்தீன் பகதூர் ஷா ஜஃபர். இவரது உதவியும் ஒத்துழைப்பும்தான் வீரர்களைப் போராட்ட களத்தை நோக்கி உந்தித் தள்ளியது.

புரட்சியைக் கையிலெடுத்த வங்கத்துப் படையணியில் இந்துக்களும் முஸ்லிம்களுமாக 1,39,807 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே பகதூர் ஷாவே தங்களுக்கு தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். (1857 எழுச்சி இர்ஃபான் ஹபீப் பக் 3, தமிழில் அ.குமரேசன் வெளியீடு பாரதி புத்தகாலயம் 2006)

ஆங்கிலேயர்கள் மீது சிப்பாய்களுக்கு இருந்த கோபத்தைவிட பகதூர் ஷாவுக்கு இருந்தது அதிகம். மாமன்னராக வாழ்ந்த ஒருவரை அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு ஒரு அடிமையைப் போல ஆக்கியிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். (R.C..மஜும்தார், H.C..ராய்சௌதுரி, K.தத்தா, தமிழில் A.பாண்டுரங்கன் இந்தியாவின் சிறப்பு வரலாறு மூன்றாம் பகுதி சென்னை 1978 பக்கம் 109)…

இதனால் மனம் உடைந்த பாதுஷா ஆங்கிலயரை எதிர்ப்பதற்குரிய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்தி ருந்தார். மறைமுகமாக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வந்தார்.

உலக அரங்கில் ஆங்கிலேயர்களை அழிக்கத் துடிக்கும் பல்வேறு நாடுகளுக்கு ஆதரவு கேட்டு தபால் எழுதினார். குறிப்பாக பாரசீகம் மற்றும் ரஷ்ய அரசுகளுக்கு உதவிகள் கேட்டு கடிதம் எழுதினார்.(Sir John Kaye, Edited by Colonel Malleson, Kayes and Malleson History of Indian Mutiny of 1857-8 Vol.2, 1906 p.30)

பல்வேறு சமஸ்தான அரசுகளிடமும் ஆங்கில ஆதிக்கத்தை முறியடிக்க கோரிக்கை வைத்தார். குறிப்பாக ஜெசால்பூர், கட்ச்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், இந்தூர், குவாலியர், பாட்டியாலா, ஜம்மு, பிகானிர், ஆலூர் ஜாஜர், பாலபக், பெரய்லி, ஆகிய சிற்றரசுகளுக்கு மடல் எழுதி புரட்சிக்கு ஒத்துழைப்புக் கோரினார்.(R.C. Majumdar, The Sepoy Mutiny and the Revolt of 1857, Calcutta 1957, pp.124-126

Sir C.Metcalfe Two Native Narratives of the Mutiny, West minister, 1898, pp. 219-220

A Royal letter from the superior

(இ.சு.பெ.இ.ப) பக். 122-125)

இந்தப் போர் ஏன்? எதற்கு? என்பதை தெளிவுபடுத்தும் ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக என்ன விலையும் கொடுக்கலாம். இந்தியாவை ஆளும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆகச் சிறந்த வெகுமதி சுதந்திரம். எப்பாடு பட்டாவது அதைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டவன் சாட்சியாக இங்கிருந்து ஆங்கிலேயர்அகற்றப்பட்ட பின் உங்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரிடம் எனது அரச அதிகாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விடுவேன் இது உறுதி என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.( காஸிம் ரிஸ்வி இந்தியாவின் சுதந்திர போரட்ட வீரர். பஹதூர் ஷா. புதுடில்லி 1983, பக்கம் 5, செ.திவான் (இ.சு.பெ.இ.ப) பக். 173,174)

பகதூர் ஷாவின் முயற்சிகள் வீண் போகவில்லை. புரட்சி துவங்கியதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. சிப்பாய்ப் புரட்சி தேசத்தின் பேரெழுச்சியாக மாறியது.

போராட்டத்தில் அவரது பங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் புரட்சி வென்றபோது, புரட்சியாளர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தனர்