Tamil Bayan Points

05) பாகப் பிரிவினையில் அநீதம்

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

Last Updated on February 2, 2023 by

பாகப் பிரிவினையில் அநீதம்

வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும். நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!

பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது. மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர்.

தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!

பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, உனக்கு திருமணம் செய்யும் போது அதிகமான பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதுவிட்டது. எனவே உனக்கு சொத்தில் எந்த பங்கும் இல்லை என்று பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள். ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள். இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வரதட்சணையை காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமை பரிக்கப்படுகின்றது. பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிவிட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 4:13,14)

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான். வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்க வேண்டுமா? என்று மக்களே சிந்தியுங்கள்.

ஆண் பெண்ணுக்கு கொடுப்பதே அல்லாஹ் இந்த உலகத்தில் ஏற்படுத்தியுள்ள பொது நியதியாகும். பெண்ணிடமிருந்து வாங்குவது மிருகம் கூட செய்யாத இழி செயலாகும். மஹர் என்று இஸ்லாம் கூறும் இந்த அழகிய செயல் நமது நாட்டிலும் ஆரம்பகாலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சமீபத்தில் சில வருடங்களாகத் தான் வரதட்சணைக் கொடுமை புற்றுநோய் போல் நம் நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ளது.

வரதட்சணை கேவலமான செயல்

பெண்ணுக்கு கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய ஆண் அந்த பெண்ணிடம் வாங்குவது கேவலமான செயலாகும். ஒரு பிச்சைக்காரன் உதவி கேட்டு வருகிறான். அவன் கையில் வைத்திருக்கும் பாத்திரத்தில் சில நாணயங்கள் கிடக்கின்றது. அவனுக்கு உதவி செய்ய வருவதாக ஒருவன் கூறிக்கொண்டு பிச்சைக்காரன் தட்டில் கிடக்கும் நாணயங்களை எடுத்துக்கொள்கிறான் என்றால் இவன் எவ்வளவு பெரிய கேவலத்தை தனக்கு ஏற்படுத்திக்கொள்கிறான்?

வரதட்சணை வாங்குவோரும் இதைத் தான் செய்கின்றனர். பெண்ணுக்கு கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய ஆண் அந்த பெண்ணிடமிருந்து வாங்குகிறான் என்றால் மேலே நாம் சொன்ன உதாரணத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட கேவலமான செயலை சமுதாயத்தில் பலர் பெருமையாக பேசிக்கொள்கின்றனர். திருமணம் ஆன மாப்பிள்ளையைப் பார்த்தால் பெண்வீட்டாரிடம் எவ்வளவு வாங்கினாய்? என்று வெட்கமில்லாமல் கேட்கின்றனர். வரதட்சணை வாங்கியவனும் மானமில்லாமல் உன்னை விட அதிகமாகவே வரதட்சணை வாங்கி இருக்கின்றேன் என்று பெருமையாக கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணம் செய்த ஒரு நபித்தோழரை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது முதலில் நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம் நீ மணப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் பேரீச்சம் பழக் கொட்டை அளவு தங்கத்தை மஹராக கொடுத்தேன் என்று கூறினார். இவ்வாறு திருமணம் செய்வது தான் ஆண்மகனுக்கு கண்ணியமாகும்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ المَدِينَةَ فَآخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، وَكَانَ سَعْدٌ ذَا غِنًى، فَقَالَ لِعَبْدِ الرَّحْمَنِ: أُقَاسِمُكَ مَالِي نِصْفَيْنِ وَأُزَوِّجُكَ، قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلُّونِي عَلَى السُّوقِ، فَمَا رَجَعَ حَتَّى اسْتَفْضَلَ أَقِطًا وَسَمْنًا، فَأَتَى بِهِ أَهْلَ مَنْزِلِهِ، فَمَكَثْنَا يَسِيرًا أَوْ مَا شَاءَ اللَّهُ، فَجَاءَ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْيَمْ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «مَا سُقْتَ إِلَيْهَا؟» قَالَ: نَوَاةً مِنْ ذَهَبٍ، – أَوْ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ – قَالَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், ‘என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!’ எனக் கூறினார்.

அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), ‘உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!’ எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார்.

அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விசேஷம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!’ என்றார். நபி(ஸல்) ‘அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?’ எனக் கேட்டார்கள். ‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!’ என அவர் பதில் கூறினார். அதற்கு ‘ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)  

நூல் : புகாரி-2049