Tamil Bayan Points

05) கற்சிலை கடவுள் இல்லை!

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

கற்சிலையும் கடவுள் இல்லை!

பொற்சிலையும் கடவுள் இல்லை!

ஒரு கடவுள் தான் இருக்க முடியும். சரி! அது ஒரு சிலையாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்பவன் தன்னையும் தற்காத்துக் கொண்டு மற்றவர்களையும் காக்க வேண்டும். சிலைகளுக்கு அந்த சக்தி அறவே கிடையாது. சிலைத் திருட்டு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தன்னைத் திருடுபவரைத் தடுக்க முடியாத சிலை எப்படிக் கடவுளாக முடியும்? சிலையைக் காப்பதற்கும் கடத்தப்பட்ட சிலையை மீட்பதற்கும் காவல் துறை தான் வரவேண்டியதிருக்கின்றது என்றால் இந்தச் சிலை எப்படிக் கடவுளாக முடியும்? மனித குலத்தை நோக்கி இதை இந்தக் குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(திருக்குர்ஆன் : 22:73.) 

ஈயைப் படைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஈ பறித்துக் கொள்கின்ற எள்முனை அளவிலான பொருளைக் கூட தடுக்க முடியாதவை, மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விட்டும் எப்படித் தடுக்கும் என்று சிந்திக்கச் சொல்கின்றது.

இது தொடர்பாகத் திருக்குர்ஆன், சிலை வணக்கத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவு நாயகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம். “நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.

“நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். “நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

“அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர்.

“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது.அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

(திருக்குர்ஆன் : 21: 51–67.) 

சிலைகளுக்கு சக்தியில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்ற சுவையான வரலாறாகும். சிலை மட்டுமல்ல சிலையைப் போன்ற வடிக்கப்படுகின்ற எந்தப் பொருளுக்கும் கற்பனைப் படங்களுக்கும் எவ்வித சக்தியும் இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

சிலைகளுக்கு ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்பியதன் விளைவு மக்கள் கல், மண் போன்றவற்றிலிருந்து சிலைகளை வடிக்கின்றனர். வசதி உள்ளவர்கள் தங்கத்திலிருந்தும் வெண்கலத்திலிருந்தும் மொத்தத்தில் ஐம்பொன்னிலிருந்தும் சிலைகளை வடிக்கின்றனர். எந்த மூலத்திலிருந்து சிலைகள் வடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு எந்த சக்தியும் கிடையாது என்பதைத் திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.