Tamil Bayan Points

05) இரண்டாவது வசனத்தின் விளக்கம்.

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

இரண்டாவது வசனத்தின் விளக்கம்

2. ஞானமிக்க குர் ஆன் மீது ஆணையாக!

யாசீன் சூராவின் இரண்டாவது வசனத்தில் குர்ஆன் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இதேபோன்று இறைவன் தனது படைப்புகளில் பலவற்றின் மீது சத்தியம் செய்வதை திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம்.

1. நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக

(திருக்குர்ஆன்:68:1.) 

1. காலத்தின் மீது சத்தியமாக!
2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:103:1,2.)

1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
5. வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
7. உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

(திருக்குர்ஆன்:91:1 முதல் 8.)

அல்லாஹ்வைத்தவிர மற்றவற்றின் மீது சத்தியம் செய்யலாமா?

அல்லாஹ்வைத் தவிர மற்ற எதன் மீதும் எதற்காகவும் சத்தியம் செய்யக்கூடாது என்பது இஸ்லாத்தில் உள்ள விதியாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ‘சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும்’

இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2679

மக்காவில் உள்ள குறைஷிகள் தங்கள் தந்தையின் மீது சத்தியம் செய்து வந்தனர். இஸ்லாம் அதை தடை செய்தது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதவாது:

“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ என்று சொன்னார்கள்.

நூல் புகாரி : 3836

இதேபோன்று நம் காலத்தில் உள்ளவர்களும் குர்ஆன் மீது சத்தியம், தாய் தந்தையின் மீது சத்தியம் என்றும் கூறுகின்றனர். இதுவும் தவறாகும்.

அல்லாஹ்வைத்தவிர வேறு பொருட்களின் மீது சத்தியம் செய்வது தவறு என்றிருக்கும் போது குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்வது சரியானதா? என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

நாம் பிறபொருட்களின் மீது சத்தியம் செய்யக்கூடாது என்பது அல்லாஹ் நமக்கு விதித்த கட்டளையாகும். உதாரணமாக அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று ஓர் அரசாங்கம் மக்களுக்கு கட்டளையிட்டால் மக்கள் அதை பின்பற்ற வேண்டும். ஆனால் பாதுகாப்பு போன்ற ஏதேனும் தேவைகளுக்காக அரசாங்க அதிகாரிகள் காட்டுக்குள் சென்றால் அதை கட்டளையை மீறியதாக கருதமாட்டோம்.

ஏனெனில் மக்களுக்கு விதிக்கப்பட்ட சட்டம் மக்களுக்கு மட்டும்தான். அரசாங்கத்திற்கு பொருந்தாது. அதேபோன்று தான் அல்லாஹ் மனிதர்களுக்கு விதித்த சட்டம் மனிதர்களை மட்டும்தான் கட்டுப்படுத்துமே தவிர சட்டம் விதித்த அல்லாஹ்வை கட்டுப்படுத்தாது.

பொருளின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக!

மனிதர்களுக்கு மத்தியில் ஏதேனும் பிரச்சினை எனும்போது தன் தரப்பு வாதத்தை உண்மையென நிரூபிப்பதற்காக இறைவன் மீது சத்தியம் செய்வார்கள் . இப்பிரச்சனையின் உண்மைத்தன்மையை அல்லாஹ் அறிவான் என்பது இதன் பொருள் . இத்தகைய நிலை அல்லாஹ்வுக்கு இல்லை.

சந்திரன் , சூரியன் போன்ற குறிப்பிட்ட பொருட்களின் மீது அல்லாஹ் சத்தியம் செய்வதற்கு காரணம் அப்பொருட்களின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும் . சூரியனின் மீது இறைவன் சத்தியம் செய்தால் அதைப்பற்றி மனிதர்களை சிந்திக்கத்தூண்டுவதாக புரிந்து கொள்ளலாம் . எனவே இதை முரணாக விளங்கத் தேவையில்லை.

ஞானம் நிறைந்த குர்ஆன்

மேலும் இரண்டாவது வசனத்தில் குர்ஆனை ஞானம் நிறைந்த குர்ஆன் என்று இறைவன் சிறப்பித்து கூறுகிறான் இதே கருத்தை பிற வசனங்களிலும் இறைவன் கூறியுள்ளான்.

பார்க்க அல்குர்ஆன் 3 58 , 10 1, 31 2.

குர்ஆனை ஞானம் நிறைந்தது என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு.

  • குர்ஆனில் எவ்வித குறையும் இல்லை

அல்லாஹ்வுக்கு ஞானமிக்கவன் என்று சொல்லப்படுவது போன்று அவன் அளித்த குர்ஆனுக்கு ஞானமிக்க குர்ஆன் என்று சொல்லப்படுகிறது. எவ்வித குறையுமின்றி அறிவு ஞானம் நிரம்பியதாக திருக்குர்ஆன் அமைந்திருப்பதால் இதற்கு இவ்வாறு கூறப்படுகிறது.

  • ஞானம் நிறைந்த சட்டங்கள்

திருக்குர்ஆன் மனித குலத்திற்கு வகுத்தளித்த சட்டதிட்டங்கள் வாயிலாகவும் ஞானம் நிறைந்ததாக திருக்குர்ஆன் மிளிர்கிறது.

நம் இந்திய நாட்டில் கூட சிலர் குர் ஆன் கூறும் சட்டங்களை தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என விமர்சிப்பார்கள். ஆனால் இதற்கு மாற்றாக ( அவர்களின் கருத்துப்படியே ) வேறு சிறந்த சட்டத்தை கூறுவார்களா ? என்றால் இல்லை.

உதாரணமாக திருடினால் கையை வெட்டவேண்டும் என்று குர் ஆன் சொல்லும் சட்டங்களை கடுமையானது என விமர்சிப்பவர்கள் கூறும் சட்டங்கள் திருட்டை வளர்க்கத்தான் செய்கிறது. ஒருவன் திருடினால் அவனை சிறையில் அடைக்கிறார்கள். பிறகு மக்கள் வரிப்பணத்தில் வாரம் ஒரு சினிமா, நேரம் தவறாமல் வேளைக்கு சோறு என்று மிகவும் ராஜ (?) மரியாதையுடன் வைத்துள்ளார்கள். இதனால் சிறைச்சாலைக்கு மாமியார் வீடு ( ? ) என்று ஏளனமாக பெயர் வைக்கும் அளவுக்குத்தான் சிறை தண்டனையின் நிலையுள்ளது.

மேலும் திருட்டை தடுப்பதற்காக பேருந்து நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் சில திருடர்களுடைய புகைப்படங்களை ஒட்டுகிறார்கள். முன்பின் அறியாத புகைப்படங்களை அனைவராலும் ஞாபகத்தில் வைக்கமுடியுமா? இதன் மூலம் திருட்டை ஒழிப்பதில் நன்மை உண்டா? என்று கூட யோசிக்காமல் இவ்வாறு செய்கின்றனர். இதுபோன்று இவர்கள் கூறும் சட்டங்கள் மூலம் திருட்டு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர ஒழியாது என்பதற்கு நாளுக்கு நாள் திருட்டு அதிகரிப்பதே மறுக்கவியலாத சான்றாகும்.

பெண்கள் கற்பழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற குறிப்பிட்ட அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

ஆபத்தான சூழ்நிலையில் மொபைலை அவர்கள் லேசாக அசைத்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று அப்பெண் இருக்கும் இடத்துக்கு காவலர்கள் விரைந்துவந்து அப்பெண்ணை காப்பாற்றுவார்கள் என்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்.

அனைத்து பெண்களிடமும் மொபைல் உள்ளதா? மொபைல் இல்லாத பெண்களின் கதி என்ன? கற்பழிப்பவன் காவல்துறையினர் வரும்வரை காத்திருப்பானா? என்பதைக்கூட யோசிக்காமல் இது போன்ற நுனிப்புல் மேயும் செயல்களை முன்னெடுக்கிறார்கள்.

இத்தகைய அரைவேக்காடுத்தனங்களை அரங்கேற்றாமல் திருடினால் திருடியவனின் கை வெட்டப்பட வேண்டும், விபச்சாரம் செய்பவர்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால் கசையடி, திருமணமாகியிருந்தால் மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.

( பார்க்க அல்குர்ஆன் 5 38, 24 2, முஸ்லிம் 3493 )

இவ்வாறு செய்தால் குற்றவாளிகள் தங்கள் உயிர் மீது பயம் கொள்வார்கள். குற்றங்கள் வெகுவாக குறையும். இதற்கு சவூதி அரேபியா கண்முன் உதாரணம்.

மற்றவர்களெல்லாம் சட்டங்களை கேலிக்குரியதாக ஆக்கும் போது குர் ஆன் இத்தகைய மிகச்சிறந்த சட்டங்களை கூறுவதன் மூலமும் ஞானம் நிறைந்த வேதமாக விளங்குகிறது. அதனால் தான் குர்ஆனின் சட்டத்தை குறைகூறுபவர்கள் கூட சில நேரங்களில் தங்களை அறியாமலேயே அரபு நாட்டு சட்டம் அதாவது குர்ஆன் கூறும் சட்டம் தான் குற்றங்களுக்கு தீர்வு என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு திருக்குர்ஆன் தனக்குள் ஞானம் நிறைந்த சட்டங்களை, கருத்துக்களை உள்ளடக்கியதால் இறைவன் ஞானம் நிறைந்த வேதம் என்று வர்ணிக்கின்றான்.