Tamil Bayan Points

05) அல்லாஹ்வின் அதிகாரத்தில் இணைகற்பிக்க வேண்டாம்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

Last Updated on May 13, 2023 by Trichy Farook

அல்லாஹ்வின் அதிகாரத்தில் இணைகற்பிக்க வேண்டாம்

அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு மட்டும் உட்பட்ட விசயங்களைப் பிறராலும் செய்ய முடியும் என்று நம்பினால் அதுவும் இணைவைப்பாகும். உதாரணமான மழையை வரவழைப்பது, பஞ்சத்தைக் கொடுப்பது, வறுமையை நீக்குவது, செல்வத்தை வழங்குவது, உலகத்தைப் படைப்பது, குழந்தையைத் தருவது, கவலையை அகற்றுவது, மரணிக்கச் செய்வது, உயிர் கொடுப்பது இது போன்று வேறு எவராவது செய்வார் என்று நம்பினால் இதுவும் இணைவைப்பாகும்.

يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌ۖ  كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍؕ

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

அல்குர்ஆன் (35 : 13)

اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا‏

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

அல்குர்ஆன் (25 : 2)

وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ‌ ؕ قُلْ حَسْبِىَ اللّٰهُ‌ ؕ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (39 : 38)

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி-4811

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானங்களைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்? என்று கேட்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-4812 

அதிகாரத்தில் தலையிட எவருக்கும் அனுமதியில்லை

தன்னுடைய அதிகாரத்தில் பிறர் தலையிடுவதை அல்லாஹ் ஒரு போதும் ஒத்துக் கொள்ளவே மாட்டான். அநியாயம் புரிந்து கொண்டிருந்த தன் சமுதாயத்தை அழிக்குமாறு யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

அச்சமுதாயத்தினர் அல்லாஹ்வின் வேதனை வருவதைக் கண்ட போது மனம் திருந்தி இறைவனிடம் பாதுகாப்புக் கோரினார்கள். அவர்களின் வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு யூனுஸ் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை நிராகரித்து விட்டான்.

இதனால் யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்தில் கோபித்துக் கொண்டார்கள். தண்டிப்பதும், தண்டிக்காமல் மன்னித்து விடுவதும் இறைவனின் அதிகாரம். இதை யூனுஸ் (அலை) அவர்கள் மறந்து அல்லாஹ்விடம் கோபம் கொண்ட போது அல்லாஹ் அவர்களைக் கண்டிக்கிறான்.

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌؕ‏

لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ‏

 فَاجْتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

அல்குர்ஆன் (68 : 48-50)

உஹுதுப் போரில் எதிரிகளால் நபியவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு இரத்தம் ஓடிய போது வேதனையில் தன்னைத் தாக்கிய எதிரிகள் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்து விடுகிறார்கள். போரில் வெற்றியை அளிப்பதும், தோல்வியை அளிப்பதும் இறைவனின் அதிகாரமாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் வேதனையிலிருந்தாலும் இவ்வாறு கூறியதற்காக அல்லாஹ் அவர்களைக் கண்டித்து வசனத்தை இறக்கினான்.

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிக்கிறார் என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், (நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை (3:128) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம்-3667

ஒருவர் எவ்வளவு பாவங்களைச் செய்தாலும் அவரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று நாம் கூறிவிடக் கூடாது. ஏனென்றால் மன்னிப்பதும், மன்னிக்காமல் இருப்பதும் இறைவனின் அதிகாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று கூறினார். அல்லாஹ், இன்ன மனிதனை நான் மன்னிக்க மாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்து விட்டேன். உன் நல்லறங்களை அழித்து விட்டேன் என்றோ, அதைப் போன்றோ கூறினான்.

அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம்-5115