Tamil Bayan Points

04) யாஸீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

யாஸீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன ?

நம் சமுதாயத்தில் சிலர் யாஸீன் என்பது ஒரு பெயர் என்றும் அதற்கு பொருள் உண்டு என்றும் கருதுகின்றனர். அதனாலேயே சிலருக்கு இதை பெயராகவும் சூட்டுகின்றனர். எனவே இதைப்பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும்.

பொதுவாக எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் கிடையாது. பல எழுத்துக்கள் சேர்ந்தது தான் அர்த்தம் தருகின்ற ஒரு வார்த்தையாக மாறும்.

உதாரணமாக ஆங்கில மொழியில் c a t ( சீ ஏ டீ ) என்ற மூன்று எழுத்துக்களை தனித்தனியாக உச்சரித்தால் இதற்கு பொருள் கிடைக்காது . மாறாக cat ( கேட் ) என்று சேர்த்து உச்சரித்தால் பூனை என்று பொருள் வரும். இவ்வுதாரணம் போன்றே யாசீன் يس என்பதும் அரபு எழுத்தில் உள்ள யா மற்றும் சீன் ஆகிய இரண்டு தனித்தனி எழுத்துக்களாகும். சேர்த்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையல்ல.

இதுபோன்றே 10 வது அத்தியாயத்தில் الر ( அலிப் லாம் ரா ) என்றும் , 19 வது அத்தியாயத்தில் كهيعص ( காஃப் ஹா யா அய்ன் சாத் ) என்றும் , 20 அத்தியாயத்தில் طه ( தா ஹா ) என்றும் , 42 வது அத்தியாயத்தில் عسق ( அய்ன் சீன் காஃப் ) என்றும் , 50 வது அத்தியாயத்தில் ق ( காஃப் ) என்றும் , 68 வது அத்தியாயத்தில் ن ( நூன் ) என்றும் , இவைமட்டுமின்றி குர்ஆனில் மொத்தம் 29 அத்தியாயங்களின் துவக்கம் இது போன்றே தனித்தனி எழுத்துக்களை கொண்டு அமைந்துள்ளது . இவைகளுக்கு என்று தனித்த அர்த்தம் கிடையாது.

யாசீன் என்ற தனித்தனி எழுத்துக்களுக்கும் எவ்வித பொருளுமில்லை. எனவே யாசீன் என்று பெயர் வைப்பது தவறல்ல என்றாலும் அதற்கென்று தனித்த பொருளில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாசீன் என்ற சொல்லைச் சேர்த்து படித்தாலும் அதற்கும் அரபிமொழியில் பொருள் கிடையாது.

பொருளற்ற வாரத்தையை அல்லாஹ் பயன்படுத்துவானா?

” மிகுந்த பொருளுள்ளவார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும் அல்லாஹ் பொருளற்ற வார்த்தைகளை பயன்படுத்தமாட்டான் எனும் போது யா , சீன் என்பது போன்ற பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை ஏன் பயன்படுத்தவேண்டும்? ” என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆனால் இவற்றை எவ்வித பயனுமில்லாமல் வீணாக அல்லாஹ் கூறவில்லை.

அரபுகளின் வழக்கம்.

பொதுவாக ஏதேனும் கருத்துக்களை கூறுவதற்கு முன்பாக யா, சீன் , போன்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது அரபுகளின் அன்றைய வழக்கமாக இருந்தது பிறகு சொல்லப்படும் கருத்தின் முக்கியத்தை உணர்த்த அரபியர்கள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளதாக புரியலாம். அதைப்போன்றே ஒரு அத்தியாத்தின் துவக்கத்தில் தனித்தனி வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நபித்தோழர்கள் எந்த சந்தேகம் கேட்கவில்லை

பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கத்திற்கு மாற்றமானது என்றிருந்தால் நபித்தோழர்கள் உடனடியாக அதைப்பற்றி கேள்வியெழுப்பியிருப்பார்கள். ஏனெனில் தங்களுக்கு புதிதான ஏதேனும் ஒன்றை நபி ( ஸல் ) அவர்கள் கூறினால் நபித்தோழர்கள் உடனடியாக அதற்கு விளக்கம் கேட்டுவிடுவார்கள். இதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

” ஹர்ஜ் ” என்பதை பற்றி விளக்கம் கேட்டல்

அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது:

நபி ( ஸல் ) அவர்கள், ” ( உலக முடிவு நாளின்போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு ( பரவி ) விடும். கொந்தளிப்பு ( ஹர்ஜ் ) மிகுந்துவிடும்” என்று கூறினார்கள். அப்போது” கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? ‘என்று கேட்கப் பட்டது. நபியவர்கள் தமது கையால் “இப்படி’ என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்துகாட்டினார்கள்.

நூல் : புகாரி-85

ஹர்ஜ் அதிகரித்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அதை சாதரணமாக கடந்து விடாமல் ஹர்ஜ் என்றால் என்னவென்று கேட்டு விளக்கம் அடைந்து கொள்கிறார்கள்.

“கீராத்” என்பதை பற்றி விளக்கம் கேட்டல்

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“”யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு கீராத்கள் என்றால் என்ன?” என வினவப் பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி : 1325

மேற்கண்ட இரண்டு செய்திகளிலும் “ஹர்ஜ்” மற்றும் “கீராத்” என்ற புதிதான வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் கூறும்போது அதைப்பற்றி உடனடியாக நபித்தோழர்கள் கேள்வி கேட்டு அதற்குறிய விளக்கத்தை பெறுகிறார்கள்.

இத்தகைய நிகழ்வுகள் நபிமொழிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே பொருளற்ற தனித்தனி வார்த்தைகளான அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற தனித்தனி வார்த்தைகளை கூறுவது வழக்கத்திற்கு மாறான புதிதான செயல் என்றிருந்தால் உடனடியாக நபித்தோழர்கள் விளக்கம் கேட்டிருப்பார்கள். அவ்வாறு கேட்காததின் மூலம் இது அரபுகளின் வழக்கத்தில் உள்ள, அன்றைய மக்களிடம் நன்கு அறியப்பட்ட செயல்
முறை தான் என்பதை அறியலாம்.

நபித்தோழர்கள் கேள்வி கேட்டு அதற்குறிய விளக்கத்தை பெறுகிறார்கள். இத்தகைய நிகழ்வுகள் நபிமொழிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே பொருளற்ற தனித்தனி வார்த்தைகளான

அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற தனித்தனி வார்த்தைகளை கூறுவது வழக்கத்திற்கு மாறான புதிதான செயல் என்றிருந்தால் உடனடியாக நபித்தோழர்கள் விளக்கம் கேட்டிருப்பார்கள். அவ்வாறு கேட்காததின் மூலம் இது அரபுகளின் வழக்கத்தில் உள்ள, அன்றைய மக்களிடம் நன்கு அறியப்பட்ட செயல் முறை தான் என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தானாக விளக்கமளித்தல்

நபிகளாரின் பண்பு

நபித்தோழர்கள் கேட்காவிட்டாலும் சில நபி (ஸல்) அவர்களே தானாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டியவற்றுக்கு விளக்கமளிப்பார்கள். இதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளது.

“கவ்ஸர்” என்பது பற்றி விளக்குதல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

(பொருள்:1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!
3. நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம்.

அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும்.

அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், “உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.

நூல் : முஸ்லிம்-670

பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது மக்களுக்கு புரியாது என்றிருந்தால் மேற்கண்ட ஹதீஸ் போன்று நபி (ஸல்) அவர்கள் தாமே முன்வந்து மக்களுக்கு அதை விளக்கியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்தும் இது அரபுகளின் நடைமுறை என்பதை அறியலாம்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை

இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை அனுதினமும் பைத்தியம் என்றெல்லாம் விமர்சித்து கொண்டிருந்தார்கள். யா ஸீன், அலிப் லாம் மீம் போன்று தனித்தனி எழுத்துக்களை கூறும் நடைமுறை தவறு என்றிருந்தால் அன்றைய இறைமறுப்பாளர்கள் உடனடியாக “முஹம்மத் பொருளற்ற வார்த்தைகளை கூறுகிறார்.

வீணான வார்த்தைகளை கூறி, உளறுகிறார் என்றெல்லாம் விமர்சித்திருப்பார்கள். இது போன்ற எவ்வித நிகழ்வும் நடக்காமலிருப்பதும் இது அரபுகளின் வழக்கம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே யாஸீன் என்பது இரண்டு தனித்தனி அரபி எழுத்துக்கள் ஆகும். இதற்கென்று தனித்து பொருள் கிடையாது.