Tamil Bayan Points

04) நல்லதை பேச வேண்டும்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

நல்லதை பேச வேண்டும்

இறைவன் நாவை தந்திருக்கின்றான் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி விடக்கூடாது மனதில் உதிப்பவைகளையெல்லாம் வார்த்தையாக்கி நாவின் மூலம் வெளியே கொட்டி விடக்கூடாது. எவற்றை போசவேண்டுமோ அவற்றை மட்டுமே ஃபில்டர் செய்து பேசவேண்டும். நாம் எவற்றை பேசவேண்டும் என்பதை இறைவனும் இறைத்துதரும் சொல்லித்தருகின்றார்கள்.

(முஹம்மதே) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்:17:53.) 

நாம் பேசும் பேச்சுகள் யாவும் ஆழகானதாய் இருக்கவேண்டும் நல்லதை பேசவேண்டும் என்று இறைவன் பணிக்கின்றான். இந்த உபதேசத்தை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. ஏனெனில் உண்மை முஸ்லிம் வெறுமனே இறைவனையும் இறைத்தூதரையும் நம்புவதோடு நின்றுவிடக்கூடாது. மாறாக அதன் வெளிப்பாடாய் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்களை பேணி நடக்க வேண்டும். குறிப்பாக நல்லதை மட்டுமே பேசவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும். 

நூல்: புகாரி – 6019

நாம் பேசும் பேச்சுகள் யாவும் நல்லதாகத்தான் இருக்கின்றதா கொஞ்சம் அசை போட்டு பாருங்கள் எத்துணை எத்துணை தீய பேச்சுகள். பொய் புறம் அவதூறு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றதே. இவைகளை பேசித்தான் நம்முடைய இரவு பகலை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். இவைகளை பேசாவிட்டால்

நம்மில் பலருக்கு அன்றைய பொழுதை கழிப்பது மிகவும் சிரமமே இந்த அளவில் நம்முடைய பேச்சில் தீயவைகள் நிறைந்து வழிகின்றது. நல்லதை பேச முடியவில்லை என்றால் வாயைத்திறக்காமல் மெளனமாக இருந்து விடுங்கள் என்ற நபிகளாரின் அறிவுரையை மனதினுள்வாங்கி பேசினால் நல்லதை மட்டுமே பேசவேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் உறுதி கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொற்று நோய் கிடையாது பறவை சகுனம் கிடையாது. ஆனால் நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொன்னார்கள். மக்கள் நற்குறி என்றால் என்ன? என்று கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் (மங்கலகரமான) நல்ல சொல் என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி – 5776