Tamil Bayan Points

04) ஒரு கடவுளா? பல கடவுளா?

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

04) ஒரு கடவுளா? பல கடவுளா?

ஒரு நிறுவனத்தில் பல முதலாளிகள் இருந்து ஆதிக்கம் செலுத்தினால் அந்த நிறுவனம் உருப்படாது, அது செயலிழந்து போய்விடும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

பல மூர்த்திகள் (முதலாளிகள்) இருந்தால் அது பல கீர்த்தியில் இருக்கும். அதாவது அலங்கோல நிலையில் அது இருக்கும். ஒரு மூர்த்தி இருந்தால் அது ஒரு கீர்த்தியில் (கட்டுப்பாட்டில்) இருக்கும். அது போல் தான் இந்த உலகத்திற்குப் பல கடவுள்கள் இருந்தால் அது செயலிழந்து சீர்கெட்டுப் போய் விடும். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

(திருக்குர்ஆன் : 21:22.)

கடவுள் என்றால் அவன் எல்லாவற்றுக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். எப்போது அவனுக்கு ஒரு துணைக் கடவுள் தேவைப்படுகின்றதோ அப்போதே அவன் கடவுள் என்ற தகுதியை இழந்து விடுவான்.

இரண்டு கடவுள்களில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியும் ஏற்பட்டு விடும். உலகில் பல கடவுள் கொள்கையைப் போதிக்கும் மதங்களில் கடவுள்களுக்கு இடையே சண்டை நடந்ததாகப் புராணங்களை எழுதி வைத்திருப்பதைப் பார்க்கிறோம். கடவுளே சண்டையிட்டால் அவன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்வான்? எனவே இந்த அடிப்படையில் உலகத்தில் ஒரு கடவுள் தான் இருந்தாக வேண்டும் என்பது நிரூபணமாகின்றது.