Tamil Bayan Points

03) விபச்சாரத்தில் தள்ளும் வரதட்சணை

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

Last Updated on February 2, 2023 by

விபச்சாரத்தில் தள்ளும் வரதட்சணை

உரிய வயதில் திருமணம் ஆகாத காரணத்தால் பல பெண்கள் மனநோயாளியாக மாறுகிறார்கள். சிலர் நாம் ஏழையாக பிறந்துவிட்டோம். நமக்கு திருமணம் ஆகாது. நாம் ஏன் இழிவுடன் வாழ வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இறைவன் மன்னிக்காத தற்கொலை என்ற பெரும் பாவத்தை செய்வதற்கு வரதட்சணையே காரணம்.

ஏழையாக பிறப்பது பாவமா? மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இல்லறத் தேவை நமக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகின்றது என திருமணத்துக்கு ஏங்கும் பெண் ஒரு நேரத்தில் விபச்சாரத்தில் சிக்கிவிடுகிறாள். படிதாண்டி வேறு மதத்தவர்களுடன் ஓடிப்போகிறாள். மரியாதையுடன் வாழ்ந்த பெற்றோர்களுக்கு இவளால் பெரிய அவமானம் ஏற்படும்.

மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது. ஒழுக்கமுள்ளவள் விபச்சாரியாக மாறுவதற்கு இந்த வரதட்சணையே காரணம்.

சிரமப்பட்டு வரதட்சணை கொடுத்து திருமணத்தை நடத்திய பிறகும் பெண்ணைப் பெற்றவனுக்கு நிம்மதியில்லை. ருசி கண்ட பூனை சும்மா இருக்காது. வரதட்சணை வாங்கிப் பழகிய மானங்கெட்ட மாப்பிள்ளைக்கு மறுபடியும் மறுபடியும் பெண்வீட்டாரிடமிருந்து பிடுங்கத் தோணும். பணம் கேட்டு மனைவியை கொடுமை செய்வான். பெற்றோர்கள் நொந்து நூலாய் போய்வார்கள்.

பெண் சிசு கொல்லப்படுகின்றது

பெண்ணை பெற்றவர்கள் இவ்வளவு கஷ்டங்களை பட வேண்டுமா? பெண்ணாகப் பிறந்தால் இப்படியெல்லாம் சீரழிய வேண்டுமா? பெண்ணாகப் பிறந்தால் இவ்வளவு வேதனைகள் நிச்சயம் என்றால் அப்படிப்பட்ட பெண் குழந்தை நமக்கு வேண்டாம் என்று பெண் குழந்தையை நஞ்சாய் சமுதாயம் வெறுக்கின்றது.

பெண் இனத்தை கறுவருக்கும் இரக்கமற்ற செயலை செய்கின்றது. பெண் சிசு என்று தெரிந்துவிட்டால் கருவிலேயே அந்த சிசுவை அழித்துவிடுகின்றனர் என்பதால் வயிற்றில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் தெரிவிப்பதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும் சாக்கடையிலும் வீசிச் செல்கின்றனர். கள்ளிப்பால் கொடுத்தும் இன்னும் நவீன முறைகளை பயன்படுத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்கின்றனர்.

கருணையுள்ள தாயின் கொடூரச் செயல்

எல்லா உயிரினங்களிலும் பெற்றெடுத்த தாய் தன் குட்டியின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருக்கும். தன் குஞ்சுகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தன்னுயிரை கூட பொருட்படுத்தாமல் தன்னால் இயன்றவரை எதிரியை எதிர்த்துப் போராடி தன் குஞ்சுகளை காப்பாற்றுகின்ற கருணையை அனைத்து உயிரிகளிடத்திலும் பார்க்க முடியும்.

ஆனால் மனித இனத்தில் மட்டும் பெற்றெடுத்த தாயே தன் குழந்தையை கொலை செய்கிறாள். இரக்கமுள்ள இவள் இப்படிப்பட்ட கள்நெஞ்சுக்காரியாக மாறுவதற்கு இந்த வரதட்சணையே காரணம். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

இப்படி ஏராளமான தீமைகளுக்கு முக்கிய காரணமாக உள்ள வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.