Tamil Bayan Points

03) யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள்

சிலர் முழுக் குர்ஆனைவிட அல்லது குர்ஆனிலேயே யாஸீன் சூராவை மிகச்சிறந்ததாக நினைக்கின்றனர். அதனால்தான் யாஸீன் சூராவை மட்டும் தனியாக அச்சடித்து வைத்தல். தனி ஃப்ரேமாக செய்து கடைகளில் மாட்டுதல். இவைகளை வியாபாரம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சில பலவீனமான ஹதீஸ்களும் காரணமாகும். அது பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

குர்ஆனுடைய இதயம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உள்ளது. குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும்.

இதை அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் திர்மிதீ-2812

இச்செய்தி யாஸீன் சுராவின் சிறப்பை கூறுவது போன்றிருந்தாலும் இது அறிவிப்பாளர் தொடர் ரீதியாக பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான “ஹாரூன் அபூ முகம்மத்” என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் திர்மிதீ மற்றும் தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர்.

மேலும் இச்செய்தியின் அடிக்குறிப்பிலேயே இச்செய்தி பலவீனமானது என்று இமாம் திர்மிதீ கூறுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கவனிக்காமல் இந்த பலவீனமான செய்தியின் அடிப்படையில் யாஸீன் சூரா தான் குர்ஆனின் இதயம் என்று இன்றும் சிலர் நம்புகின்றனர். நபியவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் அதை ஆராயாமல் உடனடியாக நம்புகின்றனர்.

இது தவறான போக்காகும்.

ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் யாஸீன்

“என் சமுதாயத்தின் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் யாஸீன் அத்தியாயம் (மனனமாக) இருக்கவேண்டும்” என நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இச்செய்தி கஷ்புல் அஸ்தார் (ஹதீஸ் என் 2303) உள்ளிட்ட வேறு சில நூல்களில் பதிவாகியுள்ளது. எனினும் அனைத்து அறிவிப்புகளிலும் இப்றாஹீம் பின் அல்ஹகம் என்பவர் இடம்பெற்றுள்ளார. இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

பத்து முறை குர்ஆன் ஓதியதற்கு சமம்

“யாஸீன் அத்தியாயத்தை ஒருமுறை ஓதியவர் பத்து முறை குர்ஆனை (முழுமையாக) ஓதியவரை போலாவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் திர்மிதீ-2812

‌மேற்கண்ட செய்தியும் யாஸீன் சூராவின் சிறப்பை கூறுகிறது. எனினும் இதில் ஹாரூன் அபூ முகம்மத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். மற்ற நூற்களில் இடம் பெற்றுள்ள செய்திகளில் ஹஸ்ஸான் பின் அதிய்யா என்பவர்தான் இச்செய்தியை நபி(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்.

ஆனால் இவர் நபித்தோழரல்ல. நபியவர்களின் மரணத்திற்கு பிறகு பிறந்த தாபியாவார். எனவே இவர் நபிகளாரிடமிருந்து கேட்பதை போன்று அறிவிக்கக்கூடிய செய்தியையும் ஏற்கமுடியாது. இதே செய்தி ஷீ அபுல் ஈமான் என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. அதில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் எனும் பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆதலால் மேற்கண்ட செய்தியும் ஆதாரமற்றதாகும்.

மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு…

மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி)

நூல்கள் : அபூதாவூத்-2814, இப்னுமாஜா-1438

யாஸீன் (அத்தியாயம்) குர் ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படாமல் இருப்பதில்லை உங்களில் மரண வேளை நெருங்குபவர்களிடம் அதை ஓதுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி)

நூல் : அஹ்மத்-19415

இச்செய்தி இப்னுமாஜா 1438, நஸாயீ அவர்களின் ஸுனனுல் குப்ரா 10847 உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களிலும் மஅகில் பின் யஸார் (ரலி) கூறியதாக அபூ உஸ்மான் என்பாரின் தந்தை இந்த ஹதீஸை அறிவிக்கிறார். அவரிடமிருந்து அபூ உஸ்மான் அறிவிக்கிறார்.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறிகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

மரணமடையும் எவரது முன்னிலையில் யாஸீன் ஓதப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு வேதனையை இலேசாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), அபூதர் (ரலி)

நூல் : முஸ்னத் பிர்தவ்ஸ்-6099

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் சாலிம் பின் மர்வான் பலவீனமானவராவார். ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனுமளவு இவரை அறிஞர் ஸாஜி விமர்சித்துள்ளார் ஹதீஸ்துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, முஸ்லிம், ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 84

எனவே மரண வேளை நெருங்கியவர் முன்னிலையில் யாஸீன் ஓத வேண்டும். என்று வருகின்ற எந்த ஹதீஸுமே சரியான ஹதீஸ் கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

எனவே யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி வருகின்ற அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனினும் குர்ஆனை ஓதினால் ஒர் எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு என்பது நபிமொழி.

‘அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)

நூல் : திர்மிதி-291

இந்நபிமொழியின் படி யாஸீன் அத்தியாயத்தை ஓதும் போது ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் எனும் பொதுவான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். மேற்கண்ட பலவீனமான செய்திகளில் உள்ளது போன்ற நன்மை. கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயரா?

யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயர் என்று சில முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இதற்கு ஆதாரமாக இஸ்லாமிய பாடகர் என்று சொல்லப்படும் நாகூர் ஹனிஃபா அவர்களுடைய பாடலில் வருகின்ற “தாஹா நபி, யாசீன் நபி” என்ற வார்த்தைகளைத்தான் குறிப்பிடுகின்றனர். உண்மையில்
நாகூர் ஹனிஃபா பாடுவது போன்று நபிகள் நாயகத்திற்கு யாஸீன் என்ற பெயருண்டு என எந்த ஹதீசிலும் இடம் பெறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் பெயர்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு என்னென்ன பெயர்கள் இருக்கின்றன என்பது ஹதீஸ்களில் காணப்படுகிறது. அந்த பட்டியலில் யாஸீன் எனும் பெயர் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

  1. நான் முஹம்மது புகழப்பட்டவர் ஆவேன்.
  2. நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
  3. நான் மாஹீ அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான்.
  4. நான் ஹாஷிர் ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
  5. நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்கள்

ஸஹீஹ் புகாரி : 3532.

மேற்கண்ட ஹதீஸில் உள்ள 5 பெயர்கள் போன்று ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள் மட்டுமே நபி (ஸல்) அவர்களுக்குரியதாகும்.

யாஸீன், தாஹா என்ற பெயர் நபிகளார்க்கு உண்டு என்று இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் இடம்பெறுகிறது. இந்த செய்தியில் வரும் ஸைஃப் பின் வஹப் என்பவர் பலவீனமானவர் என்று இதை பதிவு செய்த இப்னு அதீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

நாகூர் ஹனிபா கவிதைக்காகத்தான் இவ்வாறு பாடுகிறாரே தவிர குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பாடவில்லை. எனவே யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயரல்ல. இஸ்லாமிய சமூகம் ஆதாரமற்ற போன்றவற்றை நம்பக்கூடாது.