Tamil Bayan Points

03) மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 21, 2022 by

03) மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்?

பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது. இது தாவீது (தாவூது) ராஜாவின் வேதமாகும். இந்த வேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில் தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார்.

அது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்று கிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த முன்னறிவிப்பில், வரக்கூடிய தீர்க்கதரிசிக்குரிய ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீது ராஜா கூறுகிறார்.

இந்த அடையாளங்களில் ஒன்றிரண்டு அடையாளங்கள் மட்டுமே இயேசுவுக்குப் பொருந்துகின்றன. சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே சரியாகப் பொருந்துகின்றன. அனைத்து அடையாளங்களும் யாருக்குப் பொருந்துகின்றனவோ அவரைப் பற்றிய முன்னறிவிப்பு என்று தான் அறிவுடையோர் முடிவுக்கு வருவார்கள்.

எதிர்காலத்தில் தோன்றக் கூடிய அந்த தீர்க்கதரிசியை மானசீகமாக நோக்கி தாவீது ராஜா நேரடியாகப் பேசுவது போல் அந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவிதையைச் சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

(சங்கீதம் 45:1)

முன்னறிவிப்பில் எடுத்த எடுப்பிலேயே கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையை தாவீது ராஜா நீக்குகிறார். வரக்கூடியவர் ராஜாவாக அரசராக இருப்பார். என்று தாவீது ராஜா கூறுகிறார். இயேசு ஒரு காலத்திலும் மக்களை ஆட்சி செய்யும் அரசராக இருந்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசராக ஆட்சி புரிந்திருக்கறார்கள்.

எல்லா மனு புத்திரரிலும் நீர் மகா சௌந்தர்யமுள்ளவர். உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது. ஆகையால் தேவன் உம்மை என்றைக்கும் ஆசீ்ர்வதிக்கின்றார்.

(சங்கீதம் 45:2)

வரக்கூடியவர் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்று தாவீது ராஜா கூறுகிறார். இயேசு அழகுடையவராக இருந்தார் என்று பைபிள் எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக அழகற்றவராக இருந்தார் என்று கூறுகிறது.

அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமும் இல்லை. அவரைப் பார்க்கும் போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

(ஏசாயா 53:2)

”அவருக்கு அழகுமில்லை” என்று ஏசாயா ஆகாமம் கூறுகிறது. இது இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பு எனக் கிறித்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் தாவீது ராஜா கூறுவது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது என்பதை கிறித்தவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

ஏனெனில் தாவீதின் முன்னறிவிப்பு அழகுள்ள ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அழகற்றவராக இருப்பார் என்பதும் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்பதும் இயேசுவுக்கு எப்படிப் பொருந்தும் என்று கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும். தாவீது ராஜாவின் முன்னறிவிப்புக்கேற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த அழகுடையவராக இருந்தார் என்று ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

சவுரியவானே! உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக் கொண்டு…

(சங்கீதம் 45:3)

பட்டயத்தை… (அதாவது வாளை-) அரையிலே (அதாவது இடுப்பிலே) கட்டிக்கொண்டு என்பது எதிரிகளுடன் போர் புரிவதைக் குறிக்கின்றது. இயேசு ஒரு போதும் இடுப்பில் வாளைத் தொங்க விட்டதில்லை. எதிரிகளுடன் போர் புரிந்ததுமில்லை. ஆனால் முஹம்மது நபி அவர்கள் வாளேந்திப் போர் புரிந்திருக்கிறார்கள் என்பது கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

சத்தியத்தினிமித்தமும் நீதியுடன் கூடிய சாந்த்ததினிமித்தமும் உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறி வாரும். உமது வலது கரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப் பண்ணும்

(சங்கீதம் 45:4)

வரக்கூடியவர் மகத்துவத்துடன் வெற்றிபெறுவார் என்றும் அவரது வலது கரம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தாவீது ராஜா கூறுகிறார்.

இயேசு தம் வாழ்நாளில் மகத்துவத்துடன் வெற்றி பெறவில்லை. சாதாரண வெற்றியும் பெறவில்லை. அவரது எதிரிகளே வென்றார்கள். பயங்கரமான முறையில் அவரைக் கொன்றார்கள். (கிறித்தவ நம்பிக்கைப்படி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளிலேயே மகத்தான வெற்றி பெற்றார்கள். எதிரிகளை தம் கரத்தால் சங்காரம் செய்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள். அவைகள் ராஜாவுடைய சத்ருக்களின் இருதயத்துக்குள் பாயும். ஜன சதளங்கள் உமக்கு கீழே விழுவார்கள்.

இயேசு கூர்மையான அம்புகளைப் பயன்படுத்தியதுண்டா? அவை எதிரிகளின் இதயத்தில் தைத்ததுண்டா? அவரைச் சுற்றி இருந்த பல்வேறு கோத்திரங்களும் அவரது ஆளுகையின் கீழ் வந்ததுண்டா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெய்யக் கூடியவராக – எதிரிகள் மீது குறி பார்த்து வீசக் கூடியவராக – அம்பெய்ய ஆர்வமூட்டுபவராக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த எல்லாக் கோத்திரத்தாரும் அவரது ஆளுகையின் கீழ் வந்தார்கள்.

தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஜ்ஜித்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

நபிகள் நாயகம் ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்கள். பாரபட்சமற்ற நீதி வழங்கினார்கள் என்பது எதிரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை. மேலும் அவரது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. என்ற வாசகமும் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே பொருந்துகிறது. அவர்கள் வாழ்ந்த பகுதியில் அவரது சமுதாயத்தினர் 14 நூற்றாண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இது இயேசு விஷயத்தில் எள்ளளவும் பொருந்தாது.

நீர் அநீதியை அக்கிரமத்தை வெறுக்கிறீர். ஆதலால் தேவனே! உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம் பண்ணினார்.

இஸ்ரவேல் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் உரிமையை தேவன் தாவீது ராஜாவிற்கு வழங்கி அவரைச் சந்தோஷப்படுத்தினார். முஹம்மது நபிக்கு உலகின் பல பகுதிகளை ஆட்சி புரியும் சந்தோஷத்தை அருளினார். தன்னை விட பரந்த ராஜ்யத்தை அவர் ஆளுவார் என்பதையே ”உமது தோழரைப் பார்க்கிலும் (அதாவது என்னைப் பார்க்கிலும்) உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம் பண்ணினார் என்ற வாக்கியத்தின் மூலம் தாவீது ராஜா குறிப்பிடுகிறார்.

அவர் குறிப்பிட்டவாறு தாவீத ராஜாவை விட மிகப் பெரிய ஆட்சியை நபிகள் நாயகம் நடத்தினார்கள். இயேசுவுக்கு இந்த சந்தோஷம் கிடைக்கவில்லை.

8. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுமுண்டு. ராஜ ஸ்திரீ ஒப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலது பாரிசத்தில் நிற்கிறாள்.

இயேசுவுக்கு பைபிள் நம்பிக்கைப்படி ஒரு மனைவி கூட இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்ந்தார்கள். அரச குலத்தைச் சேர்ந்த ஸஃபிய்யாவும் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். மக்காவில் ஆட்சித் தலைவராக இருந்த அபூஸுஃப்யானின் மகள் உம்மு ஹபீபாவும் மனைவியாக இருந்தார்கள். தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயத்தைத் தவிர யாருக்கும் பொருந்துவதாக இல்லை.

9. குமாரத்தியே கேள்! நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்! உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு!

இஸ்ரவேல் சமுதாயத்திக் குமாரத்தியாகப் பாவித்து இஸ்ரவேலரை அழைக்கிறார். உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிட்டு வரக்கூடியவருடன் சேர்ந்து கொள்ளுமாறு தாவீது ராஜா கூறுகிறார். வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். இஸ்ரவேலர் அல்லாத இனத்தில் தான் அவர் தோன்றுவார் என்பதால் தான் உன் ஜனத்தை மறந்துவிடு என்று குமாரத்திற்குக் கூறுவது போல் இஸ்ரவேலர்களுக்குக் கூறுகிறார்.

இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்றால் உன் ஜனத்தை மறந்துவிடு என்று தாவீது ராஜா கூறியிருக்க மாட்டார்.

10. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன். இதனிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள்.

இயேசுவைக் கிறித்தவர்கள் துதித்தாலும் எல்லா நேரங்களிலும் அவர் துதிக்கப்படுவதில்லை. ஞாயிறுகளிலும் விசேஷ நாட்களில் மட்டுமே அவர் துதிக்கப்படுகிறார். நபிகள் நாயகம் ஒரு வினாடி நேரம் கூட துதிக்கப்படாமல் இருந்ததில்லை.

ஐந்து வேளை தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்படுவதை அனைவரும் அறிவோம். பாங்கில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் துதிக்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வினாடியும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்படாமல் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் துதிக்கப்படுகிறார்.

கடமையான தொழுகைகள், மற்றும் உபரியான தொழுகைகளில் நபிகள் நாயகத்தைத் துதிக்கும் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் தொழுகை நடத்தப்படாத எந்த வினாடியும் இல்லை. எனவே நபிகள் நாயகம் ஒவ்வொரு வினாடி நேரமும் மக்களால் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இந்தக் காரணத்தினாலும் அவர் எந்நேரமும் புகழப்பட்டவராக ஆகிறார்.

தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் அத்தனை தகுதிகளும் நபிகள் நாயகத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன. பைபிளை வேதம் என்று நம்பக்கூடிய கிறித்தவர்கள் – தாவீது ராஜாவை மதிக்கும் கிறித்தவர்கள் – என்ன செய்ய வேண்டும்?

தமது ஜனத்தையும் வீட்டையும் மறந்துவிட்டு மகா சௌந்தர்யமுள்ள – நேர்மையாளரை – வெற்றி வீரரை ஏற்க வேண்டாமா? தாவீது ராஜாவின் போதனைக்குச் செவிசாய்க்க வேண்டாமா?

நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக் கொள் என்று தாவீது ராஜா கூறியவாறு சிந்திக்க வேண்டாமா?