Tamil Bayan Points

03) எழுத்தில் ஓர் யுத்தம்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

03) எழுத்தில் ஓர் யுத்தம்

1920களின் பிற்பகுதி. கல்கத்தா யுனிவர்சிட்டியின் சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார் டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி. இவர் எழுதிய இந்திய சரித்திரம் அன்றைய உயர்நிலைப் பள்ளிகளின் பாடநூல். ராஜஸ்தான், ஒரிசா (தற்போதைய ஒடிசா), மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலப் பள்ளிகளில் தினம் தினம் மாணவர்கள் படிக்கும் பாட நூல்.

அந்த நூலில் திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் மூவாயிரம் பிராமணர்கள் தீயில் குதித்து தம் உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒரு செய்தி வருகிறது. மைசூர் மாவீரன் திப்புவின் கொடுமைகள்தான் அத்தனை பேரும் தம்மை அழித்துக் கொண்டதற்கான அடிப்படைக் காரணம் என்று எழுதிச் செல்கிறார் நூலாசிரியர்.

திப்பு சுல்தான் இஸ்லாத்தை ஏற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தினான். ஏற்க மறுத்தவர்களை தொல்லைப் படுத்தினான். ஒன்று அவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது திப்புவின் கொடுமைகளைத் தாங்கித் தீர்க்க வேண்டும்.

இரண்டில் எதையுமே ஏற்க விரும்பாத அந்த பிராமணர்கள் அக்னியில் குதித்து அழியாப் பெருவாழ்வைத் தேடிக் கொண்டனர் என்று முடிகிறது ஹரி பிரசாத்தின் காவியக் கதை.

இந்தக் கதையைப் படித்த டீ என். பாண்டே பதறிப் போனார். இவர் ஹரிபிரசாத்தின் சமகாலத்து வரலாற்றாசிரியர். பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். ஒரிசா மாநிலத்தின் ஆளுனர் பதவியை அலங்கரித்தவர்.

இவர் அந்த நூலைப் படித்ததும் உடனடியாக அதற்குரிய ஆதாரங்களைக் கேட்டு ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு கடிதம் எழுதினார், பதிலைக் காணோம். மீண்டும் எழுதினார். மீண்டும் எழுதினார். தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதினார்.

ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் தொல்லை யிலிருந்து தப்பிப்பதற்காக சாஸ்திரி யிடமிருந்து பாண்டேவிற்கு பதில் வந்தது. மைசூர் கெஜட்டில் இந்தச் செய்தி பதிவாகி உள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி.

பதில் சொல்லிவிட்டோம் என பதுங்க நினைத்தார் சாஸ்திரி. பதிலைப் படித்த பாண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார். மைசூர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பிஜேந்திர நாத் சீலுக்கு இப்படி ஒரு செய்தி மைசூர் கெஜட்டில் உள்ளதா? என்று கேட்டு கடிதம் எழுதினார்.

அவர் அந்தக் கடிதத்தை மைசூர் கெஜட்டின் அப்போதைய அதிகாரி பேராசிரியர் ஹண்டைய்யாவிடம் அனுப்பி வைத்தார்.

மைசூர் கெஜட் புறட்டப்பட்டது. அனைத்துச் செய்திகளும் அலசப் பட்டன. அப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என அங்கிருந்து பதில் வந்தது. கேட்ட கேள்வியை விட கூடுதலாக ஒரு பதிலும் சேர்ந்து வந்தது. கெஜட்டில் இப்படி ஒரு செய்தியும் இல்லை, இப்படி ஒன்று நிகழ்வதற்கு வாய்ப்பும் இல்லை.

ஏனெனில் திப்புசுல்தான் ஒரு மன்னனாக மட்டுமில்லை. நல்ல மனிதனாகவும் வாழ்ந்தவன் என அவன் பேணிய சமய நல்லுறவும் பிற மதத்தவர்களிடம் அவன் காட்டிய கனிவும் ஆதாரத்தோடு அதிலே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

அவனது மந்திரிகள் முதற்கொண்டு படைத்தலைவர்வரை அவன் தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்ட பிராமணர்கள், திப்புவால் கௌரவிக்கப்பட்ட இந்து வைதீக பெருந்தலைவர்கள்,பல்வேறு மடங்களின் சத்குரு மற்றும் ஜகத்குரு சந்நியாசிகள், சங்கராச்சாரியர்கள் திப்புவின் அரசில் மானியம் பெற்று பராமரிக்கப்பட்ட இந்துமதக் கோவில்கள், அந்தக் கோவில்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்கள் என பெரும் பட்டியலையே அதில் குறிப்பிட்டு இந்த மன்னன்மீதா இப்படி ஓர் அவச்சொல்? எனக் கேள்வி எழுப்பியிருந்தது அந்த அறிக்கை.

கெஜட்டர் ஹண்டைய்யாவிட மிருந்து பதில் வந்ததும் உடனடியாக அதை பாண்டேவிற்கு அனுப்பி வைத்தார் துணை வேந்தர். அத்துடன் அவர் வேலை முடிந்தது. பதிலைப் பெற்றுக் கொண்ட பாண்டேயின் பயணமோதொய்வின்றித் தொடர்ந்தது.

கையில் கிடைத்த ஆதாரங்களோடு மாணவர்களின் பாடநூற்களைத் தேர்வு செய்யும் கல்கத்தா யுனிவர்சிட்டியின் துணை வேந்தர் அஸ்டோஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டார் பாண்டே.

மட்டமான கற்பனைகளோடு மாணவப் பருவத்திலே மதவெறியை ஊட்டி வளர்க்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை உடனடியாகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். இந்நூலை தடை செய்து வெளியிடப்பட்ட அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக அந்நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது.(தியாகத்தின் நிறம் பச்சை பேராசிரியர். மு.அப்துஸ் ஸமது 9-11 நேஷனல் பப்ளிஷர்ஸ் நவம்பர் 2012)

இஸ்லாமும் இந்தியக் கலாச்சாரமும் என்ற தமது நூலில் பி.என்.பாண்டே அவர்கள் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் அப்துஸ் ஸமது அவர்கள் தியாகத்தின் நிறம் பச்சை என்ற தமது நூலில் மேற்கோள் காட்டியுள்ளார். இப்படி ஒரு கற்பனையைப் பாடநூலில் சேர்த்திருக்கிறார்களே!

கதை முழுவதும் அப்பட்டமாய் வீசும் வகுப்புவாத நெடி படிப்போரின் உள்ளத்தை பாழ்ப்படுத்தி விடாதா? கதை சிறியதுதான், அது கற்றுத் தரும் பாடம் கொடியதாக அல்லவா இருக்கிறது.வார்த்தைகளுக்குள் விஷம் வைத்து முஸ்லிம்களின் வாழ்வையே சீரழிக்கும் இப்படி ஒரு கதை மாணவர்களுக்குத் தேவையா?

பண்பாடு மிக்க சமூகத்திற்குத் தேவையா? இந்திய தேசத்தின் நலன்களுக்குத் தேவையா? இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குத் தேவையா?

அப்பப்பா…! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எத்தனை நெஞ்சழுத்தத்தோடு செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்? அவர்களைப் பொருத்தவரை முஸ்லிம்கள் மீது வஞ்சம் பாய்ச்ச இது ஒரு வழிமுறை அவ்வளவு தான்.

இந்தச் செய்தி சரித்திரச் சங்கமத்தில் யாரோ ஒருவரால் எப்போதோ நடந்த ஒரு பிழை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இது கடலுக்குள் மூழ்கி, மூச்சடைக்கத் தேடி, முயன்று பெற்ற ஒற்றை முத்தல்ல. பானை சோற்றுக்கு பதம் காட்ட முன் வைத்த ஒரேயொரு பருக்கை.