Tamil Bayan Points

02) மாயக் கண்ணாடி

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

02) மாயக் கண்ணாடி

வரலாறு என்பது காலத்தின் கண்ணாடி என்பர். ஒருவகையில் அது ஒரு மாயக் கண்ணாடி. நேற்றைய என் முகத்தை இன்றைக்கு அது காட்டும்.

உலகில் எந்தக் கண்ணாடியும் இருப்பதை மாற்றி இல்லாததைக் காட்டுவதில்லை. முன்னால் இருப்பது அழகாய் இருந்தால் அழகைக் காட்டும், அழுக்காய் இருந்தால் அதைத்தான் காட்டும். காலக் கண்ணாடி இதிலும் கொஞ்சம் வித்தியாசமானது.

ஏனெனில் இது முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாயக் கண்ணாடி. எனவே அதில் தெரிய வேண்டிய காட்சிகளை அவன் தன் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கிறான். அசிங்கமாக இருந்த தன் தோற்றத்தை அழகு வர்ணமாகவும், ஆஜானுபாகுவாக இருந்தவரை அரை அங்குலப் புழுவாகவும் ஆக்கிவிடுகிறான்.

உண்மையில் இந்த மாற்றத்தைச் செய்யும் மனிதர்களைப் பார்த்து பெரும் ஆற்றல் படைத்தவர்கள் என அங்கீகரிக்க முடியாது. மாய வித்தைகளைச் செய்து விட்டு தன்னை மந்திரவாதி என்பவனை விட இவர்கள் மட்டமானவர்கள்.

ஏனெனில் இவர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளால் நேர்ந் திருக்கும் கொடுமைகள் அப்படி. அவற்றை வார்த்தைக் கூட்டிற்குள் வசப்படுத்துவது கூட கடினம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்திய சுதந்திர வரலாற்றில் இவர்களின் நேர்மையற்ற எழுத்துக்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்.

வரலாறு என்பது வெறுமனே வாசித்து அறிகிற கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல. எனக்குள்ள உரிமையைத் தக்க வைக்க – எனக்கும், நான் வாழும் என் நிலத்திற்குமான உறவை உறுதிப்படுத்த என்னிடமுள்ள ஒரே ஆயுதம் வரலாறு.

நான் முட்டிவிட்டு குனிவதற்குப் பதிலாக முட்டுப்பட்ட என் முன்னோர்கள் குனிந்துவிடு என்று எனக்குக் கற்றுத் தரும் அனுபவப் பாடம் வரலாறு.

வாழ்க்கையில் வரும் துயரங்களைக் கண்டு நான் துவண்டு போகையில் துணிந்து நின்று போராடு என்று தன் வாழ்வின் வழியாக எம் முன்னோர்கள் எனக்குச் சொல்லும் வாழ்த்துரைகள் வரலாறு.

இப்படி எண்ணற்ற பல நன்மைகளை வாரி வழங்கும் வரலாற்றை கூடுதல் குறைவின்றி காய்தல் உவத்தலின்றி உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ள வேண்டும்.

நேர்மையான முறையில் இந்திய விடுதலை வரலாற்றை வாசித்து அறியும் வாய்ப்பு இந்தியர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை

இந்திய மண்ணில் அந்நியர்களுக்கு எதிராக சுழன்றடித்த சூறாவளி சாதி, மதம், இனம், மொழி என அனைத்துவகை பேதங்களுக்கும் அப்பாற்பட்டது. இதனை எதிர்காலத் தலைமுறைக்கு எழுத்து வடிவில் கொடுக்க முயன்ற ஆசிரியர்களில் சிலரைத் தவிர அனைவருமே இந்த ஆபத்தில் மாட்டிக் கொண்டனர்.

வரலாற்றை எழுதும்போது கண்களை அகலத் திறந்து வைத்து, அறிந்து கொண்ட அனைத்தையும் அப்படியே அடுத்த தலைமுறைக்கு அச்சில் வார்க்க வேண்டும். ஆனால் அதை எழுதிய ஆசிரியப் பெருமக்களோ சாதி, இனம், மதம், மொழி என அவரவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிற்கு பெருமை சேர்ப்பதற்காகவும்நிகழ்கால எதிரிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவும் வரலாற்றைத் தம் தேவைக்கேற்ப வளைத்துக் கொண்டார்கள்.

உரமிட்டு வளர்த்தவனையும் விஷமிட்டு அழித்தவனையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது இவர்கள் எழுதிய வரலாறு,.. பாசாங்குகாட்டியவனை பட்டத்து நாயகனாக்கி பாடுபட்டு உழைத்தவனை படுகுழியில் தள்ளியது இவர்கள் எழுதிய வரலாறு,

பஞ்சமா பாதகத்தை அஞ்சாமல் செய்தவனை மனிதநேயச் சிற்பியாக்கி பரிவையும், பாசத்தையும் தன் பழக்கமாகக் கொண்டவனை பயங்கரவாதி என பட்டம் பெறச் செய்தது இவர்கள் எழுதிய வரலாறு.

இப்படி இரும்பைத் துரும்பாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கும் பெருமைமிகு வரலாற்றாசிரியர்கள் உலக நாடுகளில் எப்படியோ! நம் இந்தியத் துணைக் கண்டத்தில் இவர்களின் எண்ணிக்கை ஏராளம்.