Tamil Bayan Points

02) ஒரு சமுதாய அழிவின் காரணம் நாவு

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

ஒரு சமுதாய அழிவின் காரணம் நாவு

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான் என்று அவர்கள் கேட்டனர். அது கிழடும் கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! என்று அவர் கூறினார்

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான் என்று அவர்கள் கேட்டனர். அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான் என்றார். உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவு படுத்துவான் அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம் என்று அவர்கள் கூறினர். அது நிலத்தை உழவோ விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப் படாத மாடு: குறைகளற்றது, தழும்புகள் இல்லாதது என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். இப்போது தான் சரியாகச் சொன்னீர்

(அல்குர்ஆன்:2:68,69,70,71.) 

இந்த கேள்விக்கணைகள் யாவும் மூஸா (அலை) அவர்களின் சமுதாயம் மூஸா நபியை நோக்கி கேட்டதாகும். இவ்வாறு தேவையற்ற பயனற்ற பல்வேறு கேள்விகளை கேட்டுக் கேட்டே இந்த சமுதாயம் அழிவு பாதையை நோக்கி சென்றது. பொதுவாக இறைத்தூதர்களிடத்தில் அதிகம் கேள்வி கேட்கக்கூடாது என்பது இறைவிதி (உலமாக்களிடம் எவ்வளவு வேண்டுமானலும் கேட்டுக்கொள்ளுங்கள்) இந்த விஷயத்தில் தங்களுடைய நாவை அழித்துக் பேணத்தவறியதால் தங்களை தாங்களே அழித்து கொள்ளக்கூடியதாக இச்சமுதாயம் மாறிவிட்டது.

இதை நபிகள் நாயகம் (ஸல்) பின்வருமாறு கூறுகின்றார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள் என்றார்கள். அப்போது ஒரு மனிதர் ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள் பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள் நான் ஆம் என்று சொல்லிலிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும் பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும் என்று கூறிவிட்டு நான் எதை (செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான்.

ஒன்றைச்செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்! என்றார்கள். 

அறிவிப்பவர்: ஆபூஹுரைரா ரலி

நூல்: முஸ்லிம்-2559

நாம் சாதாரணமாக எடை போடும் இந்த நாவுதான் ஒரு சமுதாய அழிவிற்கே காரணமாக அமைந்துள்ளது என்பதை பார்க்கும் போது நாவை பேணத் தவறினால் அது நம்மை அழிவை நோக்கி கொண்டு செல்லும் என்பதை விளங்கலாம். எனவே தான் ஒரு நபித்தோழர் தான் எதை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கேட்கும் போது அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள். 

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத் (14870)