Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: அண்டை வீட்டார் உரிமைகள்

Last Updated on August 10, 2023 by

01) முன்னுரை

மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான்.

இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள் அனாதைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்

(அல்குர்ஆன் 4 : 36)

நாம் நன்மை செய்யவேண்டியவர்களின் பட்டியலில் அண்டைவீட்டாரை அல்லாஹ் இணைத்துள்ளான். மேலும் உறவினரான அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அல்லது உறவினரல்லாத அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நன்மை செய்வது முஸ்லிம்களின் கடமை என்பதை மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவ்வசனத்தின் இறுதியில் “பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்” என்ற வாசகத்தின் மூலம் அண்டைவீட்டாரை அற்பாக நினைக்கூடாது என்பதையும் அவர்களையும் நம்மை போன்றே எண்ண வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.

நூலின் ஆசிரியர் : 

 MI முஹம்மது சுலைமான்