Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

முன்னுரை

வருடந்தோறும் ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நல்லதொரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தில் தொடர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம்.

கடந்த 2018 வருடம் ரமலான் உரையில் திருக்குர் ஆனின் 36வது அத்தியாயமாகிய யாஸீன் சூராவினுடை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அந்த தலைப்பில் தொடர் உரையாற்றுவதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் சார்பில் எனக்கு அளிக்கப்பட்டது.

எப்போதும் ரமலானில் ஆற்றப்படும் தொடர் உரைக்கான தலைப்பை தேர்வு செய்ய பல முறை ஆலோசிக்கப்படும் பல மாதங்களுக்கு முன்பே நிர்வாகிகளிடம் இதற்கான தலைப்புகள் கோரப்படும்

அவ்வாறு ஆலோசனையில் பெறப்படும் தலைப்புகளில் அப்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என்று தெரிவு செய்யப்படும் தலைப்பே தொடர் உரைக்கான தலைப்பாக இறுதி செய்யப்படுவது வழக்கம். இம்முறை தலைப்பு தேர்வு செய்யப்படுவதின் பிண்ணனியில் திருக்குர் ஆன் மாநாடு என்ற எண்ணமே தலையாயிருந்தது.

திருக்குர் ஆனை முழு சமூகத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜனவரி 27, 2019 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர் ஆன் மாநில மாநாடு எனும் தலைப்பில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்துவதென அப்போதைய நிர்வாகத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மாநாட்டை மக்களிடையே பிரதானப்படுத்தும் விதமாக குர்ஆன் தொடர்புடைய தலைப்பு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருந்தது.

குர் ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு அதில் உள்ள வசனங்களுக்கான விளக்கவுரையை ரமலான் மாதம் முழுக்க மக்களுக்கு அளிப்போம் என்ற அடிப்படையிலேயே யாஸீன் அத்தியாயம் விளக்கவுரையாற்ற தேர்வு செய்யப்பட்டது.

இந்த அத்தியாயத்தில் மக்களுக்கு தேவையான பல அறிவுரைகளும் அடங்கியுள்ளது என்பது இதை தேர்வு செய்ய மற்றொரு முக்கிய காரணமாகும்.

அவ்வாறு ரமலானில் ஆற்றப்பட்ட யாஸீன் விளக்கவுரையை எழுத்து வடிவில் நூலாக்க விரும்பி எழுத்து நடைக்கு மாற்றித் தருமாறு எனது நண்பரும் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்றவருமான சுஜா அலீ எம்.ஐ.எஸ்.ஸி அவர்களிடம் கேட்டேன்.

அவரும் சிரமம் பாராது முழு பேச்சையும் நூல் வடிவத்திற்கேற்ப எழுத்து நடைக்கு மாற்றித்தந்தார். அவை சரிபார்க்கப்பட்டு, தேவையான மாற்றம் செய்து இறுதியில் நூல் வடிவமாக தங்கள் கைகளில் தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ்…

திருக்குர்ஆன் வசனங்களுக்கு எவ்வாறு விளக்கமளிக்கப்படுகின்றது என்ற புரிதலை மேம்படுத்திக் கொள்ள இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இறைவன் நம் அனைவரது நல்ல நோக்கங்களுக்கு உரிய கூலியை தருவானாக..

இப்படிக்கு :

ஆர்.அப்துல் கரீம் M.I.SC