Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

Last Updated on October 28, 2023 by

முன்னுரை

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. 

அல்குர்ஆன் : 51 : 56 

அல்லாஹ் மனித சமுதாயத்தை படைத்த நோக்கமே நாம் அவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக மட்டும்தான் என்பதை மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகைகளையே இஸ்லாமியர்கள் பலர் முறையாக நிறைவேற்றுவதில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் எல்லா நேரமும் இறைவனை எப்படி வணங்கி கொண்டே இருக்க முடியும்? என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் ஏழலாம். 

தொழுகை மட்டுமே இறைவணக்கம் என்றே இஸ்லாமியர்களின் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தொழுகை என்பது இறைவணக்கத்தில் ஒரு பகுதி. உண்மையில் வணக்கம் என்ற வார்த்தையின் தெளிவான அர்த்தம் என்னவென்றால் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டவற்றை மட்டும் செய்து அவன் தடுத்தவற்றை விட்டும் முழுவதும் விலகிக் கொள்வதுதான்  இறைவணக்கம் என்பதாகும். 

அல்லாஹ் ஒரு நாளில் ஐவேலை தொழுமாறு கட்டையிட்டுதுள்ளான். இறைவனுடைய கட்டளையை ஏற்று நாம் ஐவேலை தொழுவதால் நாம் இறைவனை வணங்கி வழிபட்டவர்களாவோம். 

அது போன்று நாம் சாப்பிடும் போதும், மலம், ஜலம் கழிக்கும் போதும் , ஆடை அணியும் போதும், திருமண வாழ்க்கையிலும், மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கடையிட்டவற்றை செய்தும், தடுத்தவற்றை முழுமையாக விலகிக் கொண்டால் நாம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் இறைவனை வணங்கி வழிபட்டவர்காகவே இருந்து கொண்டிருபோம்.  .

நாம் தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து கண்விழிக்கும் போதும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த முறைப்படி நடந்து கொண்டால் நம்முடைய தூக்கம் வணக்கமாகிவிடும். இது போன்றுதான் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும். 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இறைவணக்கமாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் “அன்றாட வாழ்வில் இஸ்லாம்” என்ற இந்த சிறிய தொகுப்பை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து தொகுத்துள்ளோம். 

இந்த அமலை  இறைவனுடைய திருமுகத்தை மட்டும் நாடி செய்யக்கூடிய நற்காரியமாக அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.!

இப்படிக்கு : அப்துந் நாசிர் M.I.SC