Tamil Bayan Points

070. ஹஜ்ருல் அஸ்வத் முத்தமிடும் போது தக்பீர் கூற வேண்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா?

பதில்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1613

ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது  காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நூல்: புகாரி 426

நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.