Tamil Bayan Points

ஹஜ்ஜின் மூன்று வகையான அம்சங்கள்!

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on September 17, 2020 by

ஹஜ்ஜின் மூன்று வகை

2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(திருக்குர்ஆன்:2:196.)

இவ்வசனம் தமத்துவ என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன? அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ஹதீஸ்களில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. திருக்குர்ஆனின் சில வசனங்களின் சரியான பொருளை அறிந்திட ஹதீஸ் எனும் நபிவழி அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அதுகுறித்த விபரம் இதுதான்:

ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.

ஹஜ்ஜுடன் உம்ரா எனும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல் மற்றொரு வகை.

முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமில் இருந்து விடுபட்ட நிலையில் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.

இந்த மூன்றாவது வகையே தமத்துவ் எனப்படும்.

உம்ராவுக்கும், ஹஜ்ஜுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்ளூர்வாசிகள் செய்யும் எல்லாக் காரியத்தையும் மூன்றாவது வகையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் செய்யலாம். இதன் காரணமாக இந்த வகை ஹஜ் செய்பவர் ஒரு பிராணியைப் பலியிட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

தமத்துவ என்ற ஹஜ் பற்றி திருக்குர்ஆன் பொதுவாகக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை விளக்கி விட்டார்கள்.