Tamil Bayan Points

ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா?

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

(புகாரி-1643)

உர்வா அறிவித்தார்.
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை’ என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல் என்னும் குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வாவை வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா – மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை’ என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை’ எனக் கூறினார்.
ஸுஹ்ரி கூறுகிறார்:
நான் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மானிடம் இதுபற்றித் தெரிவித்தேன். அதற்கவர் கூறினார்: நான் கேள்விப்படாத விளக்கமாகும் இது! மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் அணிவார்கள் என்று ஆயிஷா(ரலி) குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனில் கஅபாவைத் வலம்வரவேண்டும் என்று கூறி அல்லாஹ் ஸஃபா, மர்வாவைப் பற்றிக் குறிப்பிடாததால், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுகிறோம். அல்லாஹ்வோ ஸஃபாவைப் பற்றிக் கூறாமல் கஅபாவைத் வலம்வருவது பற்றிக் கூறுகிறானோ? ஸஃபா மர்வாவுக்கிடையே நாங்கள் ஓடுவது எங்களின் மீது குற்றமாகுமா?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்’ என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று பல அறிஞர்கள் கூறியதை கேட்டுள்ளேன். நான் இந்த வசனம் இரண்டு சாரார் விஷயத்தில் இறங்கியது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாரார் மடமைக் காலத்தில் ஸஃபா, மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதியவர்கள். இன்னொரு சாரார் ஏற்கெனவே அவ்வாறு வலம் வந்து கொண்டிருந்து இஸ்லாத்தில் நுழைந்த பின்பு அல்லாஹ் கஅபாவைப் பற்றிக் குறிப்பிட்ட பின்பும் ஸஃபாவைக் குறிப்பிடாமல் கஅபாவை மட்டும் வலம் வருமாறு கூறியதால் இப்போது அவ்விரண்டையும் வலம் வருவது பாவமாகுமோ எனக் கருதியவர்கள்.