Tamil Bayan Points

வேலையின் காரணமாக ஜம்உ செய்யலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on October 23, 2016 by Trichy Farook

நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றேன். அங்கு அஸர் தொழ முடியாத காரணத்தால் லுஹர் தொழும் போது அஸர் தொழலாமா?

பதில்

வழக்கமாக்க கூடாது

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்திலேயே தொழுதாக வேண்டும். தங்களைப் போன்று வேலைக்குச் செல்பவர்களுக்குத் தொழுகையை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் இருந்தாலும் தொழுகைக்கென ஒரு சிறிய இடைவேளை தான் தேவைப்படும். எந்த அலுவலகமாக இருந்தாலும் டீ குடிப்பதற்கும், மலஜலம் கழிப்பதற்கும் அனுமதி தராமல் இருக்க மாட்டார்கள். இந்தக் காரியங்களை நிறைவேற்றத் தேவைப்படும் நேரத்தை விட தொழுகையை நிறைவேற்றிட குறுகிய நேரமே தேவைப்படும்.

அலுவலகத்தில் தொழுவது கூடுமா? அந்த இடம் சுத்தமானது தானா? என்ற சந்தேகங்கள் ஏற்படுவதும் இதுபோன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம். பள்ளிவாச-ல் சென்று ஜமாஅத்துடன் தொழுவதற்கு வசதியுள்ளவர்கள் அங்கு சென்று தொழுவது தான் சிறப்பு! ஆனால் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அது போன்ற வாய்ப்பைப் பெற முடியாத கட்டத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால் அலுவலகத்திலேயே தொழுது கொள்ளலாம். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர-)
நூல்: புகாரி 335, 438,

எனினும் தவிர்க்க முடியாத கட்டத்தில் லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து, “ஜம்உ’ ஆக தொழுவதற்கு அனுமதியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 543

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: திர்மிதீ 172

இதை அடிப்படையாகக் கொண்டு லுஹர் தொழுகையுடன் சேர்த்து அஸரையும் தொழுது கொள்ளலாம் என்றாலும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
நபி (ஸல்) அவர்களும் இதை அடிக்கடி செய்ததாக நாம் பார்க்க முடியவில்லை. தமது வாழ்நாளில் ஒரு தடவை இவ்வாறு செய்துள்ளதாகத் தான் ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

மேலும் தொடர்ந்து இவ்வாறு செய்வது, தொழுகையை குறிப்பிட்ட நேரத்தில் தான் தொழ வேண்டும் என்ற இறைக் கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும். தவிர்க்க முடியாத பட்சத்தில் இது போன்று இணைத்துத் தொழுவதில் தவறில்லை என்றே இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.