Tamil Bayan Points

வெற்றியாளர்கள் யார் – 6

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on January 21, 2017 by Trichy Farook

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.

இறைவனை நினைவுகூறுபவர்கள்

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர்.

எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர்களையோ தனக்கு விருப்பத்திற்குரியவர்களையோ குடும்பத்தினரையோ தொழிலில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வர விருக்கின்ற இன்ப துன்பங்களை பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இச் சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி தூக்கம் உணவு போன்ற அன்றாடம் அவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் நிறுத்திவிடுகின்றது. இச்சிந்தனை போக்குகளின் தாக்கம் சில நேரங்களில் தவறான முடிவுகளின் பக்கமும் தற்கொலைகளின் பக்கமும் கொண்டு செல்கின்றது.

நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிந்தனை போக்கு இறை நினைவு மட்டுமே!

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 62 :10

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏

நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 8 : 45)

اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ‌ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ ۚ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَـلْقِ بَصْۜطَةً‌‌ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

“உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலி-மையை அதிகப் படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! (என்றும் அவர் கூறினார்).

அல்குர்ஆன் 7:69

மன நிம்மதி தரும் மாமருந்து

அனைத்து மனிதர்களுமே நிம்மதியையும் ஆறுதலையும் தேடியே அலைகின்றனர். விருப்பத்ததிற்குரிய எத்தனையோ நபர்கள் இவ்வுலகில் இருந்தாலும் அவர்களை நினைக்கும் போது நிம்மதி கிடைப்பதில்லை. இன்னும் உற்று நோக்குவோமேயானால் இவ்வாறு நினைக்கும் போது இருக்கின்ற நிம்மதியும் தொலைந்து போவதை உணர்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ பிறர் பேசக்கூடிய பேச்சுக்களினாலோ மனிதனின் மனம் காயப்படுத்தப்படுகின்றது.

இச்சூழ்நிலையில் ஒருவன் இறைவனையும் இறைவனின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தால் “மனிதனுக்கு அவன் நினைத்தது யாவும் கிடைக்காது என்றும் இறைவனின் விருப்பத்திற்குரியவர்கள் சோதிக்கப்படுவார்கள் என்றும் இறைவன் தூதர்களாக தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கே பெரும் பெரும் சோதனைகள் வந்தது என்றும் நமக்கு ஏற்பட்ட துன்பம் இறைவன் புறத்திலிருந்து வந்தது ஆகையால் அதற்கும் இறைவனிடம் கூலி உண்டு’ என்றும் அவன் நினைக்கும் போது அது அவனுக்கு ஆறுதலாகவும் சுமைதாங்கியாகவும் அமைகின்றது.

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ‏

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13 :28

பாவங்களை உணரவைக்கும் இறைநினைவு

அனைத்து மனிதர்களுமே தவறுகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் அமைகின்றது. ஒரு மனிதன் தவறு செய்யும் போதோ செய்ய நினைக்கும் போதோ இவ்வாறு செய்தால் அல்லாஹ்விடம் தண்டிக்கப்படுவோம் என்று நினைத்தாலோ அல்லது மற்றவர்கள் இறைவனை நினைவூட்டினாலோ இறைவனுக்கு பயந்து அந்த தவறை செய்யமாட்டான். இங்கு இறைவனை நினைவுகூர்வது அவனுக்கு இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது.

 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

(அல்குர்ஆன் 8 : 2)

மேலும் ஒரு மனிதன் பாவங்களிலிருந்து விலக வேண்டும் என்றால் முதலில் அவன் அதை பாவம் என்று உணரவேண்டும். தான் செய்வது சரி என்று நினைப்பதினால் தான் பெரும்பாலானவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். சிலருக்கு அது உணர்த்தப்படும் போதும் விலகுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செய்கின்ற பாவங்களை பிறரிடம் ஒப்புக்கொள்ளவில்லையானாலும் இதற்காக அவன் எவ்வளவு சாக்கு போக்குகளை சொன்னாலும் அவன் செய்தது சரியா? தவறா? என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏ وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ‏

மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறிய போதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான் .

(அல்குர்ஆன் 75 : 14,15)

செய்த தவறு யாருக்கும் தெரியாவிட்டாலும் கூட அது இறைவனுக்கு தெரியும் என்பதை அவர்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். ஒவ்வொருவர் செய்கின்ற தீமைகளுக்கும் அதை தடுப்பதற்கு நீதிமன்றம், காவல்துறை இருந்தாலும் அது போதுமானதாக அமையாது. இங்கு தப்பித்தாலும் இறைவனிடம் மாட்டிக்கொள்வோம் என்ற இறை நினைவே அவனை பாவங்களை ஒப்புக்கொள்ள வைத்து மன்னிப்பு தேடும் பண்பை வரவைக்கின்றது .

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3 : 135)

நம் நினைவில் இறைவன்

அன்றாடம் ஒவ்வொருவரும் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் என்று தனக்கு விருப்பத்திற்குரியவர்களையும் அவர்கள் செய்த உதவிகளையும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இவர்களையெல்லாம் சிந்தித்து பார்க்கும் கட்டத்தில் நமக்கு இவர்களை கொடுத்த இறைவனை நினைக்க மறந்து விடுகின்றோம். மேலும் அழகு, படிப்பு, செல்வம், அறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவைகளை அவன் நமக்கு கொடுத்துள்ளான்.

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ணி முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல் குர்ஆன் 16:18)

يٰۤاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْؕ هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப்பாருங்கள்! வானத்திலி-ருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன் 35 : 3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி :7405

இறைவனை வணங்குவதற்கு காரணமும் இறைசிந்தனையே!

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ ؕ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 22 :34)

இறைவனுக்குரிய வணக்கவழிபாடுகளை சரியாக கடைபிடிப்பவர்களை உற்று நோக்கினால் அவர்களிடத்தில் இறைசிந்தனை அதிகமாக இருப்பதை காண்கின்றோம்.

فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِۙ‏ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் (தான்) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்

(அல்குர்ஆன் 24:36,37)

இறைநினைவை தடுக்கும் பொருளாதாரம்

இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இறைவன் கட்டளையிட்ட வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற காரியங்களை செய்வதில்லை. இதற்கு காரணம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அவர்களின் கவனம் பொருளாதாரத்தை பெருக்குவதுதிலே குறிக்கோளாக அமைகின்றது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே இழப்பை அடைந்தவர்கள்.

(அல்குர்ஆன் 63 :9)

இதனால் இறைவனிடம் அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஜும்ஆ என்ற பெரும்பாக்கியத்தையும் கூட சிலர் கடைபிடிப்பதில்லை .

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

அல்குர்ஆன் 62:9

இங்கு நாம் பனூ இஸ்ரவேலர்களை நினைக்க கடமைப்பட்டுள்ளோம். சனிக்கிழமை அவர்களுக்கு புனிதமாக்கப்பட்டது. அதில் அவர்கள் வரம்புமீறியதால் குரங்குகளாக அவர்கள் மாற்றப்பட்டனர்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

وَسْـــَٔلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ‌ۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ‌ ۙ لَا تَاْتِيْهِمْ‌‌ ۛۚ كَذٰلِكَ ‌ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

“அல்லாஹ் அழிக்கப்போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப்போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? ” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்) ” எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـٮِٕیْنَ‏

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.

(அல்குர்ஆன் 7:163-166)

இவ்வுலகில் ஆடம்பரமாக வாழவேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தை பெருக்க முயன்று தொழுகையை விடுவோமேயானால் மறுமை தேர்வில் தோல்வியை தழுவுவோம் என்பதை உணரவேண்டும். இறைவனிடத்தில் இருப்பது இவ்வுலகை விட சிறந்ததாகும் .

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” எனக் கூறுவீராக!.

(அல்குர்ஆன் 62:11)

لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــًٔـا‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

அவர்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 58 : 17)

அதற்காக பொருளாதாரத்தை கவனிக்காமல் எந்நேரமும் தொழுதுகொண்டே இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு உலக ஆதாயத்தை தேடவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது .

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 62 :10)

இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!