Tamil Bayan Points

வெற்றியாளர்கள் யார் – 3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on January 21, 2017 by Trichy Farook

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.

நல்லறங்கள் செய்வோர்

முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.

(அல்குர்ஆன் 28:67)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் ; 22;77)

முதலாளியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!

பெரும்பாலும் வேலைசெய்பவர்கள் தன் முதலாளி தனக்கு இடுகின்ற கட்டளையை வெளிப்படையாக புலம்பிக்கொண்டோ அல்லது மனதிற்குள் புழுங்கிக்கொண்டோ செய்வதை காண்கின்றோம். அந்த வேலையை மனமுவந்து செய்வதற்கும் இறைவனிடத்தில் கூலி இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.

1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கைகொண்டார்.

2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு)

அறி : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல் : புகாரி 97

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக்கூடிய, நம்பகமான கருவூலக்காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!

அறி : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),

நூல்: புகாரி 2319

தன் முதலாளி தன்னை நம்பி தன்னிடத்தில் ஒப்படைக்கின்ற பொருட்களில் மோசடி செய்பவர்களும் மக்களில் இருக்கின்றனர். இது நயவஞ்கனின் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்கத்தால் அதற்கு மாறுசெய்வான்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி : 2749

வழியறியாதவர்களுக்கு பாதையை அறிவித்துக் கொடுப்பதும் நல்லறமே

ஒரு முதியவர் பஸ் நிலையத்தில் நின்று இந்த பஸ் எங்கு செல்கிறது? என்று கேட்டால் அதற்கு ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இக்கேள்விக்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பதில் கூறுவார்கள். என்றாலும் சிலருக்கு அது அவருக்குப்புரியாத போது அதை அவர் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார். அப்போது கோபம் கொள்ளாமல் அவருக்கு புரியும் விதமாக கூறவேண்டும்.

இது பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே மருத்துவமனை, மஸ்ஜித், ஆட்டோ நிலையம், குறிப்பிட்ட ஒரு நபருடைய வீடு போன்ற பல இடங்களுக்கும் நாம் வழிகாட்டுவதை கூட இஸ்லாம் நல்லறம் என்றே கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 2891

உயிருக்கு போராடுபவருக்கு உதவுவதும் நல்லறமே !

பேருந்து நிலையங்கள் போன்ற நெருக்கடியான இடங்களில் விபத்துகள் ஏற்படுவது எதார்த்தமே! இவ்வாறு விபத்துகள் ஏற்படும் போது உயிருக்கு போராடி கொண்டிருப்பவருக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவாமல் பிரச்சனைகளிருந்து விலகினால் சரி என்று அனைவரும் ஒதுங்கிவிடுகின்றனர்.

இந்நேரத்தில் அந்த மனிதருக்கு உடலால் முடியுமென்றால் உதிரத்தையோ அல்லது இயன்ற அளவு பணத்தையோ கொடுத்து உதவினால் ஓர் உயிரை காப்பாற்றிய நன்மை கிடைக்கும்.

 مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும், ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்

(அல்குர்ஆன் 5:32)

ஒருவர் மற்றவரை காப்பாற்றும் போது அதை பார்க்கின்ற பொது மக்கள் என்றாவது ஒரு நாள் தங்கள் கண் முன்னால் நடக்கும் விபத்துகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு விபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்.

இந்நிலை தொடருமானால் மனித சமுதாயம் பெரிய பின் விளைவை சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நோயாளிக்கு எந்த ஒரு மருத்துவரும் முன் பணம் செலுத்தாவிட்டால் அறுவை சிகிச்சை செய்வதில்லை. இரவு 10 மணிக்கு மேல் உடல்நிலை சரியில்லாதவர்(ஏழை)களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள செவியர்கள்(நர்ஸ்கள்) தங்களது தூக்கத்தை மக்கள் கெடுத்துவிட்டதாக கோபம் கொள்கின்றனர். அரசாங்கம் இந்த மக்களை கவனிப்பதற்காகத் தான் பகல் டியூடி இரவு, டியூடி என்றே நேரத்தை அவர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கின்றது இதற்கு அரசாங்கம் இவர்களுக்கு சம்பளத்தைகொடுத்திருந்தும் இவர்களுக்கு கை காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறந்த முறையில் கவனிக்கின்றன.

இதை தொழிலாக பார்க்காமல் மக்களின் உயிர்களை காக்கின்ற பொது தொண்டாக இஸ்லாம் மனிதர்களை கவனிக்கச் சொல்கின்றது.

தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமே!

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருந்தால் சரி என்ற பழமொழிக்கேற்ப எந்த உதவியும் செய்யாமல் இருப்பவர்கள் கூட சும்மா இருந்து கொண்டு குடும்பங்களை பிரிப்பது போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருப்பதை காண்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ யாருக்கும் எந்த நல்லதையும் செய்ய முடியாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமாகும்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்” என்று சொன்னார்கள். “அவருக்கு (உழைக்க உடல்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவர் நல்லதை’ அல்லது நற்செயலை(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்” என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் : 1834

நன்மைக்கு முந்துவோம்

 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது.

அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 57:20)

இவ்வாறு தீமையான காரியங்களுக்கு முந்தாமல் நன்மையான காரியங்களை செய்வதற்கு போட்டியிடவேண்டும்

وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்

(அல்குர்ஆன்: 2:148)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்கடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்கடையே வாழ்கிறீர்களோ அவர்கல் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்கல் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத் துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும்” என்று பதிலத்தார்கள்.

(நூல் : புகாரி 843)

இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!