Tamil Bayan Points

2) விலக்கப்பட்ட உணவுகள்

நூல்கள்: விலக்கப்பட்ட உணவுகள்

Last Updated on February 23, 2022 by

விலக்கப்பட்ட உணவுகள்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன். அல்குர்ஆன் 2:173

இந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள் யாவை. அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் எவை ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது.

திருமறைக் குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய வசனங்களில் இந்த வசனமும் ஒன்றாகும்.

இந்த வசனத்தையும் இதுபோன்ற வசனங்களையும் அவற்றின் மேலோட்டமான பொருளில் புரிந்து கொண்டால் ஏனைய வசனங்களை மறுக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் இவ்வசனம் பற்றி நாம் விரிவாக ஆராய்கின்றோம்.

 

தாமாகச் செத்தவை

விலக்கப்பட்ட உணவுகளில் ‘தாமாகச் செத்தவை’ இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. தாமாகச் செத்தவைகளை உண்ணக்கூடாது என்றால் அடித்தோ கழுத்தை நெறித்தோ வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது. தாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும்.

கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் அடிப்பட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும் முட்டப்பட்டுச் செத்ததும், வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் 5:3 வசனத்தில் இறைவன் தெளிவு படுத்துகிறான்.

தாமாகச் செத்தவை என்பது முறையாக அறுக்கப்படாதவற்றைக் குறிக்கும் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

‘முறையாக அறுக்கப்படாதவைகளை உண்ணக்கூடாது’ என்பதையும் பொதுவாக விளங்கிக் கொள்ளக்கூடாது. விலங்கினத்தையும், பறவையினத்தையும், மட்டுமே இது குறிப்பிடுகின்றது. கடல்வாழ் பிராணிகள் தாமாகச் செத்தாலும் அந்தச்சாவு எந்த முறையில் ஏற்பட்டாலும் அவற்றை உண்ணலாம். இந்த வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்’ என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 64, நஸயீ 59,330, அபூதாவூத் 76, இப்னுமாஜா 370, 381, 382, 3237, அஹ்மத் 8380, 8557, 8737, 14481, முஅத்தா 37, தாரிமி 723, 1926, இப்னு குஸைமா 111, 112, இப்னு ஹிப்பான் 1243, 1244, 5258, ஹாகிம் 491, 492, 493, 498, 4997

‘தாமாகச் செத்தவை ஹராமாக்கப்பட்டுள்ளன’ என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. உண்பதற்கு ஹராமாக்கப் பட்டுள்ளன என்று கூறாமல் பொதுவாக ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

உண்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. வேறு எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்வதா? அல்லது உண்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. வேறு வகையில் பயன்படுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்வதா?

இது பற்றி ஆதாரப்பூர்மான ஹதீஸ்களை நாம் ஆராயும் போது முரன்பட்ட இரு கருத்துக்களுக்கும் சான்றாக ஹதீஸ்களைக் காண முடிகின்றது. ஆனாலும் இந்த இரு வகையான ஹதீஸ்களையும் இணைத்து சிந்திக்கும் போது முரண்பாடற்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மைமூனா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்கள்: புகாரி 1492, 2221, 5531, 3592, 3597, முஸ்லிம் 542, 543, 544, 546, அஹ்மத் 2251, 2861, 2894, 3273, 3282, 3341, 25568, , அபூதாவூத் 3592, 3597, நஸயீ 4162, 4163, 4164, 4165, 4166, 4188, இப்னுமாஜா 3600, 3601

ஸவ்தா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆடு செத்துவிட்டது. அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இந்த ஆடு செத்துவிட்டது என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ‘அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள் செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘தாமாகச் செத்தவை. ஓட்டப்படும் இரத்தம், பன்றியின் இறைச்சி – நிச்சயமாக அது அசுத்தமாகும் – மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை தவி வேறெதுவும் உண்பவர் மீது ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் காணவில்லை என்று கூறுவீராக’ (6:145) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். ‘நீங்கள் உணவாக இந்தத் தோலை உட்கொள்ளவில்லையே? பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்!’ எனவும் கூறினார்கள். உடனே ஸவ்தா(ரலி) அவர்கள் செத்த ஆட்டின் தோலை உரித்து வர ஆளனுப்பினார்கள். அதைப்பாடம் செய்து அதிலிருந்து தண்ணீர்ப்பை தயாரித்துக் கொண்டார்கள். அது கிழியும் வரை அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: அஹ்மத் 2870

ஆதாரப்பூர்வமான இவ்விரு ஹதீஸ்களை குறிப்பாக பெரிய எழுத்தில் உள்ள சொற்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்த ஹதீஸில் செத்த ஆட்டின் தோலைப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அனுமதிக்கிறார்கள். உண்பவர் மீது, உணவாக, உண்பது தான் ஹராம் ஆகிய வார்த்தைகள் தாமாகச் செத்தவற்றை உண்பது மட்டுமே ஹராம், வேறு வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிவிக்கின்றன.

இதற்கு முரணாக அமைந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி, (மாற்றாரின்) வழிபாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பதை அல்லாஹ் விலக்கியுள்ளான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ் தூதரே! தாமாகச் செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கூடாது. அது ஹராம் தான் என்று கூறிவிட்டு யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பை ஹராமாக்கியவுடன் அதை உருக்கி விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிடலானார்கள்.’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, அஹ்மத் 6702, அபூதாவூத் 3025, திர்மிதீ 1218, நஸயீ 4183, 4590, இப்னுமாஜா 2158, 13948

ஒரு கூட்டத்தினருக்கு ஒரு பொருளை உண்பதற்கு அல்லாஹ் ஹராமாக்கினால் அதன் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அஹ்மத் 2111, 2546, 2889, அபூதாவூத் 3026

உண்பதற்குத் தடுக்கப்பட்டால் அவற்றை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஆதாரப்பூர்வமான இவ்விரு செய்திகளையும் முரண்பாடில்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது?

முதல் ஹதீஸ் தோலைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது ஹதீஸ் கொழுப்பைப் பற்றிக் கூறுகிறது. எனவே தோலுக்கும் கொழுப்புக்கும் வேறு வேறு சட்டங்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில் தோல் சம்பந்தப்பட்ட ஹதீஸில் ‘செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான்’ என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பொதுவான காரணத்தைக் கூறுகிறார்கள். இந்தக் காரணம் தோல் மட்டுமின்றி அனைத்தையும் உள்ளடக்கும் காரணமாகும்.

கொழுப்பு சம்மந்தப்பட்ட ஹதீஸில் ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடை செய்தால் அதை விற்பதையும் அதனால் கிடைக்கும் வருவாயையும் ஹராமாக்கிவிட்டான் என்று காரணம் கூறப்படுகிறது. இந்தக் காரணமும் பொதுவானது தான். கொழுப்பை மட்டும் குறிப்பதல்ல.

எனவே ஒருவகை ஹதீஸ் தோலைப் பற்றிப் பேசுகிறது. மற்றொரு வகை ஹதீஸ் கொழுப்பைப் பற்றிப் பேசுகிறது என்று கூறமுடியாது. இரண்டு ஹதீஸ்களிலும் பொதுவான காரணங்கள் கூறப்படுகின்றன.

இரண்டில் ஒன்றை ஏற்றால் மற்றொன்றை ஏற்க முடியாத நிலை ஏற்படும். அல்லாஹ்வுடைய தூதரின் வார்த்தையில் எந்த முரண்பாடும் இருக்காது என்ற உணர்வுடன் கவனமாகச் சிந்தித்தால் இரண்டுக்கும் முரண்பாடில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஹலாலாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பிராணியை எடுத்துக் கொண்டால் அதில் உண்பதற்குப் பயன்படும் இறைச்சி, கொழுப்பு, ஈரல், நுரையீரல், குடல் போன்றவைகளும் உள்ளன. உண்பதற்குப் பயன்படாத தோல், மயிர், குளம்பு, குடலில் தேங்கியுள்ள சாணம் மற்றும் எலும்பு போன்றவைகளும் உள்ளன.

அந்த ஹலாலான உயிர்ப்பிராணி செத்துவிட்டால் உண்பதற்குப் பயன்படும் பொருட்களை உண்ணவோ வேறு வகையிலோ பயன்படுத்தக் கூடாது. உண்பதற்கு உதவாத பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளங்கினால் முரண்பாடு நீங்கி விடுகின்றது.

‘உண்ண ஹராமாக்கியதை விற்கவும் ஹராமாக்கி விட்டான் என்ற வாக்கியம் உண்ண ஹராமாக்கப்பட்ட மாமிசம் கொழுப்பு போன்றவற்றையே குறிக்கின்றது.

‘செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான்’ என்ற வாக்கியம் உண்பதுடன் சம்பந்தப்படாத பொருட்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றது.

ஒரு ஹதீஸ் உண்பதற்குரிய பாகங்களைப் பற்றியும் மற்றொரு ஹதீஸ் உண்பதற்குரியதாக இல்லாத பாகங்களைப் பற்றியும் கூறுகின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்டால் இதில் முரண்பாடு நீங்கிவிடும்.

முறையாக அறுக்கப்படாதவை என்பதிலிருந்து வேட்டையாடப்படும் பிராணிகளும் விலக்குப் பெறுகின்றன. எந்த முறையில் அறுக்க வேண்டுமோ அந்த முறையை வேட்டையின் போது கையாள வேண்டியதில்லை. பின்வரும் வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் அறியலாம்.

அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப் பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 5:4)

இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.  நாங்கள் பயிற்றுவிக்கப்பட்ட நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறோம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘(தான் சாப்பிடாமல்) உனக்காக அவை கொண்டு வருவதைச் சாப்பிடு!’ என்றார்கள். ‘அவை கொன்று விட்டாலுமா?’ என்று நான் கேட்டேன். ஆம்! கொன்று விட்டாலும் தான் என்று விளக்கமளித்தார்கள். நாங்கள் அம்பால் வேட்டையாடுகிறோம் என்று கூறினேன். அதற்கவர்கள் ‘(அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடு! அதன் அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடாதே என்றார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி) நூல்: புஹாரி 5477, 7397

நாங்கள் நாய்கள் மூலம் வேட்டையாடுகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். பயிற்றுவிக்கப்பட்ட நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அவை (சாப்பிடாமல்) உங்களுக்காகவே கொண்டு வந்ததைச் சாப்பிடுங்கள்! கொன்று இருந்தாலும் சரியே. வேட்டை நாய் அதைச் சாப்பிட்டிருந்தால் அவை தமக்காகவே பிடித்தன. எனவே அதைச் சாப்பிட வேண்டாம். அதனுடன் வேறு நாய்கள் கலந்திருந்தால் (வேட்டையாடப்பட்டதை) சாப்பிடாதே என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி) நூல்: புகாரி 5483, 5487

நீ உனது நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயர் கூறியிருந்தால் அது(சாப்பிடாமல்) உனக்காக கொண்டுவந்தால் கொன்றிருந்தாலும் சாப்பிடு! (வேட்டைப் பிராணியில் ஒரு பகுதியை) அது சாப்பிட்டு விட்டால் நீ சாப்பிடாதே! ஏனெனில் அது தனக்காகவே பிடித்தது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத வேறு நாய்களுடன் கூட்டாக வேட்டையாடி உனக்காக கொண்டு வந்தால் அதைச் சாப்பிடாதே! ஏனெனில் எது அதைப் பிடித்தது என்பதை நீ அறியமாட்டாய். வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒருநாள் இரண்டு நாட்களுக்குப் பின் அவற்றைக் கண்டு பிடித்தால் அதில் உனது அம்பின் அடையாளங்கள் தவிர வேறு அடையாளம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிடு! தண்ணீரில் விழுந்து கிடந்தால் அதைச் சாப்பிடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி) நூல்: புகாரி 5485

இது சம்பந்தமான மேலும் பல ஹதீஸ்கள் புகாரி 2054, 5475, 5476, 175; முஸ்லிம் 3560, 3561, 3562, 3563, 3564, 3565, 3566; திர்மிதீ 1385, 1389, 1390, 1391; நஸயீ 4190, 4191, 4192, 4193, 4195, 4196, 4197, 4198, 4199, 4200, 4201; அபூதாவூத் 2464, 2465, 2466, 2467, 2468, 2470, 2471; இப்னுமாஜா 3199, 3202, 3205, 3206; அஹ்மத் 17534, 17538, 17544, 17547, 18560, 18563, 18570 ஆகிய ஹதீஸ்களைக் காண்க!

வேட்டைக்காக நாயை அல்லது அம்பை அனுப்பும்போது பிஸ்மில்லாஹ் கூறினால் கொன்ற நிலையில் பிடித்து வந்தாலும் அதை உண்ணலாம்.

உயிருடன் பிடித்து வந்தால் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்து சாப்பிடலாம் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம். வேட்டையாடுவது சம்பந்தமான மேலும் பல விதிகளையும் இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

வேட்டை என்ற பெயரால் பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது. வேட்டையாடப் பயன்படுத்தும் கருவி அப்பிராணிக்குள் ஊடுருவிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும். ஊடுருவவும் வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த அடிப்படையில் துப்பாக்கிகளால் வேட்டையாடலாம். ஏனெனில் அதன் குண்டுகள் பிராணிகளுக்குள் ஊடுருவும்.

கவன்(உண்டிவில் – கவட்டை) மூலம் வேட்டையாடி வேட்டைப் பிராணி செத்துவிட்டால் அதை உண்ணக் கூடாது. ஏனெனில், அதிலிருந்து புறப்படும் கல் ஊடுருவிச் செல்வதில்லை. உயிருடன் விழுந்தால் ‘அறுத்து உண்ணலாம். கல்லால் எறிந்து வேட்டையாடுவதும் ஈரக் களிமண் உருண்டைகளைக் குழாயில் வைத்து வாயால் ஊதி வேட்டையாடுவதும் இதே வகையைச் சேர்ந்தவைதான். இதுபோன்ற வேட்டைகளில் பிராணிகள் செத்துவிட்டால் உண்ணக் கூடாது. மேற்கண்ட ஹதீஸிலிருந்து இத்தனை விஷயங்களையும் விளங்கலாம்.

நாம் வேட்டையாட அனுப்புகின்ற ஒரு நாய் வேட்டையாடி விட்டு அதில் ஒரு பகுதியை உண்டால் அதை நாம் உண்ணலாமா என்பதில் இரு கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. உண்ணக்கூடாது எனக் கூறும் ஹதீஸ்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இதற்கு முரணாகத் தோன்றும் மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்.

வேட்டைக்கு அனுப்பும் நாய்கள் வேட்டையாடப்பட்டதைச் சாப்பிட்டால் (அதை நாம் சாப்பிடலாமா?) என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவை சாப்பிட்டாலும் நீ அதைச் சாப்பிடலாம்’ என விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: அபூஸஃலபா(ரலி) நூல்கள்: அஹ்மத் 6438, அபூதாவூத் 2496, 2474

இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை தாம். ஒன்று மற்றொன்றை மாற்றிவிட்டது என்று முடிவு செய்ய வழியில்லை. ஏனெனில் எது ஆரம்ப நிலை? எது இறுதி நிலை? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவ்விரு ஹதீஸ்களில் ஒன்று ஆதாரப்பூர்வமானதாகவும் மற்றொன்று பலவீனமானதாகவும் இருந்தால் பலவீனமானதை விட்டுவிட்டு ஆதாரப்பூர்வமானதை எடுத்து நடக்கலாம். ஆனால் இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையே!

இந்நிலையில் இரண்டில் எதைச் செய்வது பேணுதலானதோ எது திருக்குர்ஆனின் போதனையுடன் ஒத்து வருகின்றதோ அதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவதே முறையானதாகும்.

நாம் முன்னர் எடுத்துக்காட்டிய வசனத்தில் ‘வேட்டையாடும் பிராணிகள் (எதையும் உண்ணாமல்) உங்களிடம் அப்படியே கொண்டு வந்தவைகளை உண்ணுங்கள்’ என்று கூறப்படுகின்றது. புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ்கள் இந்த வசனத்துடன் ஒத்துப் போகின்றன. அஹ்மத், அபூதாவூதில், இடம்பெறும் இந்த ஹதீஸ் இந்த வசனத்துடன் முரண்படுகின்றது.

மேலும் முதல் ஹதீஸை ஏற்று, வேட்டைப் பிராணிகளால் சாப்பிடப்பட்டதை உண்ணாமல் இருப்பதால் எந்தக் கேள்வியும் வராது. பேணுதலுக்கு ஏற்றதாக உள்ள முதல் ஹதீஸினடிப் படையில் செய்யப்படுவதே சரியானதாகும்.

வேட்டையின் போது அம்பால் தாக்கப்பட்ட பறவை மற்றும் பிராணிகள் உடனே தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டால் அதை உண்ணக்கூடாது. ஆனால் அம்பால் தாக்கப்பட்டவை ஓடிச் சென்று பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு செத்துக் கிடக்கக் கண்டால், அது செத்ததற்கு நாம் எய்த அம்புதான் காரணம் என்பதும் உறுதியானால் அதை உண்ணலாம்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வேட்டையாடப்படும்போது முறையாக அறுப்பு நிகழவில்லையாயினும் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் இதற்குத் தனி விதிகளைக் கூறுவதால் தாமாகச் செத்தவற்றில் இவை அடங்காது என்பதை அறியலாம்.

இவற்றைத் தவிர வேறு வகையில் இறந்த எந்தப் பிராணியும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். அதை உண்ணக்கூடாது. உயிருடன் உள்ள பிராணியின் ஒரு உறுப்பை அல்லது ஒரு பகுதியை வெட்டி எடுத்தால் அதுவும் தாமாகச் செத்தவற்றில் அடங்கும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

‘உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: இப்னுமாஜா 3207

 

இரத்தம் விலக்கப்பட்டதாகும்

தாமாகச் செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் குறிப்பிடுகிறான். உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியின் இரத்தமும் உண்ண அனுமதிக்கப்படாத பிராணியின் இரத்தமும் விலக்கப்பட்டவையாகும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்டு இரத்தத்தை சர்வ சாதாரணமாக உண்கின்றனர். முஸ்லிம் வியாபாரிகள் இரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விரண்டும் கூடாததாகும். இந்த வசனத்தில் பன்றியின் மாமிசத்தையும் தடை செய்திருப்பதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு மதிப்பளித்து பன்றியின் மாமிசத்தை முஸ்லிம்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால் அதே தொடரில்தான் இரத்தம் தடை செய்யப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு முஸ்லிம்கள் மதிப்பளிக்காதது வேதனைக்குரியதாகும். பன்றியின் மாமிசத்தை உண்பதும் இரத்தம் உண்பதும் சம அளவிலான குற்றங்களே என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அதில் சிறிதளவு கூட உட்கொள்வது கூடாது! அதிக அளவு உண்பது எவ்வளவு குற்றமோ சிறிதளவு உண்பதும் அதே அளவு குற்றமாகும் என்பதை நாம் அறிவோம்.

இரத்தத்தைப் பொருத்தவரை இந்த பொது விதியைப் பயன்படுத்த முடியாது. மாமிசத்துடன் ஒட்டியிருக்கும் இரத்தம், மாமிசத்தின் உள்ளே உறைந்து போயிருக்கும் இரத்தம், ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டியதில்லை. சிவப்பு நிறம் மாறும் அளவுக்கு மாமிசத்தைப் பலமுறை கழுவ வேண்டியதில்லை. பிராணியை அறுத்த பின் இரத்தம் வெளியேறிவிட்டால் மாமிசத்தை கழுவாமலேயே உண்ணலாம். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியலாம்.

 

ஓட்டப்பட்ட இரத்தம்

‘தாமாகச் செத்தவை, ஓட்டப்பட்ட இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று (நபியே) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 6:145)

நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் 2:173 வசனத்தில் இரத்தம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் 6:145 வசனத்தில் ஓட்டப்பட்ட இரத்தம் என்று கூறப்படுகின்றது. முந்தைய வசனத்தில் கூறப்படும் இரத்தம் என்பது ஓட்டப்பட்ட இரத்தத்தையே குறிக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஓட்டப்பட்டபின் மாமிசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தம், வேட்டை நாய்களால் உயிரற்ற நிலையில் பிடித்து வரப்படும் பிராணிகளுக்குள் உறைந்து போய்விட்ட இரத்தம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.

அறுக்கப்பட்டபின் பீறிட்டு வெளியேறும் இரத்தத்தையே இறைவன் தடை செய்திருக்கிறான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘ஓட்டப்பட்ட இரத்தம்’ என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.

கைவிரலில் வெட்டுப்பட்டு இரத்தம் வெளிப்பட்டால் பலரும் உடனே இரத்தம் வடியும் விரலை வாயில் வைத்துச் சூப்புகின்றனர். இவ்விரத்தமும் ஓட்டப்பட்ட இரத்தமே. எனவே அதைத் துப்பிவிட வேண்டும்.

இரத்தம் விலக்கப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் ஒரு ஐயம் தோன்றலாம். நாம் வாழுகின்ற நவீன காலத்தில் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்ததைச் செலுத்திப் பிழைக்க வைக்கின்றனர். இதைச் செய்யலாமா? செய்தால் இறைவனின் கட்டளையை நாம் மீறியவர்களாக ஆவோமா? என்பதே அந்த ஐயம்.

இந்த ஐயத்திற்குரிய விடையை இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை ஆராயும் போது நாம் விளக்குவோம்.

 

பன்றியின் மாமிசம்

தாமாகச் செத்தவை, இரத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து ‘பன்றியின் மாமிசத்தை’ இறைவன் விலக்கியுள்ளதாக கூறுகின்றான்.

இந்த வார்த்தை மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த ஆராய்ச்சியில் இறங்கும் முன் தமிழக முஸ்லிம்களிடம் நிலவும் தவறான வழக்கத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இறைவன் பன்றியிறைச்சியைத் தடை செய்துள்ளதால் பன்றியை முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த வெறுப்பு எல்லை மீறிப் ‘பன்றி’ என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை. நாலுகால் பிராணி, கட்டைக்கால், பொல்லாமிருகம் என்பது போன்ற வார்த்தைகளையே பன்றியைக் குறித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பன்றி என்று கூறிவிட்டால் வாயைக் கழுவ வேண்டும், உலூச் செய்ய வேண்டும், குளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவோரும் நம்மிடையே உள்ளனர். இதன் மூலம் தாங்கள் அதிகம் பேணுதல் உள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இந்தப்போக்கு பக்தியின் வெளிப்பாடோ பேணுதலின் அடையாளமோ அன்று. பன்றியை உண்ணக்கூடாது என்று இறைவன் நமக்கு கட்டளையிட்டுள்ளான். அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ நமக்குத் தடை விதிக்கவில்லை.

திருக்குர்ஆனில் நான்கு இடங்களில் கின்ஸீர்(பன்றி) எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கனாஸீர்(பன்றிகள்) என்ற வார்த்தை ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்து. அந்த வார்த்தையே தடை செய்யப்பட்டது என்றால் இறைவன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். இறைத்தூதரும் பன்றி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்பு வாய் கழுவவில்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உலூச் செய்யவும் இல்லை. உலூச் செய்ய ஏவவுமில்லை.

எனவே இந்த தவறான நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விடுபடவேண்டும்.

தடை செய்யப்பட்டவற்றை விளக்கும் போது பன்றி எனக் கூறாமல் பன்றியின் மாமிசம் என்று இறைவன் கூறுகின்றான்.

பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டிருந்தால் பன்றி தடுக்கப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். ‘பன்றியின் மாமிசம்’ என்று இறைவன் இங்கே கூறுகிறான். எலும்பு, கொழுப்பு, குடல், ஈரல், நுரையீரல், கல்லீரல், இறைச்சி என்று பல்வேறு பொருட்கள் பிராணிகளில் உள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி வார்த்தைகள் உள்ளன. பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டவை என்றால் ‘பன்றி தடை செய்யப்பட்டது’ என்று இறைவன் கூறியிருப்பான். அவ்வாறு கூறாமல் பன்றியின் இறைச்சி என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். அப்படியானால் பன்றியின் இறைச்சியைத் தவிர மற்ற பகுதிகளை உண்ணலமா? என்ற ஐயம் பலருக்கும் தோன்றலாம்!

இவ்வாறு புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தான் பன்றியின் இறைச்சி என்ற வாசகம் அமைந்துள்ளது. ஆயினும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பன்றியின் அனைத்துப் பாகங்களுமே ஹராம் என்று விளங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி மற்றும் சிலைகளை விற்பனை செய்வதைத் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, திர்மிதீ 1218, நஸயீ 4183, 4590, அபூதாவூத் 3025, இப்னுமாஜா 2158, அஹ்மத் 13948, 13971

பன்றியின் மாமிசத்தை மட்டுமின்றி பன்றியையே விற்பனை செய்ய நபி(ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எது விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டு விட்டதோ அதை உண்பதும் ஹராம் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

ஆகவே பன்றியின் மாமிசம் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தாலும் பன்றி முழுமையாகவே தடை செய்யப்பட்டு விட்டதாக ஹதீஸ்களில் கூறப்படுவதால் பன்றியை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறியலாம்.

 

அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை.

நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஹராம் என இவ்வசனம் கூறுவதைப் பார்ப்போம்.

‘அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை’ என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ‘உஹில்ல’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ‘சப்தமிடப்பட்டவை என்பதாகும். அன்றைய அறியாமைக் கால அரபு மக்கள் அல்லாஹ் அல்லாத தெய்வங்களின் (?) பெயரைச் சப்தமிட்டுக்கூறிவிட்டு அறுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே ‘அல்லாஹ் அல்லாதவர்களுக்காகச் சப்தமிடப்பட்டவை’ என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்களை சப்தமின்றிக் கூறி அறுத்தால் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்றே இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தில் விலக்கப்பட்ட உணவுகளை இறைவன் பட்டியலிடுவது போல் 5:3 வசனத்திலும் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த வசனத்தில் ‘கற்களுக்காக அறுக்கப்பட்டவை’ என்று தெளிவாகக் கூறுகிறான். உஹில்ல என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தாமல் துபிஹ (அறுக்கப்பட்டவை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக சப்தமிடப்பட்டவை என்பது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை 5:3 வசனத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யலாம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகள் என்றாலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுமானால் அவற்றை உண்ணக்கூடாது. பன்றியின் மாமிசம், தாமாகச் செத்தவை போன்று, இவையும் ஹராமாகும்.

நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக என்று முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், பிராணிகளை அறுக்கின்றனர். உண்கின்றனர். மேற்கண்ட வசனத்தை மறுமை நாளின் விசாரணையை அஞ்சி – சிந்தித்தால் இவ்வாறு அறுப்பதும், உண்பதும் இவ்வசனத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளதை உணரலாம்.

ஆயினும் தெளிவான இந்த வசனத்தைக் கூட அர்த்தமற்றதாக்கும் வகையில் விதண்டாவாதங்களில் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களில் (?) சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நாம் – நமக்காக நாம் உண்பதற்காக பிராணிகளை அறுக்கிறோம். நமது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களுக்காகவும் அறுக்கிறோம். நமக்காகவும் விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவதால் இதுவும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகத் தான் அறுக்கப்படுகின்றது. இதை உண்ணக்கூடாது என்று கூறமுடியுமா? இதுபோல் தான் அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவதும் அமைந்துள்ளது. விருந்தினருக்காக அறுக்கப்படுவதை உண்பது போலவே அவ்லியாக்களுக்காக அறுக்கப்பட்டதையும் உண்ணலாம் என்று அவர்கள் வாதம் செய்கின்றனர்.

இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசங்களை இவர்கள் உணராதிருப்பதே இந்த விதண்டா வாதத்திற்கு அடிப்படையாகும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும் போது அதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுபோலவே அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும்போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்பது அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்பட்டவை என்று சிறிதளவு அறிவுள்ளவரும் விளங்க மாட்டார். அல்லாஹ்வுக்கு என்றால் அவன் உண்பதற்காக அன்று, மாறாக இந்தப் பிராணியின் உயிர் அவனுக்குரியது, அதை அவனுக்கே உரித்தாக்குகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டால் அதை உண்ணக்கூடாது என்பதே இதன் பொருள்.

நமக்காகவும் நமது விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுவதில்லை. அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுகின்றது. இந்த வித்தியாசத்தைத் தான் அவர்கள் விளங்குவதில்லை.

அவ்லியாக்களுக்கு அறுப்பவர்கள் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்ல. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக, புரிந்த அருளுக்கு நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள் புரிவார் என்பதற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது. அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது மாமிசமோ, இரத்தமோ அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும் பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது. அவ்லியாவுக்காக அறுக்கும்போதும், இரத்தமோ மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார்.

விருந்தாளிக்காக அறுக்கும்போது மாமிசம் தான் அவரைச் சென்றடைகிறது. அல்லாஹ்வைப் போல் அவர் அருள்புரிவார் என்று எவருமே நம்புவதில்லை. விருந்தாளிகள் மீது பக்தி கொள்வதுமில்லை.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் ‘அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்படுதல்’ அன்று. மாறாக அவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துதல் என்பதே ஆகும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் அல்லாஹ் அல்லாதவர் உண்பார் என்பதற்காக அறுக்கப்படுவதன்று. அல்லாஹ் அல்லாதவர் மீது நமக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதற்காக அறுக்கப்படுவதே ஆகும். இவ்வாறு அறுக்கப்படுவதே, விலக்கப்படுகின்றது. அல்லாஹ் அல்லாதவர் உண்பதற்காக அறுக்கப்படுவது விலக்கப்பட்டதாக ஆகாது. இந்த அடிப்படையை உணராதவர்களின் வாதம் விதண்டாவாதமே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களுக்காகப் பிராணிகளை அறுப்போர், அவ்வாறு அறுக்கப்பட்டவைகளை உண்ணலாம் எனக் கூறுவோர் மற்றொரு விசித்திரமான வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர்.
அல்லாஹ்வின் பெயர் எதன் மேல் கூறப்பட்டதோ அதை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 6:118) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ண அல்லாஹ் அனுமதிக்கிறான். அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள், அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டாலும், அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்கப்படுவதால் அதை உண்ணலாம் என்பது இவர்களின் வாதம்.

இரண்டு வசனங்களும் தனித்தனியான இரண்டு நிபந்தனைகளைக் கூறும் வசனங்கள் ஆகும். இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று கூறினால் இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். உதாரணமாக, தொழுகைக்கு உலூவும் வேண்டும், உடையும் வேண்டும். இரண்டும் தனித்தனி நிபந்தனைகள் ஆகும். ஒருவன் உலூவைச் செய்து விட்டு நிர்வாணமாகத் தொழுதால் அல்லது உடையணிந்து விட்டு உலூவின்றித் தொழுதால் அத்தொழுகை நிறைவேறும் என்று யாரும் சொல்வதில்லை. இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர இருந்தாக வேண்டும் என்றே அனைவரும் புரிந்து கொள்வர்.

இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகளை உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும். என்பது ஒரு நிபந்தனை. அல்லாஹ்வுக்காகவே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக் கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தீர்கள்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூற முடியும். யாருக்காக அறுத்தீர்கள்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூற முடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது. இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்து விடுகின்றது.

ஒருவர் ஒரு சமாதியில் போய் ஸஜ்தாச் செய்கிறார். சமாதியில் அடங்கப்பட்டவரை மதிப்பதற்காக ஸஜ்தாச் செய்கிறார். இவ்வாறு ஸஜ்தா செய்யும்போது அல்லாஹு அக்பர் என்று கூறுகிறார். அல்லாஹு அக்பர் எனக் கூறிவிட்டதால் சமாதிக்குச் செய்த ஸஜ்தாவை எவ்வாறு நியாயப்படுத்த முடியாதோ அதுபோலவே அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுப்பதும் அமைந்துள்ளது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுவது ஹராம் ஆகும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மேலும் பல சான்றுகள் உள்ளன.
உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக. (அல்குர்ஆன் 108: 23)

தொழுவது இறைவனுக்காக மட்டுமே அமைய வேண்டும் என்பது போலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.
நான் அலி(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒருவர் வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலி(ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி(ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்போது நான் அமீருல் மூமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி(ரலி) அவர்கள் ‘யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான். தம் பெற்றோரைச் சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். பித்அத்களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான். பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான். (இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: அபுத்துஃபைல்,. நூல்கள்: முஸ்லிம் 3657, 3659, நஸயீ 4346, அஹ்மத் 813, 908, 1338

ஒரு ஈயின் காரணமாக ஒரு மனிதர் சொர்க்கத்திற்குச் சென்றார். இன்னொரு மனிதர் ஒரு ஈயின் காரணமாக நரகத்திற்குச் சென்றார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு?’ என்று கேட்டனர்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரண்டு மனிதர்கள் ஒரு கூட்டத்தினரின் சிலையைக் கடந்து சென்றனர். அதைக் கடந்து செல்லும் யாரும் அதற்காகப் பலியிடாமல் செல்வதில்லை. அந்தக் கூட்டத்தினர் அவ்விருவரில் ஒருவரிடம் ‘(இந்தச் சிலைக்கு) பலியிடு’ என்றனர். அதற்கவர் ‘என்னிடம் பலியிடுவதற்கு ஏதுமில்லை’ என்றார். அதற்கவர்கள் ‘ஒரு ஈயையாவது பலியிடு’ என்றனர். இதனால் அவர் நரகம் சென்றார். அவர்கள் மற்றொருவரிடம் ‘பலியிடு’ என்றனர். அதற்கவர் ‘அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் எதனையும் நான் பலியிட மாட்டேன் என்றார்’ அக்கூட்டத்தினர் அவரது கழுத்தை வெட்டி விட்டனர். அவர் சொர்க்கத்தில் நுழைந்தார்’ என்று விளக்கினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி) நூல்: ஸூஹ்த் (இமாம் அஹ்மத்)

அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இந்த இரண்டு நபிமொழிகளும் தெளிவாக விளக்குகின்றன.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடுவது ஒரு புறமிருக்கட்டும். அல்லாஹ்வுக்காகப் பலியிடும் போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

‘புவானா’ என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இல்லை’ என்று கூறினார்கள். ‘அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கை வசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சை களையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக்(ரலி) நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்டதையே அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் நிறைவேற்றக் கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படுவதை உண்ணாமலும் இருக்க வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!