Tamil Bayan Points

4) விதியை நம்புவதில் முரண்பாடு

நூல்கள்: விதி ஓர் விளக்கம்

Last Updated on February 24, 2022 by

விதியை நம்புவதில் முரண்பாடு

விதியை நம்புமாறு மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆயினும் இஸ்லாத்தின் வேறு சில நம்பிக்கைகளும், கட்டளைகளும் மனிதனின் செயல்கள் எதுவும் விதிப்படி நடப்பதில்லை என்ற கருத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

மனிதன் செய்யும் நல்ல செயல்களின் காரணமாக சொர்க்கமும், தீய செயல்களின் காரணமாக நரகமும் வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் ஒருவன் செய்யும் தீய செயல்களும் அவனால் மீற முடியாத விதிப்படி தான் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது தீய செயல்கள் செய்தவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அது போல் நல்ல செயல் செய்தவன் அவன் மீது சுமத்தப்பட்ட மீறமுடியாத விதியின் காரணமாகவே நல்ல செயல்களைச் செய்தான். அப்படி இருக்கும் போது அவனுக்கு மட்டும் பரிசுகள் வழங்கி விட்டு மற்றவர்களை நரகில் போடுவது நியாயமாகுமா என்ற கேள்விகள் விதிக்கு எதிராக வந்து நிற்கின்றன.

திருக்குர்ஆனில் பல வசனங்களில் தொழுமாறும், நோன்பு நோற்குமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் கட்டளை இடுகின்றான். நன்மையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு வழங்கப்படவில்லையென்றால் ஏன் அல்லாஹ் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமைகளை விதிக்க வேண்டும்?

பொய் சொல்லாதே, திருடாதே, கொலை செய்யாதே என்றெல்லாம் ஏன் அறிவுறுத்த வேண்டும்?

எதற்கு மனிதனுடைய செயல்பாடுகளைக் கண்காணித்து பதிவேட்டில் பதிவு செய்ய வானவர்களை நியமிக்க வேண்டும்?

அது போல் நன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறும் தீமைகளைக் கண்டிக்குமாறும் திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

அல்லாஹ்வின் விதிப்படி தான் ஒருவன் நன்மை தீமைகளைச் செய்கிறான் என்றால் எதற்காகப் பிரச்சாராம் செய்ய வேண்டும்? யார் யார் நல்வழிக்கு வர வேண்டும் என்று விதியில் உள்ளதோ அவர்கள் தாமாகவே நேர்வழிக்கு வந்து விடுவார்கள். யார் யார் நல்வழிக்கு வரமாட்டார்கள் என்று உள்ளதோ அவர்கள் நம்முடைய பிரச்சாரத்தினால் நல்வழிக்கு வரமுடியாது.

அல்லாஹ் எண்ணற்ற நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்தான். எல்லாம் விதிப்படி என்றால் நபிமார்களை அனுப்பத் தேவை இல்லை. நபிமார்கள் அனுப்பப்பட்டாலும் அனுப்பப்படாவிட்டாலும் யார் நல்வழிக்கு வர வேண்டும் என்று அல்லாஹ் எழுதிவைத்துள்ளானோ அவர்கள் மட்டுமே நேர்வழிக்கு வருவார்கள். அப்படி இருக்கையில் நபிமார்களை அனுப்புவது பயனற்ற செயல் என்று கருதும் நிலை ஏற்படும்.

சொர்க்கம் நரகம் கூட அர்த்தமற்றதாகி விடும். ஒருவன் நல்லவனாக வாழ்வது அவனாகத் தீர்மானிப்பது அல்ல; விதிப்படி தான் என்றால் அவனுக்குச் சம்பந்தமில்லாத காரியங்களுக்காக அவனுக்குச் சொர்க்கத்தைக் கொடுப்பது ஏன்?

ஒருவன் தீய செயல் செய்வது அவனது விதிப்படி என்றால் அவனுக்கு இதில் சம்மந்தம் இல்லை என்றால் அவனிடமிருந்து வெளிப்பட்ட குற்றச் செயல்களுக்காக அவனுக்கு நரகத்தைக் கொடுப்பது என்ன நியாயம்?

விதிப்படி ஒருவன் தவறு செய்ததற்காக அவனைத் தண்டிக்கும் போது அல்லாஹ் நீதியாளன் என்பது கூட கேள்விக் குறியாகி விடும்.

பிரார்த்தனை செய்தாலும் செய்யாவிட்டாலும் எது விதிக்கப்பட்டதோ அது தான் நடக்கப் போகிறது எனும் போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு பல வசனங்களில் வலியுறுத்தப்படுகிறது.  இதுவும் விதிக்கு முரணாகத் தென்படுகிறது.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமின்றி உலக விஷயங்களிலும் கூட இந்த நிலை இருக்கிறது. பொருளாதாரத்தைத் திரட்டுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஒருவனுக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்று விதியில் உள்ளதோ அதுதான் அவனுக்குக் கிடைக்கும் என்றால் எதற்காக உழைக்குமாறு இஸ்லாம் கட்டளையிட வேண்டும்? உழைத்துத் தான் சம்பாரிக்க முடியும் என்றால் விதிப்படி நடக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறதே?

என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. மேற்கண்ட கேள்விகள் எழும் வகையில் திருக்குர்ஆனின் பல வசனங்களும் அமைந்துள்ளன. 

அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான் என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க : திருக்குர்ஆன் 3:86, 5:51, 9:19, 9:109, 28:50, 46:10, 61:7, 62:5, 14:27

மனிதர்கள் செய்யும் அநீதிக்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும் அதன் காரணமாகவே அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டவில்லை என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. விதியின்படி அனைத்தும் நடக்கின்றன என்ற கருத்துக்கு எதிராக இதுவும் உள்ளது.

“பாவம் செய்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” என்ற கருத்தில் பல வசனங்கள் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 9:80, 5:108, 9:24, 61:5, 63:6, 2:26, 9:96, 9:37, 16:107, 16:104, 39:3, 40:28

விதியின்படி அவர்களை அல்லாஹ் வழிகேட்டில் விடவில்லை; அவர்கள் முதலில் குற்றம் செய்தார்கள்; அதன் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டவில்லை என்ற கருத்தை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் மனிதன் தண்டிக்கப்படுவது பற்றியும், பரிசளிப்பது பற்றியும் பல வசனங்களில் கூறும் போது “நீங்கள் சம்பாதித்ததன் கூலியையே அனுபவிக்கிறீர்கள்” என்று அல்லாஹ் பல வசனங்களில் கூறுகிறான். 

பார்க்க : திருக்குர்ஆன் 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 6:70, 14:51, 30:41, 40:17, 42:30, 45:22, 74:38, 39:51, 41:17, 6:120, 7:96, 9:82, 9:95, 9:7,8, 45:14, 83:14, 29:69, 3:181,182, 8:51, 22:10, 89:24

மனிதன் சுய முயற்சியாலும், சுய உழைப்பினாலும் தான் தீய செயல்களைச் செய்தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

தான் எடுத்த முடிவின்படியே மனிதன் செயல்படுகிறான். அவன் விரும்பினால் நல்வழியைத் தேர்வு செய்யலாம். விரும்பினால் கெட்ட வழியைத் தேர்வு செய்யலாம் என்ற கருத்திலும் திருக்குர்ஆனில் பல வசனங்கள் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 2:57, 2:79, 2:90,  2:225, 3:117, 3:108, 3:182, 4:62, 5:80, 5:105, 6:116, 6:119, 6:129, 9:70, 10:8, 10:44, 10:108, 11:101, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 31:6, 34:50, 39:7, 39:50, 40:31, 42:20, 42:48, 43:76, 59:18, 62:7, 73:19, 74:37, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28

மனிதன் நல்லவனாக நடப்பதற்கும் கெட்டவனாக நடப்பதற்கும் மனிதனே பொறுப்பாளியாவான் என்ற கருத்து மேற்கண்ட வசனங்களில் அமைந்துள்ளது. இதை அப்படியே ஏற்றுக் கொண்டால் விதியை நாம் நம்ப முடியாது.

முரண்பட்ட இரண்டையும் நம்புவது யாராலும் சாத்தியமில்லாதது.

தீய வழி சென்றவர்கள் அதன் பழியை விதியின் மீது போட்டு தப்பித்துக் கொள்ளும் வகையில் வாதம் செய்வதைக் கண்டிக்கும் வசனங்களும் திருக்குர்ஆனில் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 6:148, 16:35, 36,47, 43:20

இந்த ஆதாரங்களையும் காரணங்களையும் நாம் கவனிக்கும் போது மனிதனின் செயல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட படி நடப்பதில்லை என்ற கருத்தைத் தருகின்றன. விதி என்ற ஒன்று இல்லை என்ற கருத்தையும் இவ்வசனங்கள் தாங்கி நிற்கின்றன.

முரண்பட்ட இரண்டை எப்படி நம்ப முடியும்?

மனிதனுக்கு நிகழும் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதியின்படி தான் நடக்கின்றன என்ற கருத்தும், மனிதனின் சுய உழைப்பினால் தான் நடக்கின்றன என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டில் ஒன்றை நம்பினால் மற்றொன்று தானாகவே மறுக்கப்பட்டு விடும். யாராலும் இரண்டையும் சேர்த்து நம்ப முடியாது.

விதிக்கு எதிரான வசனங்களை மட்டும் நம்பி விதிக்கு ஆதரவான வசனங்களை மறுக்கும் கத்ரிய்யா என்ற கூட்டத்தினர் உருவானதற்கு முரண்பட்ட இரண்டையும் எப்படி நம்ப முடியும் என்ற குழப்பமே காரணம்.

அது போல் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது. மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி விதிக்கு எதிரான வசனங்களை மறுக்கும் ஜப்ரிய்யா கூட்டத்தினர் உருவானதற்கும் இந்தக் குழப்பமே காரணம்.

இரண்டும் முரண்படுகின்றன என்பது உண்மைதான் என்பதை நாயகம் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

سنن ابن ماجه
85 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ، فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ، فَقَالَ: بِهَذَا أُمِرْتُمْ، أَوْ لِهَذَا خُلِقْتُمْ؟ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ، بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ”.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் அமர்ந்திருந்த சபைக்கு வருகின்றார்கள். அப்போது அத்தோழர்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உலகில் ஒரு மனிதன் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ் தான் தீர்மானிக்கின்றான் என்று ஒருவர் கூறினார். அவ்வாறல்ல நீங்கள் உழைத்ததுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கின்றான் என்று மற்றொருவர் கூறினார். இந்த சர்ச்சையைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று இதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இதனால் தான் அழிந்தனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

நூல்கள் : இப்னுமாஜா, அஹ்மத்

விதியைப் பற்றிக் கூறும் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றினாலும் ஒன்றுடன் மற்றொன்றை மோதவிட்டு சர்ச்சை செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட செய்தியில் கடும் எச்சரிக்கை செய்கின்றனர்.

இஸ்லாத்தின் எந்தக் கொள்கை குறித்தும் எந்தச் சட்டங்கள் குறித்தும் எந்தக் கேள்வி கேட்டாலும் அவை அனைத்துக்கும் ஏற்கத்தக்க அறிவுப்பூர்வமான விளக்கத்தை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால் விதியைப் பற்றி பேசும் போது அதில் சர்ச்சை செய்யாதீர்கள் என்று இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது.

விதியில் காணப்படும் முரண்பாடுகளை எந்த விவாதத்தின் மூலமும் நீக்க முடியாது. அதைச் சரிசெய்து மனிதனால் புரிந்து கொள்ள முடியாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்கண்ட எச்சரிக்கை மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.