Tamil Bayan Points

வாரி வழங்கிய வள்ளல் நபி 

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 28, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

நபிகளாரின் வாழ்கை ஏழ்மையாகவும் எளிமையாகவும் அமைந்து இருந்தது. தன் வாழ்கையில் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அது போன்ற நபிகளார் அவர்களின் வாழ்க்கையில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. 

நபிகளாரின் பிறப்பு வளர்ப்பு வாணிபம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தமது தந்தையை இழந்து விட்டார்கள். ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போது தாயும் இறந்துவிட்டார். நபிக்கு ஆறு வயதாக இருக்கும் போது அதுவரை பாசத்தோடு வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்துவிட்டார். அதன்பிறகு, தமது சிறியதந்தை அபூதாலிப் அவர்களுடைய அரவணைப்பில் வளந்தார்கள்.

சிறுவராக இருக்கும் போது ஆடு மேய்க்கும் வேலையைச் செய்த அனுபவம் நபிகளாருக்கு உண்டு. வாலிபராக ஆனதும் சிரியா சென்று வியாபாரம் செய்துவர, தமது சிறிய தந்தைக்கு உதவியாளராக இருந்தார்கள். வியாபாரத்தைக் கற்றுக் கொண்ட பிறகு சுயமாக வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் மிக ஆர்வமாகவும் நேர்மையாகவும் இருந்ததால் நபியிடத்தில் பலரும் வியாபாரத் தொடர்பு வைக்கத் துவங்கினர். குறுகிய காலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது; வறுமை நீங்கி முன்னேற்றம் கிடைத்தது. செழிப்பான வாழ்வுக்கு உயர்ந்தார்கள்.

وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى

وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான். உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

(அல்குர்ஆன்: 93:7,8)

சிறுவயதில் வறுமையில் வாடிய நபியவர்கள்

இளம் பருவத்தில் நாணயமாகத் தொழில் செய்து செல்வத்தில் தன்னிறைவு பெற்ற நிலைக்கு உயர்ந்தார்கள். அப்போது, மற்றவர்களுக்குச் செய்து தருவது போன்று கதீஜா எனும் செல்வச் சீமாட்டிக்கும் வியாபாரம் செய்துவந்தார்கள். ஏற்கனவே கணவனை இழந்து விதவைப் பெண்ணாக இருந்த கதீஜா (ரலி) நற்குணவாதியாகத் திகழ்ந்தார். அவருக்கு நபிகளாரிடம் இருந்த நற்பண்புகள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இருவருக்கும் இடையே மணமாகும் போது முஹம்மது நபிக்கு வயது 25, கதீஜாஅவர்களுக்கு வயது 40, இருவருக்கும் அல்லாஹ் அளப்பறிய செல்வச் செழிப்பை அள்ளிக் கொடுத்திருந்தான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற மனமும், அதற்குரிய வாய்ப்பும் இருந்தது. இருவரும் சேர்ந்து சமூக அக்கறையுள்ள தம்பதிகளாகத் திகழ்ந்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவர் செய்யும் அனைத்து நல்லறங்களுக்கும் ஆதரவாக இருந்தார்கள். ஆகையால், அனைத்து வழிகளிலும் சமூகத்திற்கு உதவி செய்பவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். இதைப் பின் வரும் சம்பவம் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

(முதன் முதலில் குர்ஆன் வசனம் இறங்கிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்துச் சதைகள் படபடக்கத் திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் சென்றார்கள். “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்”என்றார்கள். அவ்வாறே (வீட்டாரும்) அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்த வற்றைத் தெரிவித்து’ விட்டு “எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ,

…”كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ”…

“அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கின்றீர்கள்; உண்மையே பேசுகின்றீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கின்றீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-3 , முஸ்லிம் (252)

இறைதூதுச் செய்தி

முஹம்மது (ஸல்) அவர்களுக்குத் திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 40வது வயதில் தான் ஏக இறைவனால் தூதராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். நபியவர்கள் செல்வந்தராக ஆவதற்காக ஓரிறைக் கொள்கையை முன்வைக்கவில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.’ ஏனெனில், தூதராக ஆவதற்கு முன்பாகவே மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் நிலையில் இருந்தார்கள். இதற்கு முக்கிய ஆதாரமாக மேலுள்ள செய்தி இருக்கிறது.

மக்காவில் கடும் எதிர்ப்புகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக இருந்த அபூதாலிப் இறந்த பிறகு, நபிகளாருக்கு நெருக்கடிஏற்பட்டது. முஸ்லிமாக இருப்பதே உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் அவ்வூரைவிட்டுச் செல்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்தான். செழிப்பாக வாழ்ந்து வந்த நபியவர்கள் கையில் தூக்கிச் செல்லும் அளவுக்குத் தங்க காசுகளை, வெள்ளிக்காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு நாடு துறந்து சென்றார்கள். அப்போது தம்மிடம் இருந்த காசுகள் மூலம் மதீனாவில் பள்ளிவாசல் கட்டுவதற்குச் சொந்தமாக இடம் வாங்கினார்கள்.

மதீனாவில் இறையில்லம் அமைத்தல் 

…وَسَمِعَ المُسْلِمُونَ بِالْمَدِينَةِ مَخْرَجَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ، فَكَانُوا يَغْدُونَ كُلَّ غَدَاةٍ إِلَى الحَرَّةِ، فَيَنْتَظِرُونَهُ حَتَّى يَرُدَّهُمْ حَرُّ الظَّهِيرَةِ، فَانْقَلَبُوا يَوْمًا بَعْدَ مَا أَطَالُوا انْتِظَارَهُمْ، فَلَمَّا أَوَوْا إِلَى بُيُوتِهِمْ، أَوْفَى رَجُلٌ مِنْ يَهُودَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِهِمْ، لِأَمْرٍ يَنْظُرُ إِلَيْهِ، فَبَصُرَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ مُبَيَّضِينَ يَزُولُ بِهِمُ السَّرَابُ،

மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருங்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து விட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித்தத் தம் வீட்டுக்குள் ஒதுங்கிய போது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், ‘அரபுக் குலமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்…’ என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபிகளாரைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக) ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர்.

அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (‘குபா’ வில்உள்ள) பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரின் குடியிருப்புப் பகுதியில் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) எழுந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது  அங்குவந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் அவர்களை இறைத்தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டிருந்தனர். இறுதியில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர்.

பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் இப்னு அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து “இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித்குபா) பள்ளிவாசலை’ நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாள்களில்) அந்தப்பள்ளியில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தம் வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக்கொண்டது.

அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த ஸஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம்பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப்படுத்த போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் இது தான் (நம்முடைய) தங்குமிடம்’ என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள்.

அவர்கள் இருவரும், ‘இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!’ என்றுகூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக்  கட்டினார்கள். அதைக் கட்டும் போது அவர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.

அறிவிப்பவர்: சுராகா இப்னு ஜுஃஷம் (ரலி),
நூல்: புகாரி-3906 

தம்மிடம் இருந்த செல்வத்தைக் கொண்டுதான் முஹம்மது நபி மதீனாவில் பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கினார்கள். அடக்கு முறை மூலமோ, அதிகாரம் செய்தோ அல்ல! தம்மிடம் மீதமுள்ள தொகை மூலமாக வருமானத்திற்கு உரிய வழியை ஏற்படுத்திக் கொண்டார்கள். சுயமரியாதையாக வாழ்ந்தார்கள்.

மக்காவில் கடும் தொல்லைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான முஸ்லிம்கள் நாடு துறந்து மதீனாவுக்கு வந்த சமயம், அங்கு அடிப்படை வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த முஹம்மது நபி அவர்கள் அந்த நிலையை சமாளிக்கப் பெரும் முயற்சி எடுத்தார்கள். ஜகாத் எனும் தர்மம் பற்றிய இறைக்கட்டளை இறங்கியது. பொது நிதியில் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. பொருளாதாரத் தேவையுடைய மக்களுக்கு அதிலிருந்து வாரி வழங்கப்பட்டது. ஆதரவற்றமக்களுக்கு அள்ளித்தரப்பட்டது.)

عَنْ أَنَسٍ،
أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ»، فَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي إِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، قَالَ: «خُذْ»، فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَرْفَعْهُ، فَقَالَ: فَمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ»، قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ فَمَا زَالَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள், ‘அதைப்பள்ளிவாசலில் பரப்பிவையுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அது நபி (ஸல்) அவர்களிடம்கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது, அப்போது, அப்பாஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப் போரில் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

உடனே, அப்பாஸ் (ரலி), தம்துணியில் அதை அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைச் சுமக்க முடியவில்லை .எனவே, ‘(உங்கள்தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோளின்) மீது தூக்கிவைக்கும்படி உத்தரவிடுங்கள்’ என்றுகூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் உத்தரவிடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), நீங்களாவது என் தோள் மீது இதைத்தூக்கி வையுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘வைக்க மாட்டேன்”என்று சொல்லி விட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத்தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும்) அதை அவர்களால் தூக்க முடியவில்லை.

எனவே, நபி (ஸல்) அவர்களிடம், ‘இதைத்தூக்கி என் மீது சுமத்தும்படி இவர்களில் ஒருவருக்கு உத்தரவிடுங்கள்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தம் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்து விட்டு அவர்கள் மறையும் வரை அவர்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம் கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்து விட்ட பின்பு தான் நபி (ஸல்) அவர்கள் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி-3165 

மக்களுக்கு நிதியை சேர்த்தார்கள் 

عَنْ عُقْبَةَ، قَالَ
صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ العَصْرَ، فَسَلَّمَ، ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ، فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக்கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பிவிடுவதை நான் விரும்பவில்லை . அதைப்பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா (ரலி),
நூல்: புகாரி-851 

ஒரு திர்ஹம் கூட மிஞ்சாமல் தர்மம் செய்த பின்பு தான் தம் இடத்தை விட்டு எழுந்தார்கள் என்பது முஹம்மது நபியிடம் இருந்த மக்கள் சேவையை விளக்குகிறது. மேலும், மறந்தும் கூட மக்களுக்குரிய பணத்தைத் தடுத்துவைத்துக் கொள்ளக்கூடாது; அவர்களுக்கு உரியதை உடனே தந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்ததை அறிய முடிகிறது. அதன் வெளிப்பாடாக, எல்லா வகையிலும் நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் அராசாங்கக் கருவூலத்தை முறையாக பயன்படுத்தினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَا مِنْ مُؤْمِنٍ إِلَّا وَأَنَا أَوْلَى النَّاسِ بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ} [الأحزاب: 6] فَأَيُّمَا مُؤْمِنٍ تَرَكَ مَالًا فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، فَإِنْ تَرَكَ دَيْنًا، أَوْ ضَيَاعًا فَلْيَأْتِنِي فَأَنَا مَوْلاَهُ

எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள்’ விரும்பினால், ‘இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவர்’ எனும் (அல்குர்ஆன்: 33:6) – இறைவசனத்தைஓதிக்கொள்ளுங்கள்..!

ஒரு நம்பிக்கையாளர் (இறந்து போய்) செல்வத்தை விட்டுச் சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் – அவர்கள் எவ்வகையினராயினும் சரி – அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! (இறக்கும்போது) ஒருகடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-4781 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ المُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا؟» فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى، وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ» فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الفُتُوحَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ المُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»

கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ‘இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா?” என்று கேட்பது வழக்கம். ‘அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச் சென்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம்’ உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்த போது அவர்கள், ‘நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்துவிடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை விட்டுச் செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்’ என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-5371 

நாட்டு மக்களின் தனிப்பட்ட கடனையும் கூட அடைக்கும் ஆட்சியாளரை நினைத்தால் மனம் நெகிழ்ந்து போகிறது. இன்றோ, குடிமக்களின் பெயரால் கடனை வாங்கிவிட்டு அதை அடைக்காமலும் அதை மக்களுக்கு முழுமையாகச் செலவழிக்காமலும் ஊழல் செய்யும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் பொது நிதியை எப்படிப் பக்குவமாகக் கையாள வேண்டும் என்ற அரசியல் பாடம் முஹம்மது நபியின் வாழ்க்கையில் இருக்கிறது. இதை எவராலும் மறுக்க முடியாது.

தர்மப் பொருளில் நபிகளார் காட்டிய கவனம் 

ஏழை, எளிய மக்களுக்குக் கொடுக்கும் ஜகாத் போன்ற பொது நிதியில் இருந்து தமது தேவைக்காகக் கடுகளவும் நபியவர்கள் எடுத்துக் கொண்டதில்லை. தமக்கு மிக நெருக்கமான நபர்கள் வற்புறுத்திக் கொடுத்த ஒரு சில அன்பளிப்புகளைத் தவிர, தமது வாழ்க்கையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு மற்றவர்கள் கொடுக்கும் தர்மப் பொருட்களை ஒரு போதும் வாங்கவில்லை. அவற்றை ஒரேயடியாகப் புறக்கணித்தார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ إِذَا أُتِيَ بِطَعَامٍ، سَأَلَ عَنْهُ، فَإِنْ قِيلَ: هَدِيَّةٌ، أَكَلَ مِنْهَا، وَإِنْ قِيلَ: صَدَقَةٌ، لَمْ يَأْكُلْ مِنْهَا

நபி (ஸல்) அவர்களிடம் ஒர் உணவுப் பொருள் கொண்டு வரப்படும் போது, அதுகுறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிடமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-1953 

 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ
«إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي، ثُمَّ أَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْقِيهَا»

“நான் என் வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பது உண்டு. பின்னர் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்” என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-1940 

 قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَخَذَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ» لِيَطْرَحَهَا، ثُمَّ قَالَ: «أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»

(நபியவர்களின் பேரனான) ஹஸன் (ரலி) ஸதகா பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்துவாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘சீ; சீ’ எனக் கூறி துப்பச் செய்துவிட்டு, ‘நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது  உனக்குத் தெரியாதா?’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-1491 

தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது; பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு நபியவர்களின் குடும்பத்திற்கும் இருந்தது. இதில் எந்தளவுக்கு நபியவர்கள் உறுதியாக இருந்தார்கள்! என்பதற்கு மேற்கண்ட சம்பவம் சான்று. ஆட்சித்தலைவர், ஆன்மீக த்தலைவர் எனும் வகையில், வசதிகளைப்  பெருக்கிக் கொள்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்வதே நபியின் இலட்சியமாக இருந்தது.

அதே சமயம், தமக்கும் குடும்பத்தாருக்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம் போன்ற உலகியல் இன்பங்களைச் சுருக்கிக் கொண்டார்களே தவிர, மறுமை வெற்றிக்காக அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதை, அள்ளிக் கொடுப்பதை ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை.

வாரி வழங்கிய வள்ளல்  நபி

 عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமளான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-6 

 …«يَا أَبَا ذَرٍّ أَتُبْصِرُ أُحُدًا؟» قَالَ: فَنَظَرْتُ إِلَى الشَّمْسِ مَا بَقِيَ مِنَ النَّهَارِ، وَأَنَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرْسِلُنِي فِي حَاجَةٍ لَهُ، قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا أُحِبُّ أَنَّ لِي مِثْلَ أُحُدٍ ذَهَبًا، أُنْفِقُهُ كُلَّهُ، إِلَّا ثَلاَثَةَ  دَنَانِيرَ»…

நபி (ஸல்) அவர்கள்’அபூதர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்’ என்றேன், ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமல் இருப்பதை நான் விரும்பவில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: புகாரி-1408 

இந்தச் செய்தி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நபியிடம் கொடைக்குணம் நிறைவாக இருந்தது என்பதைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது. எவரேனும் எதாவது உதவி கோரினால், அவர் கேட்டது தம்மிடம் இருக்கும் பட்சத்தில் நபியவர்கள் அதைக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். எதையும் வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்லும் பேச்சுக்கு இடமே கிடையாது.

مَا سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قَطُّ فَقَالَ: لاَ

நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒரு போதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னது கிடையாது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: புகாரி-6034 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ
جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ، فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ: أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ فَقَالَ القَوْمُ: هِيَ الشَّمْلَةُ، فَقَالَ سَهْلٌ: هِيَ شَمْلَةٌ مَنْسُوجَةٌ فِيهَا حَاشِيَتُهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَكْسُوكَ هَذِهِ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا فَلَبِسَهَا، فَرَآهَا عَلَيْهِ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَحْسَنَ هَذِهِ، فَاكْسُنِيهَا، فَقَالَ: «نَعَمْ» فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَمَهُ أَصْحَابُهُ، قَالُوا: مَا أَحْسَنْتَ حِينَ رَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَهَا مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يُسْأَلُ شَيْئًا فَيَمْنَعَهُ، فَقَالَ: رَجَوْتُ بَرَكَتَهَا حِينَ لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَعَلِّي أُكَفَّنُ فِيهَا

‘ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் “புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்” என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) கூறிவிட்டு, “புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என மக்களிடம் கேட்டார்கள். அப்போது மக்கள், ‘அது சால்வை’ என்றனர். அப்போது ஸஹ்ல் (ரலி), ‘அது கரைவைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்’ என்று கூறினார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:)

அப்போது அந்தப் பெண்மணி, ‘இதனை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்துகொண்டு வந்த போது நபித்தோழர்களில்ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, ‘இறைத்தூதர்அவர்களே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை எனக்கு அணிவித்து விடுங்களேன்’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘சரி’ என்றுகூறிவிட்டு அவர்கள் (அதைக்கழற்றுவதற்காக) எழுந்து சென்றுவிட்டார்கள்.

அந்தத்தோழரிடம் அவரின் நண்பர்கள் “நீர் செய்தது அழகல்ல! நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் தான் அதைப்பெற்றுக் கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ‘ஒன்று கேட்கப்பட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே’ என்று கூறி அவரைக் கண்டித்தனர். அதற்கு அவர் “நபி (ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட சுபிட்சத்தை (பரக்கத்தை) அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும் போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை கேட்டேன்)’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஹாஸிம்,
நூல்: புகாரி-6036 

அல்லாஹ்வின் தூதர் அணிந்திருக்கும் சட்டையை ஒரு நபித்தோழர், தாம் இறந்த பிறகு பிரேதத்தைப் போர்த்தும் ஆடையாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். அவர் எதற்காகக் கேட்கிறார் என்பது நபிக்கும் தெரியாது. இருந்தாலும், கேட்ட உடனேயே தமது சட்டையைக் கழற்றித் தந்துவிட்டார்கள்.

அண்ணலார் மீது நபித்தோழர்கள்  எந்தளவுக்கு உயரிய பாசம் வைத்தார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் பறைசாற்றுகின்றது. ‘ நபியவர்கள் கட்டளையிட்டால் பொருளாதாரத்தை அள்ளிக் கொடுக்கும் நிலைக்கு, அடுத்தவரிடம் திரட்டித்தரும் அளவுக்கு அவரது தோழர்கள் பெரும்பாசம் வைத்திருந்தார்கள். உயிரையே கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள்.

அந்த நேசத்தை தமக்குச் சாதகமாக, அதுவும்  உலக ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் பயன்படுத்திக் கொண்டதேயில்லை. மாறாக, தான தர்மங்கள் செய்வது உட்பட அனைத்து விஷயத்திலும் அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டினார்கள். சில நேரங்களில் எவரேனும் தம்மிடம்  உதவி தேடிவரும் போது, கொடுப்பதற்கு ஏதும் இல்லாவிட்டால், அவருக்கு உதவுமாறு தமது தோழர்களிடம் பரிந்துரை செய்வார்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ
بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ، قَالَ: فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِينًا وَشِمَالًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا ظَهْرَ لَهُ، وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا زَادَ لَهُ»، قَالَ: فَذَكَرَ مِنْ أَصْنَافِ الْمَالِ مَا ذَكَرَ حَتَّى رَأَيْنَا أَنَّهُ لَا حَقَّ لِأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும் இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவிகேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றிக் கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.

அறிவிப்பவர்: அபூசயீத்அல்குத்ரீ (ரலி),
நூல்: முஸ்லிம்-3562 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَصَابَنِي الجَهْدُ، فَأَرْسَلَ إِلَى نِسَائِهِ فَلَمْ يَجِدْ عِنْدَهُنَّ شَيْئًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ رَجُلٌ يُضَيِّفُهُ هَذِهِ اللَّيْلَةَ، يَرْحَمُهُ اللَّهُ؟» فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَذَهَبَ إِلَى أَهْلِهِ، فَقَالَ لِامْرَأَتِهِ: ضَيْفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تَدَّخِرِيهِ شَيْئًا، قَالَتْ: وَاللَّهِ مَا عِنْدِي إِلَّا قُوتُ الصِّبْيَةِ، قَالَ: فَإِذَا أَرَادَ الصِّبْيَةُ العَشَاءَ فَنَوِّمِيهِمْ، وَتَعَالَيْ فَأَطْفِئِي السِّرَاجَ وَنَطْوِي بُطُونَنَا اللَّيْلَةَ، فَفَعَلَتْ، ثُمَّ غَدَا الرَّجُلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَقَدْ عَجِبَ اللَّهُ عَزَّ وَجَلَّ – أَوْ ضَحِكَ – مِنْ فُلاَنٍ وَفُلاَنَةَ» فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَيُؤْثِرُونَ عَلَى [ص:149] أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ} [الحشر: 9]

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்’ என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘(இவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!’ என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை’ என்று பதிலளித்தார். அவர், ‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்’ என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.

பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள் எனும் (அல்குர்ஆன்: 59:9) வது வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-4889 

நபி (ஸல்) அவர்கள் தமது கையில் காசு இல்லாத போதுகூட, என்னிடம் இல்லை என்று ஒதுங்கிக்கொள்ளாமல், தமது தோழர்களிடம் அனுப்பி உதவியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். கொடுத்து உதவும் நிலையில் இல்லாத மக்களுக்கும் கொடை உணர்வைத் தூண்டியிருக்கிறார்கள். இவ்வாறு, தேவையுடைய நபர்களுக்குத் தம்மால் முடிந்தளவு உதவிசெய்யும் பண்பு முஹம்மது நபிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்தது. இந்தப் பண்புகளை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.. வள்ளல் நபியின் வழிப்படி நடப்பவர்கள் என்பதைப் பேச்சுடன் நிறுத்திக்கொள்ளாமல் செயலிலும் வெளிப்படுத்துவோமாக! அதற்கேற்ப அல்லாஹ்வின் அன்பையும், அருளையும்பெறுவோமாக!