Tamil Bayan Points

வாய் விட்டுச் சிரிப்போம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 18, 2023 by Trichy Farook

இஸ்லாமிய ஒழுங்குகள் சிரிப்பின் ஓழுங்குகள்

சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்

நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلاً مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ تَجِدُهُ إِلاَّ قُرَشِيًّا ، أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான்.

அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.

(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2348 

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கி கரித்து விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன்) சுபிட்ச மிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூறுவார்.

அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன். அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், மனிதா! அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான். அதற்கு அவர், இல்லை, இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார். அதன் நீரையும் பருகிக் கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்) அவர், என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி, அதன் நிழலை அடைந்து கொள்வேன். இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார். மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்கக் கூடுமல்லவா? என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும். உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார். இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார். அதற்கு இறைவன், மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான். ஆம்! என் இறைவா இந்தத் தடவை (மட்டும்). இனி இதன்றி வேறெதையும் கேட்க மாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டு செல்வான்.

அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக! என்று கேட்பார். அதற்கு இறைவன், மனிதா! ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக் கொண்டாய்? (சொர்க்கம் என்ற இந்த) உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் தானே? என்று கேட்பான்.

அதற்கு அவர், என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார். (இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு, நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும், நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம்-310 

أَنَّ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا قَالَ : لاََ ، قَالَ : فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ : لاََ فَقَالَ : فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا قَالَ : لاََ قَالَ فَمَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهَا تَمْرٌ – وَالْعَرَقُ الْمِكْتَلُ- قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا – يُرِيدُ الْحَرَّتَيْنِ – أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள், உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1936 , 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

நகைச்சுவையுடன் நபிகள் நாயகம்

பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி (ஸல்) அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்கள் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلاً أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِى. قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ ». قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றி விடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றி விடுவோம் என்று கூறினார்கள்.

அம்மனிதர், ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத் தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறி: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-4998 (4346)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ :
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَيْنَا وَلِي أَخٌ صَغِيرٌ يُكْنَى أَبَا عُمَيْرٍ وَكَانَ لَهُ نُغَرٌ يَلْعَبُ بِهِ ، فَمَاتَ ، فَدَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَرَآهُ حَزِينًا ، فَقَالَ : مَا شَأْنُهُ ؟ قَالُوا : مَاتَ نُغَرُهُ ، فَقَالَ : يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ؟

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூஉமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூஉமைரிடம் வந்த போது அபூஉமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, அபூஉமைரை கவலையுடன் பார்க்கிறேனே! என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூஉமைரே! உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத்-12957 (12389)

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக் கூடாத இடங்களில் சிரிப்பதைத் தடை செய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதைப் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள். கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலைமை புரியாமல் சிரிப்பவர்களும் உண்டு.

பொருத்தமற்ற இந்தச் சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்குப் பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்தி விடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.

நாம் சொல்லும் நகைச்சுவையினால் எப்போது எல்லோரும் மகிழ்கிறார்களோ அப்போதே நாம் சரியான அடிப்படையில் பிறரை சிரிக்க வைத்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உள்ளத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனதில் இறுக்கத்தையும் மூளைக்குத் திரையையும் ஏற்படுத்தி விடக் கூடாது.

விபத்துக்கள், அழிவுகள் தொடர்பான செய்திகள் கிடைத்தால் மரணத்திற்குப் பயப்பட வேண்டுமே தவிர சிரித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மண்ணறைகளைக் கடந்து செல்லும் போது மரண பயத்துடன் செல்ல வேண்டும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் தலைதூக்கும் போது இறைவனின் பயம் வர வேண்டும்.

ஏனென்றால் மழையின் அறிகுறியாகத் தோன்றும் இடி, பல உயிர்களைக் கொன்று விடுகிறது. தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்டாலும் அதிகமான உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து வசிப்பவர்களுக்கு மண்ணறைகளாக மாறி விடுகின்றன. ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் கடும் காற்றையோ, மேகம் திரள்வதையோ கண்டால் படபடப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள்.

وَكَانَ إِذَا رَأَى غَيْمًا ، أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ قَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا {هَذَا عَارِضٌ مُمْطِرُنَا

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். நான், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காணுகின்றேனே! என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ஆயிஷாவே! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-4829 

பொய் சொல்லி சிரிக்க வைக்கக் கூடாது

பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று! நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.

சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நகைச்சுவைக் கருத்துக்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. நகைச்சுவையிலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் பணிக்கிறது. சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்வதை தடைசெய்துள்ளது.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا. قَالَ « إِنِّى لاَ أَقُولُ إِلاَّ حَقًّا

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே! என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ-1990 (1913)

 وَيْلٌ لِلَّذِى يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்.

அறி: முஆவியா பின் ஹைதா (ரலி),
நூல்: திர்மிதீ-2315 (2237)

பிறரைப் பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக் கூடாது

மற்றவர்களைப் பயமுறுத்தியோ, ஏமாற்றியோ, கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது.

 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لاَ يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ جَادًّا وَلاَ لاَعِبًا ، وَإِذَا وَجَدَ أَحَدُكُمْ عَصَا صَاحِبِهِ فَلْيَرْدُدْهَا عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியைக் கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்து விடட்டும்.

அறி : யசீத் பின் சயீத் (ரலி)
நூல் : அஹ்மத்-17940 (17261)

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ
حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ ، فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا ، فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ ، فَضَحِكَ الْقَوْمُ ، فَقَالَ : مَا يُضْحِكُكُمْ ؟ فَقَالُوا : لاَ ، إِلاَّ أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கி விட்டார். வேறு சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார்.

(இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா
நூல்: அஹ்மத்-23064 (21986)