Tamil Bayan Points

வாய்மையே வெல்லும்..!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 29, 2023 by Trichy Farook

வாய்மையே வெல்லும்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

இந்த உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மற்ற உயிர்களை விடத் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும் பகுத்தறிவின் அடிப்படையிலேயே அவன் செயல்படுகிறான் என்பதைப் பறைசாற்றுவதற்கும் மனிதர்களிடம் சில நல்ல குணங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது.

இன்றைய நவீன நாகரிக காலகட்டத்தில் மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கேற்ப நற்குணங்கள் நல்ல பண்புகள் போன்றவை அவனது அறிவோடு சேர்த்து வளர்ச்சி அடைவதில்லை. மாறாக நம்பிக்கை மோசடியும், ஏமாற்று வேலையும் வாக்குறுதி மோசடி செய்வதும், நம்ப வைத்துக் கழுத்தறுக்கின்ற காரியங்களில் ஈடுபடுவதும் இது போன்ற குணங்களே பெரும்பகுதியாக மிகைத்து நிற்கின்றன.

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதனும் – வாய்மையாளனாகவும், உடன்படிக்கையை நிறைவேற்றுபவனாகவும் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் தவறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களில் தலையாயது அவன் வாய்மையாளனாகத் திகழ்வதாகும். ஒருவன் வாய்மையையும் உண்மையையும் தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தவறி விட்டால் அவன் கடுமையான தோல்வியையும், வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும். இந்த வாய்மை என்ற குணத்தை வேறுவேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்,

  • வாக்குறுதியை நிறைவேற்றுவது
  • கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்
  • உடன்படிக்கையைப் பேணுவது
  • ஒப்பந்தத்தில் மோசடி செய்யாமல் இருப்பது
  • நம்பிக்கை மோசடி செய்யாமல் இருப்பது

அமானிதத்தை பேணுவது

இது போன்ற ஏராளமான வார்த்தைகளின் மூலம் வாய்மை என்ற குணநலன் குறித்து ஆழமாகவும், அழுத்தந் திருத்தமாகவும் எடுத்துச் சொல்லலாம். மேலும், மேற்சொன்ன அத்தனை பண்புகளும் வாய்மை என்ற குணத்திற்குக் கீழாக உள்ளடங்கக் கூடியதாகவே வந்து விடும்.

முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் சொன்ன சொல்லில் உண்மையாக இருந்து, ஒப்பந்தத்தைப் பேணி உடன்படிக்கையை நிறைவேற்றி, வாய்மையாளர்களாகத் திகழ்வதற்கு ஏராளமான உபதேசங்களை இஸ்லாமிய மார்க்கம் ‘கற்றுத் தருகின்றது. மேலும், மேற்சொன்ன கட்டளைகளை மீறுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் பதிய வைக்கின்றது.

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!

உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில் நின்று போராடுவார்கள். இது இயல்பான ஒன்று!

வாய்மையை நிலை நாட்ட வேண்டும் என்பது இயற்கையாகவே அனைவருக்கும் உள்ள பொதுவான சட்டமாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தால் இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பிற மக்களுக்கு முன்மாதிரியாகத்திகழக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் தனது திருக்குர்ஆனில் ஒப்பந்தங்கள் குறித்து ஏராளமான உபதேசங்களை அடுக்கடுக்காய் கொட்டி வைத்துள்ளான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

(அல்குர்ஆன்: 5:1)

இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏

தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.!

(அல்குர்ஆன்: 23:8)

 الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ‏

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 13:20)

அமானிதங்களை கண்டிப்பாகப் பேணி நடக்க வேண்டும் என்றும், உடன்படிக்கையை முறிக்கக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை பகிர்கின்றான்.

وَ اَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا‌ ؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ‏

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன்: 16:91)

படைத்த இறைவனைப் பொறுப்பாளனாக முன்னிறுத்தி நீங்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றும், நம்ப வைத்து ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பிறகு அதை முறிக்கக் கூடாது என்றும் ஆழமான கருத்தை இறைவன் பதிய வைக்கின்றான்.

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ وَاَوْفُوْا بِالْعَهْدِ‌ۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْــــٴُـوْلًا‏

அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் வாக்குறுதி விசாரிக்கப்படும்.

(அல்குர்ஆன்: 17:34)

முஸ்லிம்களாக இந்த உலகத்தில் பல இன்னல்களையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டு வாழ்வதற்கான மிக முக்கியமான காரணம், மறுமையை இலக்காகக் கொண்டு தான். அப்படிப்பட்ட விசாரணை நாளில் வாக்குறுதியை நிறைவேற்றாதவன் குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று இறைவன் நினைவூட்டுகின்றான்.

…وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ

தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

(அல்குர்ஆன்: 2:177)

ஒருவன் பிறருக்கும் தனக்கும் நன்மை செய்பவனாக இருக்க வேண்டுமானால் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதியை மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், யார் வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றுகின்றாரோ அவர் தான் உண்மை கூறியவராவார் என்றும், சொன்ன சொல்லை உண்மைப்படுத்தியவர்கள் என்றும் திருக்குர்ஆன் பாராட்டி பேசுகின்றது.

இதுபோன்ற ஏராளமான வசனங்களில் வாய்மையைப் பேணுவதற்கு திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

பொய்யை இட்டுக்கட்டுவோர் யார்?

ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதி என்பது அனைத்து மனிதர்களும் தங்களின் வாழ்நாளில் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம். அதிலும் குறிப்பாக நபிகளார் காலத்தில் ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் வாழ்ந்த நல்லவர்கள், கெட்டவர்கள் குறித்தும், அவர்களின் குணநலன்கள் குறித்தும் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.

  وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏

(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்.

அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.

(அல்குர்ஆன்: 3:75)

இந்த வசனத்தில் வேதமுடையோரில், அதாவது முஸ்லிம்களாக இல்லாத சில மனிதர்கள் தங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது குவியலாக இருந்தாலும் மிகச் சரியாக உரியவர்களிடத்தில் திருப்பி ஒப்படைத்து தங்களின் நாணயத்தையும், நம்பிக்கையையும் பேணுவார்கள் என்று கூறப்படுகின்றது. அதே நேரத்தில் இஸ்லாத்தைப் பின்பற்றாத மனிதர்களில் சில கெட்டவர்கள், வாக்கு சுத்தம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். 

இத்தகையோரிடத்தில் அற்பமான ஒரு தங்கக் காசைக் கொடுத்தால் வலுக்கட்டாயமாகக் கேட்டாலும் கூடத் தருவதற்கு வாய்ப்பு குறைவு தான். மேலும், மக்களை மட்டமாகக் கருதி அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்க முயற்சிப்பார்கள். மேலும் இறைவன் மீது பொய்யையும் இட்டுக்கட்டுவார்கள் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான். அந்த வசனத்தின் தொடர்ச்சியில் இறைவன் கூறும் போது..

بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

அவ்வாறில்லை. யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி இறைவனை) அஞ்சுகிறாரோ, இறையச்சமுடையோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 3:76,77)

தமது  வாக்குறுதியையும், உறுதிமொழியையும் முறையாகப் பேணுபவர் தான் இறைவனுக்கு அஞ்சி தன்னுடைய வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதாகும். ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் யார் முறையாகப் பேணி நடக்கவில்லையோ, அத்தகையோரை இறைவன் பார்க்க மாட்டான், அவர்களிடத்தில் பேச மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று கண்டன வார்த்தைகளை பதிய வைத்து எச்சரிக்கை விடுக்கின்றான்.

வாய்மையில் சிறந்து விளங்கிய நபிகள் நாயகம்

ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து நபி (வால்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மைக்கும் வாய்மைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் தங்களின் வாழ்க்கையைக் கட்டமைத்திருந்தார்கள் என்பது தெரிய வரும். இறைவனின் தூதராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே மக்களால் நம்பிக்கைக்குரியவர்: உண்மையாளர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு மேலும் மெருகேற்றி தன்னுடைய வாய்மையை கன கச்சிதமாகக் காப்பாற்றினார்கள்.

மேலும், எதிரியிடத்திலும் கூட தனது வாக்குறுதியைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால், எதிரிகள் சில நேரங்களில் அநியாயமான முறையில் ஒப்பந்தங்களை எழுதினாலும் அதற்கும் சம்மதித்து  தலையசைத்திருக்கின்ற தருணமும் உண்டு.

அதற்குச் சிறந்த உதாரணமாக, இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய உடன்படிக்கை தான் ஹுதைபியா உடன்படிக்கை. எதிரிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடைபெற்ற மாபெரும் ஒரு புரட்சிப் போர் என்றே சொல்லலாம். இந்த ஹுதைபியா உடன்படிக்கையை எதிரிகள் முஸ்லிம்களிடத்தில் கடுகளவு கூட ஈவு இரக்கமின்றி, அநியாயமாகவும், அக்கிரமமாகவும் நிறைவேற்றத் துடித்தார்கள்.

… فَبَيْنَمَا هُوَ يُكَلِّمُهُ إِذْ جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو، قَالَ مَعْمَرٌ: فَأَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ سَهُلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ» قَالَ مَعْمَرٌ: قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ: فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ: هَاتِ اكْتُبْ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا فَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الكَاتِبَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا الرَّحْمَنُ، فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ كَمَا كُنْتَ تَكْتُبُ، فَقَالَ المُسْلِمُونَ: وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلَّا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ» ثُمَّ قَالَ: «هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»، فَقَالَ سُهَيْلٌ: وَاللَّهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا صَدَدْنَاكَ عَنِ البَيْتِ، وَلاَ قَاتَلْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنِّي لَرَسُولُ اللَّهِ، وَإِنْ كَذَّبْتُمُونِي، اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ»…
 قَالَ الزُّهْرِيُّ: وَذَلِكَ لِقَوْلِهِ: «لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا»…

சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் எழுதுவோம். என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், பேரருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை நபியவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சுஹைல், ரஹ்மான் கருணையன்புடையோன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், இறைவா உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்” என்றார். முஸ்லிம்கள், அல்லாஹ்வின் மீதாணையாக ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவற்ற அருளாள்னும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்றுதான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பிஸ்மிக்க அல்லாஹம்ம இறைவா உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்றே எழுதுங்கள்’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட மக்கா நகரத்தை கண்ணியப் படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்”என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.

ஹுதைபியா உடன்படிக்கையில் எதிரிகள், முஸ்லிம்களை உச்சகட்ட ஆத்திரத்தையும் கோபத்தையும் கிளப்புகின்ற அளவுக்கு சில காரியங்களை அரங்கேற்றினாலும் அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற மவுனம் காக்கிறார்கள்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியில்..

 …فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى أَنْ تُخَلُّوا بَيْنَنَا وَبَيْنَ البَيْتِ، فَنَطُوفَ بِهِ»، فَقَالَ سُهَيْلٌ [ص:196]: وَاللَّهِ لاَ تَتَحَدَّثُ العَرَبُ أَنَّا أُخِذْنَا ضُغْطَةً، وَلَكِنْ ذَلِكَ مِنَ العَامِ المُقْبِلِ، فَكَتَبَ، فَقَالَ سُهَيْلٌ: وَعَلَى أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا رَجُلٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلَّا رَدَدْتَهُ إِلَيْنَا، قَالَ المُسْلِمُونَ: سُبْحَانَ اللَّهِ، كَيْفَ يُرَدُّ إِلَى المُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا؟…

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்” என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள்.

ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்” என்று கூறினார். அவ்வாறே எழுதினார். மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும் என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள் “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசி கொண்டிருக்கும் போது குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அஜந்தா தம் கால்கள் பிணைக்கப் பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து, முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மது (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே என்று பதிலளித்தார்கள்.

அதற்கு சுஹைல், அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் இவரை மட்டுமாவது தான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு சுகைல், நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை , இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள் என்று கூறினார்கள்

அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை என்று கூறினார். மிக்ரஸ் என்பவர் நாம்- அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே நான் முஸ்லிமாக உங்களிடம் வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? தான் சந்தித்த துன்பங்களை நீங்கள் சிந்தித்து) பார்க்க மாட்டீர்களா என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

நூல்: புகாரி-2731 

இந்த உடன்படிக்கையில் எதிரிகளின் ஒப்பந்த மீறல் எந்த அளவுக்கு அத்து மீறி நடந்து இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

  • நபியவர்கள் தமது சொந்த ஊருக்குச் சென்று வருவதற்குப் பல நிபந்தனைகள் எதிரிகளால் அத்துமீறி போடப்படுகின்றது.
  • மூன்று நாட்களுக்கு மேலாக மக்காவில் இருக்கக் கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்படுகின்றது.
…قَالَ: وَكَانَ فِيمَا اشْتَرَطُوا أَنْ يَدْخُلُوا مَكَّةَ فَيُقِيمُوا بِهَا ثَلَاثًا، وَلَا يَدْخُلُهَا بِسِلَاحٍ إِلَّا جُلُبَّانَ السِّلَاحِ…

( முஸ்லிம்-3653 )

  • ஒப்பந்தத்திற்கு ஏடு கொண்டு வரப்பட்டு முஸ்லிம்கள், முஷ்ரிக்குகள் என்று இருவருக்குமான ஒப்பந்தம் எழுதப்படுகிறது.
  • கருணையாளன் என்று இறைவனுக்கு இருக்கக் கூடிய குணத்தை ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் நான் முஸ்லிமாக கூடாது என்று மறுக்கப்படுகின்றது பதிலளித்தார்கள்.
  • அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் என்று மட்டுமாவது ஒப்பந்தத்தில் திருப்பியனுப்பாமலிருக்க எழுதக் என்று மறுக்கப்படுகின்றது.
  • அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று ஒப்பந்தத்தில் எழுதக் கூடாது என்று மறுக்கப்படுகின்றது.
  • புனிதத் தலமான கஃபா ஆலயத்திற்கு முஸ்லிம்கள் செல்வதற்குத் தடுக்கப்படுகிறது.
  • உம்ரா நிறைவேற்றுவதற்கு இஹ்ராம் ஆடை அணிந்து தயார் நிலையில் முஸ்லிம்களில் பலர் இருந்தார்கள். ஆனாலும், முஸ்லிம்கள் உம்ராவை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்க படுகிறார்கள்.
  • மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவுக்கு முஸ்லிமாக மாறி இடம் பெயர்ந்தாலும் அவரை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற அநியாயமான ஒப்பந்தம்.
  • ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே அபூஜந்தல் என்ற தோழரை கையகப்படுத்துகின்றார்கள்.

அபூஜந்தல் என்ற அந்த நபித்தோழர் ஏற்கனவே இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் கால்களால் தத்தி தத்தி நடந்து வந்து முஸ்லிம்களே! காப்பாற்றுங்கள்! என்று கதறுகிறார். ஆனாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்குக் கட்டுப்பட்டு அபஜந்தலைத் திருப்பி ஒப்படைக்கின்றார்கள். நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் என்னை திருப்பி அனுப்புகின்றீர்களா? நான் பட்ட சிரமம் துன்பம்! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டார்கள்? என்று கதறித் துடிக்கின்றனர். அந்தத் தோழர்.

ஆனாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எதிரிகளுக்கு கட்டுபட்டு அபூஜன்தலைத்  திருப்பி ஒப்படைக்கின்றார்கள். இந்தச் செய்தி மொத்த ஒட்டு உலகத்தில் ஒப்பந்தத்தை அநியாயமாக மீறிக் கொண்டிருக்கின்ற அத்தனை நபர்களுக்கும் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது. அநியாயமாக எதிரிகள் பல கோரிக்கைகளை ஒப்பந்தங்கள் எழுதி ஒப்பந்த மீறலில் ஈடுபடும் போது கூட கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நபி (ஸல்) அவர்கள் செலுத்திய மௌனம் அலாதியானது.

வாய்மைக்கு சிறந்த எடுத்துகாட்டு 

நபி (ஸல்) அவர்கள் வாய்மைகுச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்துள்ளார்கள். மேலும் எதிரிகளுக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தன்னுடைய தோழர்களுக்கு நடத்திய மெய்சிலிர்க்க வைக்கின்ற பாடம் நம்மை விழி உயர்த்திப் பார்க்க வைக்கின்றது. வாய்மைப் பேணுவதிலும், வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் நபி (ஸல்) அவர்கள் எந்தளவிற்கு உச்சகட்டத்தில் இருந்துள்ளார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்தி அற்புதமான சான்று.

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، قَالَ
مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ، قَالَ: فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ، قَالُوا: إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا، فَقُلْنَا: مَا نُرِيدُهُ، مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ، فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ، وَلَا نُقَاتِلُ مَعَهُ، فَأَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ، فَقَالَ: «انْصَرِفَا، نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ، وَنَسْتَعِينُ اللهَ عَلَيْهِمْ»

நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம்.

அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்-3661 

எதிரிகள் இரண்டு தோழர்களைப் பிடித்து நீங்கள் எங்களுக்கு எதிராகப் போர் செய்யச் செல்கிறீர்களா.? என்று கேட்கின்றார்கள். இல்லை நாங்கள் மதீனாவுக்குச் செல்கின்றோம் என்று தப்பிப்பதற்காக பேச்சை மாற்றிச் சொல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அந்த இரண்டு தோழர்களும் நடந்த செய்தியைச சமர்பித்த போது அதெல்லாம் பார்த்துக் கொள்ளாம்.!எதிரித்தானே! என்று அலச்சியப்படுத்தி விடாமல் நீங்கள் எதிரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள், நீங்கள் போருக்கு வர வேண்டாம் என்று சொல்லி நம்முடைய மேனியெல்லாம் சிலிர்க்கிற அளவுக்கு உச்சகட்ட பதிலைக் கூறி உண்மையான வாய்மையாளாராகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

வாய்மையே வெல்லும் 

இன்றைய சமூகத்தில் மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் வாய்மையாளர்களாகத் திகழ்வதிலிருந்து தடுமாறிக் கொண்டும் தவறிழைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். ஆட்சி என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உடன்படிக்கையைப் பேணாமல் நம்பிக்கை மோசடி செய்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.

எவ்வளவு தான் இவர்கள் பொய்யை இட்டுக்கட்டி சாக்கு போக்குகள் சொல்லி உண்மையையும், சத்தியத்தையும் குழி தோண்டிப் புதைக்க நினைத்தாலும், மக்களுக்கு அநியாயம் செய்து அவர்களின் உடைமைகளைக் கையகப்படுத்தினாலும் ஜெயிக்கப் போவது வாய்மை தான்! வாய்மையே வெல்லும் இன்ஷா அல்லாஹ்!!

بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ‏

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் (பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

 (அல்குர்ஆன்: 21:18)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

 (அல்குர்ஆன்: 4:135)