Tamil Bayan Points

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை -2

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on November 3, 2023 by Trichy Farook

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள்

நவீன ஸலஃபிக் கொள்கையைப் பின்பற்றுபவர்களிடத்தில் பல்வேறு வழிகேடுகள் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு சான்றுகளை ( வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை) முதல் கட்டுரையில் நாம் கண்டோம். அதைத் தொடர்ந்து இன்னும் பல சான்றுகளை இந்த இரண்டாம் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

நவீன ஸலஃபுகள், இமாம் இப்னு தைமிய்யா அவர்களைத் தங்களுடைய கொள்கைக்கு முன்மாதிரியாகக் கருதுகின்றனர். தங்களுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் இமாம் இப்னு தைமிய்யா அவர்களை மிகவும் சிலாகித்துக் கூறுகின்றனர். இப்னு தைமிய்யா அவர்கள் மிகச் சிறந்த அறிஞர் என்றாலும் அவரிடமும் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. நவீன ஸலபியிஸத்தின் வழிகேடுகளுக்கு அத்தவறுகளே மிக முக்கியக் காரணங்களாகவும் உள்ளன.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் தவறான கொள்கைகளில் சிலவற்றை இங்கே தொகுத்து இருக்கிறோம். அவற்றை பார்ப்போம்.

சில நேரங்களில் ‘‘முகாஷஃபாத்” எனும் அகப்பார்வை மூலம் எவ்வளவு தூரத்தில் உள்ளவற்றையும் நல்லடியார்கள் பார்க்கலாம், கேட்கலாம் என்பது இப்னு தைமிய்யாவின் கொள்கையாகும். இது நல்லடியார்களுக்கு இறைவன் வழங்கும் ‘‘கராமத்” (அற்புதம்) என இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

இதற்குப் பின்வரும் சம்பவத்தை இப்னு தைமிய்யா சான்றாகக் காட்டுகின்றார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 161)

وعمر بن الخطاب لما أرسل جيشا أمر عليهم رجلا يسمى سارية، فبينما عمر يخطب فجعل يصيح على المنبر: يا سارية! الجبل، يا سارية الجبل الجبل، فقدم رسول الجيش فسأله، فقال يا أمير المؤمنين! لقيننا عدونا فهزمونا فإذا بصائح: يا سارية الجبل، يا سارية الجبل، فأسندنا ظهورنا بالجبل فهزمهم الله.

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு படையை அனுப்பிய போது ‘‘ஸாரியா” எனப் பெயர் குறிப்பிடப்படும் ஒருவரை அவர்களுக்கு அமீராக நியமித்தார்கள். உமர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘‘ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!) ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்)! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று மிம்பரின் மீது நின்றவர்களாக சப்தமிட்டார்கள்.

(பின்னர் போர் முடிந்து) அப்படையின் தூதர் வந்த போது அவரிடம் உமர் அவர்கள் விசாரித்தார்கள். அவர் ‘‘அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் எதிரிகளைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தோற்கடித்தார்கள். அப்போது ‘‘ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்! ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்” என்று ஒருவர் சப்தமிட்டார். நாங்கள் அம்மலையை எங்கள் பின்புறத்திற்கு அரணாக்கிக் கொண்டோம். அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான்.

நூல்: அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 161

மேற்கண்ட சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத கால தூரத்தில் உள்ள படையின் நிலையைப் பார்த்ததாக வந்துள்ளது. அது போன்று உமர் அவர்கள் மதீனாவில் இருந்து சப்தமிட்டதை ஒரு மாத கால தூரத்தில் இருந்த ‘‘ஸாரியா” என்ற படைத்தளபதியும், படை வீரர்களும் கேட்டதாக வந்துள்ளது.

ஒரு மாத கால தூரத்தில் உள்ள ஒரு நிகழ்வைப் பார்ப்பதும், கேட்பதும் மனிதர்களுக்கு இயலுமா? இதுபோன்ற ஒரு ஆற்றலை மனிதர்களுக்கு இறைவன் வழங்குவானா? என்பதை நாம் குர்ஆன், சுன்னா ஒளியில் உரசிப் பார்க்கும் முன் இப்னு தைமிய்யா அவர்கள் இதற்குக் கூறும் காரணத்தையும், மற்ற ஸலஃபுகள் இதற்குக் கூறும் காரணத்தையும் நாம் தெரிந்து கொள்வோம்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67)
المكاشفات -: ما حصل لأمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه حيث كان يخطب الناس يوم الجمعة على المنبر، فسمعوه يقول: يا سارية! الجبل! فتعجبوا من هذا الكلام، ثم سألوه عن ذلك؟

இப்னு தைமிய்யா கூறுகிறார் :

‘‘(நல்லடியார்களுக்கு நிகழும் கராமத்துகளில் ஒருவகை) ‘‘அல்முகாஷஃபாத்” என்பதாகும். அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் அவர்கள் வெள்ளிக் கிழமை மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ‘‘ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்!’’ என்று கூறுவதை அவர்கள் செவியேற்றார்கள். இந்த வாசகத்தினால் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் பிறகு அவரிடம் அதைப் பற்றி விசாரித்த இந்த நிகழ்வை ‘‘முகாஷஃபாத்” என்பதற்குரிய சான்றாகக் கொள்ளலாம்.

நூல்: அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67

உமர் (ரலி) அவர்கள் ‘‘முகாஷஃபாத்” என்ற அகப்பார்வையின் மூலம் மதீனாவில் இருந்தே ஒரு மாத கால தூரத்தில் இருந்த படையினரைப் பார்த்தார்கள் என இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

நவீன ஸலஃபுகள் மிக முக்கியமாகக் கருதும் அகீதா தொடர்பான நூல்களில் ஒன்று ‘‘ஷரஹ் அகீததுத் தஹாவியா” என்ற நூலாகும். இதன் ஆசிரியர் ‘‘ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ்” என்பவர் ஆவார். இவர் தன்னுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

شرح العقيدة الطحاوية – صالح آل الشيخ (ص: 678)
فمن القدرة في السمعيات سَمَاعْ سارية كلام عمر رضي الله عنه وهو في المدينة حيث كان يخطب، فقال (يا سارية الجبل الجبل)، يعني الزم الجبل، وسارية كان في بلاد فارس وسَمِعَ الكلام.وهذا لاشك قدرة في السماع خارقة للعادة أُوتِيَهَا. وكذلك هي من جهة عمر رضي الله عنه قُدْرَةْ في الإبصار حيث إنَّهُ أَبْصَرَ ما لم يُبْصِرُهُ غيره، فقال: يا سارية الجبل الجبل. فنظر إلى سارية ونظر إلى الجبل ونظر إلى العدو وكأنَّ الجميع أمامه، ولهذا قال: الزم الجبل.

உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருடைய பேச்சை ஸாரியா அவர்கள் செவியேற்றது செவிப்புலன் சார்ந்த வல்லமையில் உள்ளதாகும். உமர் (ரலி) அவர்கள் ‘‘ஸாரியாவே அம்மலை(யை அரணாக்கிக் கொள்!), ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று கூறினார்கள். ஸாரியா அவர்கள் பாரசீக தேசத்தில் இருந்து அவருடைய பேச்சை செவியேற்றார்.

இது வழமைக்கு மாற்றமான (அற்புதமான) செவியேற்கும் திறன் என்பதிலும் அது அவருக்கு வழங்கப்பட்டது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை உமர் (ரலி) அவர்கள் தொடர்பாகப் பார்க்கும் போது மற்றவர்கள் பார்க்காத ஒன்றை உமர் பார்த்தார் என்ற அடிப்படையில் இது பார்வைப் புலன் சார்ந்த வல்லமையில் உள்ளதாகும்.

‘‘ஸாரியாவே அம்மலை(யை அரணாக்கிக் கொள்!), ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று அவர் கூறினார். ஸாரியாவையும், அம்மலையையும், எதிரிகளையும் அவர் பார்த்தார். அவர்கள் அனைவரும் தனக்கு முன்னால் இருப்பதைப் போன்று பார்த்தார். இதனால் தான் ‘‘அம்மலையை அரணாக்கிக் கொள்” என்று கூறினார்.

நூல்: ஷரஹூல் அகீததித் தஹாவியா

பக்கம் 678

படைப்பினங்களில் யாருக்கும் இல்லாத கேட்கும் திறன் ஸாரியாவிற்கு வழங்கப்பட்டதாகவும், படைப்பினங்களில் யாருக்குமே இல்லாத பார்க்கும் திறன் உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மேற்கண்ட நூலாசிரியர் விளக்கமளிக்கின்றார்.

நிச்சயமாக ஸலஃபு அறிஞர்களின் இந்த விளக்கம் ஓரிறைக் கொள்கைக்கும், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் எதிரானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இது பலவீனமான செய்தியே!

‘‘யா ஸாரியா! அல்ஜபல்” என்பது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பொய்யர்களும், இட்டுக்கட்டக்கூடியவர்களும், மிகப் பலவீனமானவர்களும் அறிவிக்கும் செய்தியாகவே உள்ளது.

இமாம் அல்பானி அவர்கள் தம்முடைய ‘‘ஸில்ஸிலத்துல் அஹாதீஸுஸ் ஸஹீஹா” என்ற நூலில் ஒரே ஒரு சரியான அறிவிப்பாளர் தொடரில் இச்செய்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அதுவும் பலவீனமான செய்தி என்பதே உண்மையாகும். அது தொடர்பான விவரங்களைக் காண்போம்.

இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் என்று குறிப்பிடும் அறிவிப்பு பின்வரும் அறிவிப்பாகும். இது தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

دلائل النبوة ـ للبيهقى (6/ 370)
وأخبرنا أبو عبد الرحمن محمد بن الحسين السلمي أخبرنا أبو الحسين محمد بن محمد بن يعقوب الحجاجي الحافظ أخبرنا أحمد بن عبد الوارث بن جرير العسال بمصر حدثنا الحارث بن مسكين أخبرنا ابن وهب قال أخبرنا يحيى بن أيوب عن ابن عجلان عن نافع عن ابن عمر ان عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر رضي الله عنه يخطب فجعل يصيح يا ساري الجبل فقدم رسول من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا صائح يصيح يا ساري الجبل فأسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله فقلنا لعمر كنت تصيح بذلك  قال ابن عجلان وحدثنا إياس بن معاوية بن قرة بذلك والله تعالى أعلم

(‘‘யா ஸாரியா! அல்ஜபல்” என்ற இந்தச் செய்தியின் மொழிபெயர்ப்பு முன்னர் கூறப்பட்டுவிட்டதால் இங்கே மீண்டும் மொழிபெயர்க்கவில்லை)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவரை சில அறிஞர்கள் பாராட்டினாலும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

‘‘இவர் மனன சக்தியில் மோசமானவர்” என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார். ‘‘இவரது ஹதீஸ்கள் எழுதப்படும், ஆனால் ஆதாரமாகக் கொள்ளப்படாது” என அபூஹாதிம் கூறுகின்றார். ‘‘இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்பட்டவர்” என இப்னு ஸஃது கூறுகின்றார். ‘‘இவருடைய சில ஹதீஸ்களில் குளறுபடிகள் உள்ளன” என தாரகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்.

‘‘இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இஸ்மாயீலி கூறுகின்றார். ‘‘இவர் உண்மையாளர் இன்னும் தவறிழைக்கக்கூடியவர்” என ஸாஜி கூறுகின்றார். ‘‘யஹ்யா இப்னு அய்யூப் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்” என அஹ்மத் கூறியுள்ளார். ‘‘இவர் தனது மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக்கூடியவர், தன்னுடைய புத்தகத்திலிருந்து அறிவித்தால் பிரச்சினையில்லை” என அல்ஹாகிம் அபூஅஹ்மத் கூறியுள்ளார். இமாம் உகைலி அவர்கள் இவரை பலவீனமானவர்கள் பட்டியலில் கொண்டுவந்துள்ளார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம் 11, பக்கம் 163

‘‘இவருடைய நிலையை நான் அறிந்துள்ளேன். இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இப்னுல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். ‘‘இவர் உறுதியானவர் இல்லை” என இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்.

(மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 362)

‘‘இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்” என இமாம் அபூசுர்ஆ விமர்சித்துள்ளார்.

(நூல்: சுஆலாத்துல் பர்தயீ, பக்கம் 433)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” மிகவும் பலவீனமானவர் என்பதையும் இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவையல்ல என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இந்த அறிவிப்பில் மற்றொரு பலவீனமும் உள்ளது. ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” என்பாரின் ஆசிரியராக ‘‘முஹ்ம்மத் இப்னு அஜ்லான்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் ‘‘நாஃபிஉ” என்பாரிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கின்றார்.

‘‘முஹம்மத் இப்னு அஜ்லான்” என்பவரின் அனைத்து அறிவிப்புக்களையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை இவரைப் பற்றிய விமர்சனங்களை ஆய்வு செய்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

‘‘முஹம்மத் இப்னு அஜ்லான் அல்மதனீ” என்பவர் உண்மையாளர். என்றாலும் அபூஹுரைரா வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூளை குழம்பிவிட்டார்” என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

(தக்ரீபுத் தஹ்தீப், பாகம் 2, பக்கம் 496)

‘‘ஸயீதுல் மக்புரி வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூளை குழம்பிவிட்டார்” என தாவூத் இப்னு கைஸ் கூறுகின்றார். ‘‘இமாம் முஸ்லிம் இவருடைய அறிவிப்புகளை துணைச் சான்றாகத்தான் கொண்டுவந்துள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை” என இப்னு ஹஜர் கூறியுள்ளார். ‘‘இவர் நாஃபிஉ வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் குளறுபடியானவை” என உகைலி கூறுகின்றார்.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்கம் 304)

இமாம் அஹ்மத், இப்னு மயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். மற்றவர்கள் ‘‘இவர் மனனத் தன்மையில் மோசமானவர்” எனக் கூறியுள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப், பாகம் 2, பக்கம் 201)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து இப்னு அஜ்லான் என்ற அறிவிப்பாளர் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளையும் குறைகளற்றவை என ஏற்க இயலாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக ‘‘நாஃபிஉ வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் குளறுபடியானவை” என்று உகைலி விமர்சித்துள்ளார். மேற்கண்ட அறிவிப்பு இப்னு அஜ்லான் என்பார் நாஃபிஉ வழியாக அறிவிக்கும் செய்தியாகும்.

எனவே இச்செய்தி மிகவும் பலவீனம் என்ற நிலையை அடைகின்றது.

இது உமர் (ரலி) அவர்கள் மீது வழிகேடர்கள் இட்டுக்கட்டிய சம்பவம் என்பதே சரியானதாகும். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ உரையாற்றும் போது ஏராளமான ஸஹாபாக்கள், தாபியீன்கள் அந்தச் சபையில் இருந்திருப்பார்கள். உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமென்றால் மிகவும் ஆதாரப்பூர்வமான பல வழிகளில்,  இச்செய்தி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அறியப்பட்ட பல நூல்களில் இது இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லாமல், இப்னு அஜ்லான், யஹ்யா இப்னு அய்யூப் என்பவர்களின் வாயிலாக மட்டும் இது அறிவிக்கப்படுவதிலிருந்தே இதனை வழிகேடர்கள் உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டியது என்பதை மிகத்தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் உமருடைய சப்தத்தை படைத் தளபதி ஸாரியாவும், படைவீரர்களும் கேட்டதாக வந்துள்ளது. உண்மையில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமென்றால் இந்த அதிசய சம்பவத்தை அந்தப் படையில் இருந்த ஏராளமானோர் மற்றவர்களுக்கு அறிவித்திருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. பல்லாயிரக் கணக்கானோர் முன்னால் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு அதிசய சம்பவம் மிகப் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற குறிப்பிட்ட ஒரு வழியில் மட்டும் அறிவிக்கப்படுவதிலிருந்தே இது இட்டுக்கட்டப்பட்டது என்பதை நாம் உறுதி செய்ய முடியும்.

மேலும் இச்சம்பவம் இஸ்லாத்தின் பல அடிப்படைகளுக்கு எதிரானதாக உள்ளது.

இச்சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத கால பயண தூரத்தில் உள்ள பாரசீக நாட்டில் இருந்த படையின் நிலையைப் பார்த்ததாக வந்துள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் காண முடியாது.

அது போன்று ஸாரியாவும், அவரது படைவீரர்களும் ஒரு மாத கால பயண தூரத்தில் இருந்து பேசிய உமரின் பேச்சைக் கேட்டதாக வந்துள்ளது. இவ்வாறு மனிதர்களால் செவியேற்க இயலாது.

மனிதர்கள் மிகத் தூரமான பகுதியில் உள்ளதைக் காண்பதற்கும், கேட்பதற்கும் கருவிகளின் உதவியால் மட்டும்தான் இயலும். உமர் அவர்களின் காலத்தில் அப்படிப்பட்ட கருவிகள் கிடையாது.

மனிதர்கள் ஒரு பொருளைக் காண்பதற்கு என்னென்ன வழிமுறைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளானோ அதைத் தாண்டிய மற்ற அனைத்து வழிமுறைகளும் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானதாகும். தனக்கு மட்டுமே சொந்தமான ஒன்றில் இறைவன் யாரையும் கூட்டாக்கிக் கொள்ளமாட்டான்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 42:11)

தன்னைப் போல் எதுவும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டு ‘‘அவன் செவியுறுபவன், பார்ப்பவன்” எனக் கூறியுள்ளான். இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வைப் போன்று யாரும் செவியுற முடியாது, பார்க்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:58,134)

அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 17:1, 22:75, 31:28, 40:20, 58:1)

பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 57:4)

அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன் என்பதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 22:61)

“என் இறைவன் வானத்திலும், பூமியிலும் உள்ள சொல்லை அறிகிறான். அவன் செவியுறுபவன்; அறிபவன்’’ என்று (தூதர்) கூறினார்.

(அல்குர்ஆன்: 21:4)

மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் செவியுறுகின்ற தன்மையும், பார்க்கின்ற தன்மையும் தனக்கு மட்டுமே சொந்தம் என அனைத்தையும் அறிந்த இறைவன் எடுத்துரைத்துள்ளான்.

மனிதர்களாகிய நாமும் பார்க்கின்றோமே, கேட்கின்றோமே! அப்படி இருக்கையில் செவியுறுதலும், பார்த்தலும் இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று எப்படிக் கூறமுடியும் என சிலருக்குத் தோன்றலாம்.

இதற்கான பதில் மிக எளிதானதாகும். இறைவன் எப்படிச் செவியுறுவானோ, இறைவன் எப்படிப் பார்ப்பானோ அது போன்று அணுஅளவு கூட மனிதர்களால் செவியுற முடியாது, பார்க்க முடியாது என்பதுதான் இதற்கான பதிலாகும்.

மனிதர்கள் செவியேற்பதற்கும், பார்ப்பதற்கும் என்னென்ன வழிமுறைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகளைத் தாண்டி மனிதர்களால் எதையும் செவியேற்கவோ, பார்க்கவோ இயலாது.

இறைவன் தன்னைப் போன்று செவியேற்கின்ற, பார்க்கின்ற ஆற்றலை அணுஅளவு கூட தன்னல்லாத மற்றவர்களுக்கு வழங்க மாட்டான் என்பதைப் பின்வரும் வரும் இறைவசனங்கள் கடுகளவு சந்தேகமின்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

‘‘வானங்களிலும் பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகச் செவியுறுபவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:26)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.  நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:13,14)

“என் தந்தையே! செவியுறாததையும், பார்க்காததையும், உமக்கு எந்தப் பயனும் அளிக்காததையும் ஏன் வணங்குகிறீர்?’’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 19:42)

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 6:36)

இறைவன் எப்படிச் செவியுறுவானோ, இறைவன் எப்படிப் பார்ப்பானோ அது போன்ற ஆற்றலை ஒரு விநாடி நேரம் கூட, ஒரு கடுகளவு கூட இறைவன் தன்னல்லாத மற்றவர்களுக்கு வழங்கமாட்டான் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட இறைவசனங்களைப் படிக்கின்ற யாரும் புரிந்து கொள்ள முடியும்.

இறைவனைப் போன்று யாரும் செவியேற்க முடியாது, பார்க்க முடியாது என்பதைத் திருமறை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் போது உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து  கொண்டே ஒரு மாத தூரத்தில் உள்ள பாரசீக நாட்டில் உள்ள படைகளைப் பார்த்தார்கள் என்று நம்புவதும், உமருடைய பேச்சை ஸாரியாவும், அவரது படை வீரர்களும் கேட்டார்கள் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு நேர் எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்னு தைமிய்யாவும், ஏனைய ஸலபு முன்னோடிகளும் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் நவீன ஸலஃபுகள் இதனை நியாயப் படுத்த முனைந்தால் நிச்சயம் அது வழிகேட்டைத் தவிர வேறு எந்த ஒன்றையும் அதிகப்படுத்தாது.

எந்த ஒரு செய்தியையும் அறிவிப்பாளர் தொடரை மட்டும் வைத்து நம்பிக்கை கொள்ளாமல் அது குர்ஆன், சுன்னாவின் அடிப்படைகளுக்கு ஒத்துப் போகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே!

நவீன ஸலஃபுகளின் முன்னோடியான இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் பல்வேறு இடங்களில் நல்லடியார்களுக்கு வழங்கப்படும் கராமத் எனும் அற்புதங்களில் ‘‘கஷ்ஃபு” என்னும் ஆற்றல் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது ஓரிடத்தில் இருந்து கொண்டே கண்களால் பார்க்க முடியாத தூரமான பகுதிகளில் உள்ளதைப் பார்ப்பதற்கு ‘‘கஷ்ஃபு” என்று குறிப்பிடுவார்கள். இதற்குத்தான் மேற்கண்ட உமர் தொடர்பான கட்டுக் கதையை இப்னு தைமிய்யா சான்றாகக் காட்டுகிறார்.

அது போன்று கண்களால் பார்க்க முடியாத விஷயங்களையும் இந்த ‘‘கஷ்ஃபு” எனும் அகப்பார்வையினால் பார்க்கலாம் எனவும் வழிகெட்ட பரேலவிகள் நம்புகின்றனர்.

உளூவில் முகத்தை, கைகளைக் கழுவும் போது வழிந்தோடும் தண்ணீரில் என்னென்ன பாவங்கள் வெளியேறுகிறது என்பதை இமாம் அபூஹனீஃபா அறிந்தார்கள் என்பதாகவும் பரேலவிகள் நம்புகின்றனர்.

வழிகெட்ட பரேலவிகளின் நம்பிக்கைக்கு நிகராக ஸலஃபுகளின் நம்பிக்கையும் உள்ளது.

இதோ இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

يعني: أن الكرامة تنقسم إلى قسمين: قسم يتعلق بالعلوم والمكاشفات، وقسم آخر يتعلق بالقدرة والتأثيرات

கராமத்துகள் இரண்டு வகையாகப் பிரிகின்றது. ஒன்று ‘‘உலூம்” மற்றும் ‘‘முகாஷஃபாத்” என்பதோடு தொடர்புடையதாகும். மற்றொன்று ‘‘குத்ரத்” (ஆற்றல்) மற்றும் ‘‘தஃஸீராத்” (தாக்கங்கள்) என்பதுடன் தொடர்புடையதாகம்.

(அல்ஃபுர்கான், பக்கம் 67)

مجموعة الرسائل والمسائل لابن تيمية – (5/ 6(
وأما المعجزات التي لغير الأنبياء من باب الكشف والعلم فمثل قول عمر في قصة سارية، وأخبار أبي بكر بأن ببطن زوجته أنثى، وأخبار عمر بمن يخرج من ولده فيكون عادلاً.

நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்குரிய அற்புதங்களாகிறது ‘‘கஷ்ஃப்” மற்றும் ‘‘இல்ம்” என்ற வகையைச் சார்ந்ததாகும். இதற்கு ஸாரியாவினுடைய சம்பவத்தில் உமர் பேசியது, தன்னுடைய மனைவியின் வயிற்றில் பெண்குழந்தை உள்ளது என அபூபக்ர் (ரலி) அறிவித்தது, தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அவன் நீதிமானாக இருப்பான் என்றும் உமர் அறிவித்தது போன்ற சம்பவங்களைக் கூறலாம்.

(மஜ்மூஅத்துர் ரஸாயில் வல்மஸாயில் லிஇப்னி தைமிய்யா, பாகம் 5, பக்கம் 6)

பரேலவிகள் நம்புவதைப் போன்று ‘‘கஷ்ஃப்” எனும் ஆற்றல் இருப்பதாக இப்னு தைமிய்யா வாதிக்கின்றார். பல்வேறு ஸலஃபு அறிஞர்களும் இதை வாதிக்கின்றனர்.

இவ்வாறு நம்புவது குர்ஆன், சுன்னாவிற்கும், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் எதிரானதாகும். மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

அது போன்று மறைவான விஷயங்களில் தான் நாடியவற்றை மட்டும் இறைத்தூதர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டுவான் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

தானாக அறிபவன் இறைவன். இறைத்தூதர்கள் தானாக அறிய முடியாது. இறைவன் வெளிப்படுத்திக் காட்டிய பிறகுதான் இறைத்தூதர்கள் கூட அறிந்து கொள்ள முடியும்.

உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத பயண தூரத்தில் உள்ள பாரசீக தேசத்தில் நடக்கும் நிகழ்வைப் பார்த்தார்கள் என்றும் இறைவன் அத்தகைய ஆற்றலை வழங்கினான் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானதாகும்.

அதுபோன்றே ஸாரியாவும் அவரது படை வீரர்களும் உமரின் பேச்சைக் கேட்டார்கள் என்று நம்புவதும், இறைவன் அத்தகைய ஆற்றலை அவர்களுக்கு வழங்கினான் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும்.

மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 27:65)

மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிய பின்பும் ‘‘முகாஷஃபாத்” என்னும் அகப்பார்வை மூலம் நல்லடியார்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்று நம்புவது இணை கற்பிக்கும் பாவமாகும்.

அது போன்று மறைவான விஷயங்களை நபிமார்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டியது போல் உமர் (ரலி) அவர்களுக்கும் நல்லடியார்களுக்கும் காட்டியிருக்கலாம் என்றும் வாதிக்க இயலாது. ஏனெனில் அல்லாஹ் மறைவான விஷயங்களை நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்திக் காட்டமாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன்: 72:26,27)

எனவே இந்த ‘முகாஷஃபாத்’ என்ற அகப்பார்வை என்பது முழுக்க முழுக்க பொய்யான ஒரு கற்பனையாகும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பதே சரியானதாகும்.

குர்ஆன், சுன்னாவை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாத காரணத்தினால் தான் இதுபோன்ற வழிகேடுகளை மார்க்கமாகக் கருத வேண்டிய நிலை நவீன வழிகெட்ட ஸலபிக் கொள்கையினருக்கு ஏற்பட்டுள்ளது.