Tamil Bayan Points

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

கேள்வி-பதில்: பண்பாடுகள்

Last Updated on November 12, 2022 by Trichy Farook

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

படுக்கலாம்.

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

முதல் ஹதீஸ்

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ-2768 (2692), அஹ்மத்-7862 (7524), 8041 (7698)

இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது – ஆதாரப்பூர்வமானது – கிடையாது என இமாம் புகாரி அவர்கள் கூறுகின்றனர்.

(التاريخ الصغير – (ج 1 / ص 152)

682 – وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم نحوه ولا يصح

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி), அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா , அபூஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அம்ர் என்ற அறிவிப்பாளர்வரிசையில் வருவது ஸஹீஹானது கிடையாது என இமாம் புகாரீ இமாம் கூறியுள்ளார்.

இரண்டாவது ஹதீஸ்

எந்த ஹதீஸை முஹம்மத் பின் அம்ர் என்பார் துஹ்பா என்பாரிடமிருந்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக மேற்கண்ட இமாம்கள் கருதுகிறார்களோ அந்த ஹதீஸ் இது தான்.

22510 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ ابْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِيهِ قَالَ
ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنْ الْمَسَاكِينِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ رواه أحمد

தஹ்பா அல்கிபாரி (ரலி) அறவிக்கிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபிகள் நாயகம் ஸல அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது அதாவது குப்புற படுத்து இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பிவிட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: துஹ்பாவின் மகன் யயீஷ், நூல்: அஹ்மத்-23615 (25510) 

துஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அமர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இவரும் துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல.

அப்படியானால் அபூஹுரைரா ரலி வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸ் அடைப்படையில் குப்புறப்படுக்க்க் கூடாது என்று கூறலாமா என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவுக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். அதாவது இள்திராப் எனும் குழப்பம் இதில் அதிகமாக உள்ளது.

மற்றொரு ஹதீஸ்

18654حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ يَقُولُ بَلَغَنَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ فَقَالَ هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد
18639 حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرٍو عَنِ الشَّرِيدِ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ رَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد

அம்ர் பின் அஸ்ஸரீத் கூறுகின்றார் நபியவர்கள் தன்னுடைய முகம்குப்புற படுத்துக் கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-19473 (18654), 19458 (18639)

இந்த செய்தியை அறிவிக்கின்ற அம்ர் பின் அஸ்ஸரீத் என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்தகாலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார்.

எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

அஸ்ஸரீத் (ரலி) அவர்களிடமிருந்து தனக்கு கூறியவர் யார்? என்பதை அம்ர் பின் அஸ்ஸரீத் குறிப்பிடவில்லை. எனவே இதுவும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.

கருத்தும் சரியானது அல்ல

எந்த மனிதராக இருந்தாலும் அவர் ஒரே விதமாகப் படுத்து உறங்கி எழ முடியாது. பலவிதமாகப் புரண்டு படுப்பது தான் மனிதனின் இயல்பாக உள்ளது. அவ்வாறு புரண்டு படுப்பவனுக்கு தான் குப்புறப்படுத்து இருக்கிறோம் என்பதே தெரியாது. மனிதனின் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் தான் மார்க்கம் தலையிடும். அல்லாஹ் கேள்வி கேட்பான். மனிதனை மீறி நடக்கும் எந்தக் காரியத்துக்கும் அவன் பொறுப்பாளியாக மாட்டான். இந்த அடிப்படை பல குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிமொழிகள் மூலமும் அனைவரும் அறிந்து வைத்துள்ளது தான்.

மேற்க்ண்ட ஹதீஸ்களில் ஒருவர் படுக்கைக்குச் செல்லும் போது குப்புறப்படுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததாக கூறப்படவில்லை. நன்றாக ஆழ்ந்து உறங்கும் போது சஹர் நேரத்தில் வந்து பார்த்து தூங்குபவரை எழுப்பி விட்டு கண்டிப்பதாக வந்துள்ளது. ஆழ்ந்து தூங்கும் போது ஒருவர் குப்புறப்படுத்தால் அது அவருக்கே தெரியாமல் நடப்பதாகும். அதை எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கண்டிப்பார்கள்?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் மனிதரைக் கையால் எழுப்பாமல் காலால் உதைத்து எழுப்பினார்கள் என்பது அவர்களின் நற்குணத்துக்கு மாற்றமாகத் தெரிகிறது என்பதையும் கவனிக்கும் போது இது கூடுதல் பலவீனத்தை அடைகிறது.

படுக்க ஆரம்பிக்கும் போது வலது புறமாக ஒருக்களித்து படுப்பது நபிவழியாகும். அதைப் பேணுவதன் மூலம் நன்மைகளை அடையலாம். ஒருக்களித்து படுத்தபின் புரண்டு படுத்து விட்டால் அதனால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. படுக்கும் போதே குப்புறப்படுத்தால் அதனால் சுன்னத்தை விட்டதால் நன்மை கிடைக்காமல் போகும். அது நரகத்துக்குக் கொண்டு செல்லும் குற்றமாக ஆகாது.