Tamil Bayan Points

வந்த பின் சாகாதீர்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on July 5, 2021 by

வந்த பின் சாகாதீர்

வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன.

பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, திசை காட்டும் கருவியோ எதுவுமின்றி புலம் பெயர்கின்ற பறவையின் அந்தப் பயணம், விண்வெளிப் பயணத்தில் கொடிகட்டிப் பறக்கும் மனிதனை வியப்பில் ஆழத்துகின்றது.

சுண்டு கொண்டு, சுள்ளிகளைத் தேடியெடுத்து, குஞ்சுகளைப் பொறிப்பதற்காகக் கூடு கட்டும் சிட்டுக்குருவி, வீட்டின் பொந்துகளைத் தேர்வு செய்யும் போது பூனை வந்து பாய முடியாத இடத்தைத் தேர்வு செய்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வருமுன் காப்போம் என்ற இயற்கை உணர்வின் உந்துதல் தான்.

அந்த உந்துதல் மனித இனத்திற்கு இல்லையா? இருக்கின்றது. அதனால் தான் அணு ஆயுதம், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள், இன்னும் ரத்தம் சிந்தாமல் கொல்கின்ற யுத்தத் தளவாடங்களை சேமித்து, சேகரித்து வைத்திருக்கின்றான்.

உயிரைக் காக்கின்ற, காசு பணம் சேர்க்கின்ற விஷயத்தில் இந்த வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு அளவுக்கு மிஞ்சி உண்டு. ஆனால் ஒழுக்க ரீதியிலான விஷயத்தில் தான் அந்த உணர்வு சூனியமாகி விடுகின்றது. அறிவு செயலிழந்து விடுகின்றது.

ஆணுறை அணிய அரசின் அறிவுரை

எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய்! விபச்சாரம், ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவால் விளைந்த ஒரு பயங்கர நோய்! இந்த நோய் அண்டாமல் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விபச்சாரத்தின் வாசலை அடைக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவின் வழிகள் தாழிடப்பட வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கம் விபச்சார விடுதிக்கு அனுமதி வழங்கிவிட்டு எயிட்ஸைத் தடுக்க பாதுகாப்பான ஆணுறை அணியுங்கள் என்று மூடத்தனமான பாடம் நடத்துகின்றது என்றால் இதற்குக் காரணம் என்ன? வருமுன் காப்போம் என்ற உணர்வு மங்கி, மழுங்கி, வந்த பின் சாவோம் என்ற நிலை மிகைத்து நிற்கின்றது.

இந்தத் தீய செயல்களைத் தடுக்க இஸ்லாம் பலமுனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

  1. புர்கா அணிதல்

இந்த நடவடிக்கைகளில் முதன்மையானது பெண்கள் தங்கள் அங்க அவயங்கள், அந்தரங்க அழகு தெரியாமல் புர்கா எனும் போர்க் கவச ஆடைகளை அணியச் சொல்கின்றது.

  1. பார்வைகளைத் தாழ்த்துதல்

பார்வைகளைத் தாழ்த்துமாறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உத்தரவிடுகின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்:24:30, 31.)

  1. அந்நிய ஆணுடன் தனித்திருத்தல்

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-5232

இன்று கொலை அளவில் போய் முடிகின்ற பல விஷயங்களுக்குக் காரணமாக அமைவது அண்ணி, கொழுந்தியா போன்ற உறவுப் பெண்களிடமும், நட்பு என்ற பெயரில் பிற பெண்களிடமும் ஏற்படுகின்ற தடையில்லாத சகஜமான பழக்கவழக்கங்கள் தான்.

  1. அந்நியப் பெண்ணுடன் பயணம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு  செய்து கொண்டுள்ளேன்.

என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-3006

  1. பிறர் மனைவியை வர்ணித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி-5240

  1. கண்டவர்களையும் அண்ட விடுதல்

வீட்டில் கண்டவர்களையும் சர்வ சாதாரணமாக வந்து போக விட்டு விட்டு, பின்னர் நொந்து சாகின்றனர்.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) “அலி‘ ஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அலி‘, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள்.

ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் “ஹீத்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: புகாரி-4324

இங்கு தான் பெண்கள் விஷயத்தில் இஸ்லாம் காட்டுகின்ற வருமுன் காப்போம் நடவடிக்கையை ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளது. இது ஒழுக்க விஷயத்தில் மனிதன் வருமுன் காக்காமல் வந்த பின் சாவதற்கான எடுத்துக்காட்டு.