Tamil Bayan Points

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?

தவறுகளை சுட்டிக்காட்டலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆயுதம் தாங்கி போராடி மக்களை கொன்று குவிக்கக் கூடாது.

ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

4138 أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ رواه النسائي

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்த அறப்போர் சிறந்தது? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது எனப் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல் : நஸாயீ (4138)

யார் என்ன சொன்னாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு அஞ்சக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது.

7199 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ أَخْبَرَنِي أَبِي عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ وَأَنْ نَقُومَ أَوْ نَقُولَ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ رواه البخاري

நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் “உண்மையையே கடைப்பிடிப்போம்’ அல்லது “உண்மையே பேசுவோம்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல் : புகாரி (7200)

10594 حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ هَيْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ فِي حَقٍّ إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ قَالَ وَقَالَ أَبُو سَعِيدٍ وَدِدْتُ أَنِّي لَمْ أَسْمَعْهُ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் சத்தியத்தைக் கண்டால் அல்லது அதைச் செவியுற்றால் மக்களின் பயம் அதைக் கூறவிடாமல் அவரைத் தடுக்க வேண்டாம். அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி).

நூல் : அஹ்மது (10594)

இன்றைக்கு அநேகமான இஸ்லாமிய நாடுகளில் உண்மையான இஸ்லாம் இல்லை. அந்நாடுகளை ஆழ்பவர்கள் பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இந்த ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டித்து பேசினால் தான் இவர்கள் தங்களுடைய தவறுகளை உணரும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஆட்சியாளர்களைப் பற்றிய சரியான கணிப்பீடும் மக்களிடம் ஏற்படும்.

அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய தவறுகளை உணர மாட்டார்கள். அதிலிருந்து திருந்த மாட்டார்கள்.

இஸ்லாமிய நாட்டை ஆள்பவர் இணை வைக்காத முஸ்லிமாக இருந்தால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதைச் சிலர் காரணமாகக் கூறுகின்றனர்.

2955 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).

நூல் : புகாரி (2955)

ஆட்சியாளருக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் அவர் செய்யும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நிர்வாக ரீதியில் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் அரசர் இடும் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

அரசருடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அதை விமர்சனம் செய்வதும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற கட்டளைக்கு முரணான செயல் அல்ல. மாறாக ஒருவர் அரசருக்குக் கட்டுப்பட்ட நிலையில் அவருடைய தவறுகளை விமர்சனம் செய்யலாம். இவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்.

அதே நேரத்தில் ஆயுதம் தாங்கி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதையும் மறந்து விடக்கூடாது