Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on November 5, 2022 by Trichy Farook

⭐️முன்னுரை  : 

பயான் என்ற அரபி வார்த்தைக்கு “தான் நினைப்பதை தெளிவுபடுத்துதல்” என்று பொருள். நடைமுறையில், குர்ஆனையும், ஹதீஸையும் உதாரணங்களைக் கொண்டும், கருத்துக்களைக் கொண்டும் மக்களுக்கு புரியும்படி விளக்குவதை, பயான் எனலாம்.

🔶 பிரச்சாரமே ஆயுதம்

55:4 عَلَّمَهُ الْبَيَانَ

”(பேச்சை) விளக்கும் திறனை (அல்லாஹ் தான் மனிதனுக்கு) கற்றுக்கொடுத்தான். (55:4)” என்று இறைவன் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான். வீரியமிகு பேச்சின் மூலம் நன்மையை ஏவ முடியும். தீமைகளை வேறோடு களைய முடியும்.

தர்காவே கதி என்று கிடந்த லட்சக்கணக்கான மக்கள், இன்று, இணைவைப்பிலிருந்து விலகி தங்கள் செயலுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்கிறார்கள் எனில், அல்லாஹ்வின் அருளால், வீரியமிகு பிரச்சாரங்கள் தான் இதற்கு காரணம். நமது ஆலிம்கள் பல ஆண்டுகளாக செய்த தீவிர பிரச்சாரத்தின் காரணமாக, ஏராளமான நன்மைகளை கண்கூடாக பார்த்துவருகிறோம்.

      • பித்அத், வரதட்சனை இல்லாத திருமணங்கள்,
      • வாங்கிய வரதட்சனையை திருப்பித்தரும் நிகழ்ச்சிகள்.
      • முதியோர், சிறுவர் ஆதரவு இல்லங்கள். பிறமத தாஃவா சென்டர்கள்.
      • பல்லாண்டு கால கனவாக இருந்த இடஒதுக்கீட்டில் வெற்றி,
      • கோடிக்கணக்கான ரூபாய் கல்வி, மருத்துவ, வாழ்வாதார உதவிகள்,
      • கோடிக்கணக்கான ரூபாய் ஜகாத், ஃபித்ரா மற்றும் வட்டியில்லா கடன் உதவி,

என நாம் இதுவரை சாதித்த சாதனைகள் அனைத்திற்கும் சிறப்பான பிரச்சாரங்கள் தான் அடிப்படை. எனவே மக்களை சத்தியத்தின் பால் ஈர்ப்பதற்கு, வீரியமிகு பிரச்சாரமே மிகப்பெரிய ஆயுதம் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. (கவர்ச்சியான) பேச்சுக்கு, பிறரை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது என்பதை நபி(ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி யுள்ளார்கள்.

حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا –  رواه البخاري

(மதீனாவின்) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (மக்களை கவரும் வண்ணம்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”(இன்ன மினல் பயானி லஸிஹ்ர்) பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது” என்று கூறினார்கள்.

(புகாரி-5146) 

🔶 நன்மைகளை கொள்ளையடிக்க எளியவழி.

ஒருவர் பிரச்சாரகராக இருப்பதன் மூலம் மறுமையில் ஏராளமான நன்மைகளை பெற்றவராக இருப்பார். நன்மை செய்ய பிறருக்கு பரிந்துரை செய்தால், பரிந்துரை செய்தவருக்கும் அதே அளவு நன்மை வழங்கப்படும் என்ற ஒரு அழகான விதி இஸ்லாத்தில் உள்ளது.

مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا

”(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. பின்தொடர்ந்தவர்களின் நன்மையில் எதையும் அது குறைத்துவிடாது. மக்களை தவறான வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்-5194 (4831)

உதாரணமாக, உங்கள் அறிவுரையை கேட்டு பத்துபேர் ஹஜ் செய்தால், அவர்களுக்கு கிடைக்கும் அதே நன்மை, அதாவது 10 ஹஜ் செய்த நன்மை உங்களுக்கும் தரப்படும். நீங்கள் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் சரி, தூங்கிக்கொண்டிருந்தாலும் சரி. பல லட்சம் செலவு செய்து ஹஜ்ஜுக்கு போனவர்களுக்கு தரப்படும் நன்மையில் எதுவும் உங்களுக்கு குறைக்கப்படாது. அவர்களது நன்மையும் குறைக்கப்படாது.

அது போல உங்கள் பிரச்சாரத்தின் மூலம் ஒரு பள்ளிவாசல் கட்டப்படுகிறது எனில், அந்த பள்ளி 1000 வருடம் இருந்தால், ஒரு வேளைக்கு 20 நபர்கள் தொழுதால் கூட, கிட்டத்தட்ட 3 கோடி பேர் தொழுத தொழுகையில் உங்களுக்கும் ஒரு பங்கு நன்மை கிடைக்கும்.

🔶 தீமைகளை தடுக்க எளிய வழி.

  مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ‏

”உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். இயலாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்). இது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்-78 (70).

நாம் ஒவ்வொரு நாளும் ஷிர்க், பித்அத், ஜோதிடம், வரதட்சனை என ஏராளமான தீமைகளை கண்ணில் பார்க்கிறோம். அவற்றை தடுப்பதற்கு நமது கைபலத்தை உபயோகப்படுத்த முடிவதில்லை. குறைந்தபட்சம் நாவால் பிரச்சாரம் செய்தாவது தடுக்கவேண்டும். அதற்கும் பிரச்சாரத்தை தவிர சிறந்த வழி எதுவுமில்லை.

🔶 பிரச்சாரத்தின் பயனை முதலில் தானே அடைந்துகொள்கிறார்.

ஒரு பிரச்சாரகர் பிறருக்கு சொல்வதற்காக சட்டங்களை படித்தாலும், அதன் முதல் பயனை அவர் தான் அடைந்துகொள்கிறார். இணைவைக்கக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, புறம் பேசக்கூடாது என்று ஊருக்கெல்லாம் பிரச்சாரம் செய்தவர், தான் அந்த தவறுகளை ஒருபோதும் செய்யமுடியாது. அவர் தவறு செய்ய நினைத்தாலும்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُون . كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

”ஈமான் கொண்டவர்களே, நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது (61:2)” என்ற குர்ஆன் வசனம், அவரை தவறு செய்யவிடாமல் தடுக்கும்.

இதுதவிர, ஒரு பேச்சாளர் பிரச்சாரம் செய்வதற்காக நிர்பந்தம் ஏற்பட்டு, பல்லாயிரம் தடவைகள் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரும்பத்திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறார். பிரச்சாரம் செய்யாதவர்கள் இந்தஅளவுக்கு படிப்பதில்லை. இவ்வாறு ஒரு பிரச்சாரகர் வாழ்வில் 30 வருடம் செய்த பிரச்சாரங்களுக்குறிய நன்மையையும், அதன் மூலம் பல்கிப்பெருகிய நன்மைகளையும் கணக்கிட்டால், மறுமையில் அவருடைய மீஸான் நிரம்பிவழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே மறுமையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் சத்திய பிரச்சாரத்தின் அடிப்படையாக உள்ள பேச்சுக்கலையை பற்றி இனி வரிசையாக காண்போம்.

🔶 பேச்சுக்கலை

நம் கருத்தை பிறருக்கு தெரிவிப்பதற்கு பேச்சு என்ற ஊடகம் பயன்படுகிறது., நம் கருத்தை மக்களை ஏற்கச்செய்யும் வகையிலும், எதிர்கருத்தை உடைக்கும் வகையிலும், மக்களுக்கு புரியும் வகையில் தேவையான உதாரணங்கள், தத்துவங்கள், வாதங்கள், ஆதாரங்கள் போன்றவற்றைக் கொண்டு மக்கள் விரும்பும் வகையில் பேசுவதையே பேச்சுக்கலை என்கிறோம்.

பேச்சுக்கலை உட்பட எந்த கலையையும் அனுபவத்தால் கற்பதற்கு அதிக காலம் தேவைப்படும். 6 வருடத்தில் கற்பதை, பாடமாக படித்து பயிற்சி எடுத்தால் ஆறே மாதத்திலேயே கற்றுக்கொள்ள முடியும். இந்த அடிப்படையில், ஒரு பேச்சாளர் பத்துவருடம் கழித்து பெறும் அனுபவஅறிவை குறுகிய காலத்தில் இந்த நூல் கற்றுத்தருகிறது.

Author: M.G.Farook, Trichy.