Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளுக்கான காலத்தைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது.

இந்த அவசியத்தை முஸ்லிம் சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆயினும் முதல் பிறையைத் தீர்மானிப்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த நவீன யுகத்தில் புதுப்புது வாதங்கள் எழுப்பப்படுவதால் அந்த வேறுபாடுகள் அதிகரித்து விட்டதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் எந்தக் குழப்பமும்,முரண்பாடும் இல்லை; இருக்காது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

திருக்குர்ஆனையும் நபிவழியையும் அணுகும் விதத்திலும், வானியலைப் புரிந்து கொள்ளும் விதத்திலும் நம்மில் யாரிடமோ அல்லது நம் அனைவரிடமோ ஏதோ தவறுகள் இருப்பதால் தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.

எனவே தான் இறையச்சத்தை முன்னிறுத்தி காய்தல் உவத்தலின்றி நடுநிலையுடன் இது குறித்து விரிவாக ஆராய்ந்து தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறோம்.

1999 நவம்பர் மாத அல்முபீன் இதழில் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த ஆக்கம்,கொள்கைச் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று, மெருகூட்டப்பட்டு நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

இஸ்லாமிய மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதில் பலருக்கும் ஏற்பட்டுள்ள குழப்பங்களை இந்நூல் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்.

அன்புடன்
நபீலா பதிப்பகம்