Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: மாமனிதர் நபிகள் நாயகம்

Last Updated on February 24, 2022 by

பதிப்புரை

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.

திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.

மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.

‘நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்’ என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ‘நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது’ என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

‘அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:16 )

எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.

நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.

நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.

நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.

நபீலா பதிப்பகம்.

முன்னுரை

வரலாற்றுச் சுருக்கம்

மக்கா வாழ்க்கை

மதீனா வாழ்க்கை

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

சொத்தும் சேர்க்கவில்லை! சொகுசாகவும் வாழவில்லை!

உண்டு சுகிக்கவில்லை!

உடுத்தி மகிழவில்லை!

சுகபோகங்களில் திளைக்கவில்லை!

நபிகள் நாயகத்தின் அரண்மனை

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

புகழுக்காக ஆசைப்பட்டார்களா?

ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை

முரண்பாடின்மை

அனைவருக்கும் சம நீதி

குடும்பத்தினருக்குச் சலுகை காட்டவில்லை!

பிறர் நலம் பேணல்

துணிவும் வீரமும்

பிற மதத்தவர்களிடம் அன்பு

ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர்