Tamil Bayan Points

முதியோர் விட்ட நோன்புக்கு பரிகாரம் உண்டா?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on October 23, 2016 by Trichy Farook

முதியோர் விட்ட நோன்புக்கு பரிகாரம் உண்டா?

இல்லை

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது “நோன்பு நோற்க சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. இந்தச் சட்டம் (2:184) பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இது குறித்து புகாரியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.

நூல் : புகாரி 4507

இதில் இருந்து தெரிய வருவது என்ன? மேற்கண்ட வசனம் அருளப்பட்டபோது நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம், அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இவ்வசனம் அருளப்பட்டது என்று தெரிகிறது.

மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகாரமும் செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது.

இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது.

ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததற்காக பரிகாரம் செய்ய வேண்டுமா என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும். ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம் செய்யச் சொல்கிறது. நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். நூல் : புகாரி 4505

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது.

ஹஜ் செய்ய வசதியில்லாதாவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை. அது போல் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.