Tamil Bayan Points

முதல் ஜமாஅத்தின் நன்மை இரண்டாம் ஜமாஅதுக்கு உண்டா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 4, 2017 by Trichy Farook

ஜமாஅத் தொழுகை முடிந்த பின் இரண்டாவது ஜமாஅத் நடக்கின்றது. முதல் ஜமாஅத்தில் தொழுவதில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

அதிரை அபூஷஹீத் தவ்லத், துபை

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை தரக்கூடியது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது. இதை வைத்து முதல் ஜமாஅத்திற்கும், இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மை வித்தியாசம் எதுவும் கிடையாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது தவறாகும்.

பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து,கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 644, 7224

பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷா தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,

நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),

நூல் : அஹ்மத் 10980

பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு,ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.

அதே சமயத்தில் இணை வைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழ விடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)