Tamil Bayan Points

மாற்றுமத ஆணை திருமணம் செய்யலாமா?

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on September 28, 2021 by

ஆணின் கேள்வி

நான் ஒரு முஸ்லிம் பெண். நான் விரும்பும் ஒரு இந்து ஆணை திருமணம் செய்யலாமா?

பதில்

இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது.

‘(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்;. (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

இந்துவை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது ‘இணைவைப்பவர்கள் முஸ்லிமாகிய உங்களை நரகத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்ற பெரிய அபாயம் இருக்கிறது’ என்கிறான்.

முஸ்லிம்கள் ஈமானை நம்பிக்கையை இழக்க வேண்டியது வரும், அதனாலேயே அப்படிப்பட்ட திருமணத்தை அல்லாஹ் அனுமதிக்க வில்லை.

பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும் போதும் அவ்வாறு திருமணம் செய்து கொள்வதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதைப் பார்க்கலாம்.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து செய்யக்கூடிய வாழ்க்கை ஒப்பந்தம். கணவன் மனைவியாக இருப்பதற்கு எடுத்துக் கொள்ளும் உறுதியான உடன்படிக்கை. திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகளை நன்கு யோசித்து எடுக்கப்படும் முடிவாகும் இது.

இணையாத ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு கொள்கைகள் ஒன்றாக ஆகவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் எவ்வாறு கணவன் மனைவியாக வாழ முடியும்? ஒரே இறைவன் என்று இஸ்லாம் சொல்கிறது, பல கடவுள்கள் என்பது இந்து மதத்தின் கொள்கை. இது இரண்டாவது காரணமாகும்.

இவற்றைக் கவனத்தில் கொள்ளாத வயதில் இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சார்ந்திருக்கும் மதம் தான் பெரிது என்ற நிலைக்கு வரும் போது பிரிந்து விடும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டே இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.