Tamil Bayan Points

மாமியார் மருமகள் உறவு

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on January 12, 2021 by

மாமியார் மருமகள் உறவு

இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம்.

நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது.

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-676, 5363

அதேபோன்று  இப்னு ஹிப்பான் என்ற நூலில் வேறொரு வகையிலும் இதுபோன்ற செய்தி அறிவிக்கப்படுகிறது.

உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘முஃமின்களின் தாயாரே! நபியவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது என்னென்ன செய்வார்கள்?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘‘தம் வீட்டாருக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தார்கள். மேலும் தமது செருப்பைத் தாமே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடை (கிழிந்திருந்தால்) தாமே தைத்துக் கொள்வார்கள். மேலும் தமது (தண்ணீர் இரைக்கும்) வாளியைச் சரிசெய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான்-5676

எனவே, ஆண்கள் பொருள் திரட்ட வேண்டும், பெண்கள் வீட்டு வேலையைச் செய்ய வேண்டும் என்று பொறுப்புக்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருந்தாலும், நாமும் வீட்டில் இருக்கும் போது அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அக்காரியத்திற்கு ஒத்துழைப்புச் செய்ய வேண்டும். அவர்கள் சமைத்தால், காய்கறி நறுக்கிக் கொடுக்கும் வேலையை நாம் செய்யலாம். மீன், கறி போன்றவற்றைக் கழுவிக் கொடுக்கலாம். பெண்களுக்கு உடல் நலமில்லாத போது வீட்டைப் பெருக்கலாம். இவற்றில் தவறு ஒன்றுமில்லை. வரவேற்கத்தக்க செயல்கள்தாம் இவை.

இப்படியெல்லாம் வேலை பார்ப்பது பெண்களைப் போன்றுள்ளது, ஆண்மைக்கு எதிரானது போன்று பலர் தவறாகக் கருதுகின்றனர்.

பெண்களுக்கென இஸ்லாமியக் குடும்பவியலில் பொறுப்புக்களும், கடமைகளும் இருந்தாலும் அப்பொறுப்பில் மிகவும் சிரமப்படாமல் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து, அதற்குத் தகுந்த ஒத்துழைப்பையும் உதவியையும் செய்து கொடுக்க வேண்டியது கணவரின் பொறுப்பாக இருக்கிறது என்று விளங்க வேண்டும்.

இங்கு இன்னொரு சமூகத் தீமையையும் நாம் இடித்துரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். சில ஹதீஸ்கள், பெண்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்ற சொன்ன செய்திகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, மருமகளை நியாயமின்றி கடுமையான வேலைப் பளுவைச் சுமக்க வைப்பது பாவச் சுமையை அதிகப்படுத்திவிடும்.

ஏனெனில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட கணவனின் வீட்டில் மருமகளான பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று சொன்ன நபியவர்கள்தான் தன் மனைவிமார்கள் சிரமப்படுகின்ற போது ஒத்துழைப்பாகவும் உதவிகள் செய்தும் சிரமத்தைக் குறைத்துள்ளார்கள். அப்படியெனில் மாமியார்கள் மருமகள்களை வேலை ஏவுவதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அநியாயமான முறையில் மருமகளைக் கசக்கிப் பிழிய வேண்டும் என்ற நினைப்பில் செயல்படவே கூடாது.

ஒரு சில மாமியார்களினால் செயல்பட முடியாத நிலையில் தள்ளாடும் சூழ்நிலையில் இருப்பார்கள். இவர்கள் தன்னளவில் எந்தப் பணியையும் செய்வதற்குச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மருமகள் முழு விதத்தில் பணிவிடை செய்வது கடமை.

அதே நேரத்தில் பல இடங்களில், வேலை செய்வதற்குண்டான சக்தியும் ஆற்றலும் நுணுக்கமான அறிவும் மாமியார்களுக்கு இருந்தும் கூட, மருமகள் வந்த உடன் எந்த வேலையும் செய்யாமல் படுத்துறங்கிக் கொண்டு, மருமகளை மட்டும் சிரமப்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல்பாடுகளாகும். மாமியாரும் மருமகளுடன் சேர்ந்து கூடமாட நின்று ஒத்துழைக்க வேண்டும்.

மகனுக்குத் திருமணம் முடிக்கும் முதல் நாள் வரைக்கும் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்த மாமியார், மருமகள் வந்ததும் ஒரேயடியாக வேலையை நிறுத்திக் கொண்டால், மருமகளை வேலைக்காரியாகப் பார்க்கும் நிலையேற்படும். இது சிறப்பான குடும்பத்திற்கு உகந்ததில்லை.

இன்னும் சொல்லப் போனால் சில வீடுகளில் மருமகள் வயதில் அவளது கணவனுடன் பிறந்த பெண் பிள்ளைகள் இருக்கத்தான் செய்வார்கள். விடுமுறை நாட்களில் வந்திருப்பார்கள். திருமணம் செய்து கொள்ளாதவர்கள் கூட வீட்டில் இருக்கலாம். அவர்களும் எல்லா வேலைகளையும் செய்வதற்குத் திடாகாத்திரமாக இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் மருமகள் வந்துவிட்டால் மாமியார் தனது பெண் பிள்ளைகளை வேலை வாங்குவதே கிடையாது. அவர்களாக முன்வந்து பார்த்தால் கூட பார்க்கக் கூடாது என்று தடுக்கின்ற மாமியார்களைத் தான் வீடுகளில் பார்க்கிறோம். இந்தத் தவறான அணுகுமுறையை, தாயே தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அவல நிலையாகவே இதைப் பார்க்க முடிகிறது.

இப்படியெல்லாம் தவறான நடைமுறைகளைக் கற்றுக் கொடுத்தால், நமது மகள் மணமுடித்துச் செல்லும் இடத்தில் தவறாக நடந்துவிடுவாளே என்ற எந்த அக்கறையும் தாய்க்கு இல்லாமல் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அஸ்மா (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) வளர்த்துப் பயிற்சியளித்த செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். மேற்கண்ட நிலையில் இருப்பவர்கள் இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு திருத்திக் கொள்வது கடமை.

மருமகளிடம் எதிர்பார்க்கின்ற வேலையைப் போன்று தனது மகளிடமும் எதிர்பார்த்தால் தான் அது சிறந்த நிர்வாகமாக அமையும். அதேபோன்று தான் நபியவர்கள் தனது மகள் பாத்திமாவின் கைகள் காய்த்துப் போகும் அளவுக்குப் பயிற்சியளித்த செய்தியையும் நினைத்துப் பார்த்து தங்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய காலச் சூழ்நிலையில் திருமணம் முடித்த ஒரு மாதத்திற்கு வேண்டுமானால் புதுப்பெண் என்ற கணக்கில் மாப்பிள்ளை வீட்டார் சொகுசாக நடத்திவிட்டு, அதன் பிறகு குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த வேலைகளையும் ஒரு பெண் தலையில் கட்டிவிடுவது என்பது வேலைக்காரியை விடவும் கீழ் நிலையில் செய்யப்படுகிற கொடுமையாகும்.

மருமகளுக்கு ஏதேனும் தலைவலி, வயிற்றுவலி என்று கொஞ்சம் படுத்து ஓய்வெடுத்தால், “உனக்கு எப்போது பார்த்தாலும் இதே வேலையாகப் போய்விட்டது’’ என்று திட்டி இடித்துரைக்கிற நிலைகளையெல்லாம் குடும்பங்களில் பார்க்கிறோம். இவையெல்லாம் பெண்ணுக்கு இழைக்கப்படுகிற அநியாயங்கள். இதனை இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

எனவே திருமணமாகி மருமகளாக வருகிற பெண்களுக்கு எப்படிப் புகுந்த வீட்டில் செய்வதற்குக் கடமைகள் இருக்கின்றதோ அதுபோன்று மாமியார்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.

இவர்கள் நம்மை நம்பி அடைக்கலமாக வந்திருக்கும் பெண்கள், நமது மகனுக்கு வாழ்க்கைப்பட்ட காரணத்தினால் இந்தப் பெண் அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கிறாள், இந்தப் பெண் தனது தாய் தந்தையரையெல்லாம் விட்டுவிட்டு நம்மிடம் வந்திருக்கிறாள், நம் மாமியார் நம்மைக் கொடுமைப்படுத்தும்போது எப்படியெல்லாம் நம் மனம் நொந்து போனதோ அது போன்று நம் மருமகளுக்கும் இருக்குமே என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து மருமகளிடம் நெருக்கத்தையும், பாசத்தையும், அன்பையும் மாமியார்கள் செலுத்திட வேண்டும்.

எல்லா மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாகத்தான் இருந்திருப்பார்கள். நம் மாமியார் நம்மைக் கொடுமைப்படுத்தியதை நினைத்துப் பார்த்து நாம் நமது மருமகளைக் கொடுமைப் படுத்தாமல் இருப்பதுதான் இறையச்சத்திற்கு உகந்த செயல்.

எனவே, மாமியார்களாக இருப்பவர்களுக்குப் பொறுப்பு அதிகம் இருக்கிறது. பொறுப்பற்ற நிலையில் மாமியார்கள் நடந்துவிடக் கூடாது. வேலைக்காரரைக் கூட அவரது சக்திக்கு மீறி வேலைப் பளுவைக் கொடுப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும்.

மஉரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

“நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள்  “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான்.

எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை  அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி பணியில் அவர்களை நீங்கள்  ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-30, 2545, 6050

வேலைக்காரருக்கே இப்படி வழிகாட்டும் மார்க்கத்தில், குடும்பத்தில் அத்தனை தியாகத்தைச் செய்யும் மருமகளை, எந்தவொரு காசு பணத்தையும் சம்பளமாக எதிர்பார்க்காமல், அர்ப்பணிக்க வந்த மருமகளை, நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து சமூகம் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மருமகள் விஷயத்தில் சமூக மக்கள் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். நபியவர்களின் மனைவிமார்களுக்கு நபியவர்கள் வீட்டில் இருக்கும் போது ஒத்தாசை, உதவி செய்கிறார்கள் என்றால், இந்த நிலை மாமியாருக்கும் பொருந்தும்.

நபியவர்களின் மனைவிமார்களுக்கு இதுபோன்ற மாமியார் இல்லை. ஏனெனில் நபியின் தாயார் நபியின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். அதனால் நபியவர்கள் தமது மனைவியருக்கு உதவி செய்துள்ளார்கள்.

மாமியார்கள் தான் மருமகளுடன் அதிகமான நேரங்களில் வீட்டில் இருப்பார்கள். தனது மகள் சிரமப்படுவதைப் பார்த்து எப்படி தானாக முன்வந்து உதவி செய்வார்களோ, அதுபோன்று மருமகள் சிரமப்படுவதைப் பார்த்தும் தானாகவே மாமியார் முன்வந்து அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மாமியார், மருமகளுக்கு அளவுக்கு அதிகமான சிரமத்தை ஏற்படுத்தினால் அது மறுமையில் பிறருக்கு அநீதி இழைத்த மனித உரிமை மீறல்களாக வந்து தங்களது நன்மைகளை இழக்க நேரிடும். ஏனெனில் பாதிக்கப்பட்ட அத்தனை மருமகளும் மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதியை முறையிடுவாள். எனவே நாம் செய்கிற சொற்ப அமல்களையும் நாளை மறுமையில் இழந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் மாமியார்களும் மருமகள்களும் செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் இல்லாமல் கணவர் இறந்துவிட்டால் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு சொத்தில் பாகப் பிரிவினை இருக்கிறது. பிள்ளைகள் இருந்து கணவன் இறந்தால் எட்டில் ஒரு பாகம் இருக்கிறது என்று மனைவி என்ற மருமகளுக்கு இஸ்லாம் சொத்துரிமையை வழங்கியிருக்கிறது. அப்படி உரிமையுடன் வருபவர்களை அடிமையைப் போன்று நடத்தக் கூடாது.

வேலை செய்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும். மாமியார்களில் பெரும் பகுதியினர் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. மருமகள் தனது மகனுடன் சந்தோஷமாக இருப்பதை தாய்மார்கள் வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். தனியாக கணவனுடன் பேசிக் கொண்டிருந்தால், அங்கே என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்று மருமகளைப் பார்த்து கேள்வி கேட்கிற அவல நிலையைப் பார்க்கிறோம்.

இது தவறான அணுகுமுறை. ஒரு மனைவி தன் கணவனுடன் பேசாமல் வேறு யாரோடு பேசுவாள்? இப்படியெல்லாம் பேசும் போது மருமகளின் ரோசத்தைத் தூண்டி அசிங்கமான அர்த்தம் வருகிற மாதிரி குத்திக் காட்டிவிடுவார்கள். இப்படியெல்லாம் மாமியார்கள் பேசுவதைக் கண்டு, கணவனுடன் அமர்ந்திருக்க மருமகள் பயப்படுவாள், அல்லது பகலில் பேசுவதற்கே அஞ்சுவாள்.

சந்தோஷமாகக் கணவனுக்கு முன்னால் பூ வைத்துக் கொள்ள முடியாது. நல்ல ஆடையை உடுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், எப்போது பார்த்தாலும் மினுக்கிக் கொண்டிருக்கிறாள் எனக் கேட்கும் கேடுகெட்ட மாமியார்கள் இச்சமூகத்திலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதுவெல்லாம் கொடூரம், அநியாயம், பிறர் மானத்தோடு விளையாடுகிற பாவம். இது பற்றி மறுமையில் கேள்வி கணக்கு, விசாரணை உண்டு என்று நினைத்து மாமியார்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

மறுமையைக் கண்டு பயப்படாதவர்கள், உலகத்தைக் கண்டாவது மனம் திருந்த வேண்டும். ஏனெனில் எத்தனை நாளுக்கு மாமியார் ராஜ்ஜியம் செல்லுபடியாகும்? மருமகளுக்குப் பிள்ளை பிறந்து, நடைமுறைகளைக் கற்றுக் கொண்டு, வருடங்கள் ஓடிவிட்டால் மாமியாரின் வயதும் உடல் தகுதியும் தளர்ந்து குடும்பத்தின் ராஜ்ஜியம் மருமகளிடம் வந்துவிடும். அந்த நேரத்தில் அதிகாரம் மருமகள் கையில் கிடைத்துவிட்டால், பழைய கணக்கை மனதில் வைத்து பழி தீர்க்கும் வகையில் பல இடங்களில் மருமகள் கொடுமைகளும் நடந்தேறுகிறது. அப்படியெனில் அதையெல்லாம் கவனத்தில் வைத்துதான் மாமியார்கள் மருமகளை நடத்த வேண்டும்.

நம் பெண் மக்கள் அவர்களது கணவர் வீட்டிலுள்ள வேலைகளையும் அவர்களது மாமியாருக்குப் பணிவிடை செய்வதிலும் கவனம் செலுத்துகிற போது, அவர்களால் நம்மைக் கவனிக்க முடியாது. நம் மருமகள்தான் நமக்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பாள் என்று நினைத்து மாமியார்கள் நடந்துகொள்ள வேண்டும்.

பெண் மக்கள் மீது அக்கறையும் பாசமும் வைப்பதில் தவறு இல்லை. அதே நேரத்தில் மாமியாருக்கு வயதாகி படுத்த படுக்கையில் கிடந்து விட்டால், நமது மகள் நம்மைக் கவனிக்கிற வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் நமது மருமகன் அவரையும் அவரது தாய்தந்தையர்களையும் கவனிப்பதற்குத்தான் நமது மகளை வைத்திருப்பார். அப்படிப்பட்ட நிர்கதியான நிலையில் நமது மருமகள்தான் நம்முடன் நம்வீட்டில் இருப்பாள்.

அவள் நம்மை மனப்பூர்வமாகக் கவனிப்பதாக இருந்தால், மாமியார்கள் மருமகளுக்கு வந்த நாள் முதல் அந்த எண்ணத்தை ஊட்ட வேண்டும். நமது பிள்ளையின் இடத்தில் மருமகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்திருந்தால் அந்த மருமகள் இயற்கையாகவே மாமியாருக்கு ஏதேனும் ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவாள். எனவே நமது மருமகள்தான் இனி நமது மகள் என்று மாமியார்கள் நடத்திக் காட்டிட வேண்டும்.

திருமணம் முடித்துக் கொடுத்த சில ஆண்டுகள் வேண்டுமானால், தாய்தந்தையுடன் பிள்ளைக்கு உறவு இருக்கலாம். வாழ்நாள் முழுக்க அது நீடிக்க வாய்ப்பே இல்லை. நடைமுறையில் பல பெண்கள் பல ஆண்டுகளாக தாய் தந்தையரைப் பார்க்காமல் வாழ்வதை நாம் வாழ்கிற சமூகத்தில் காண்கிறோம். கணவன் வீடே கதியென்று இருக்கிறார்கள். எனவே நமது பெண்பிள்ளைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்று நினைப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எனவே மாமியாராகிய நம்மை நமது மருமகள் தான் கவனிப்பாள் என்று மாமியார்கள் எதிர்கால பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டால் ஒழுங்காக நடந்து கொள்வார்கள். இல்லையெனில் உலகத்திலும் தோல்வியைத்தான் தழுவார்கள். யாரெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்களோ அவர்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம்.

அதுவும் தனது மகனாலேயே அம்மாக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இவளுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தன் கணவனிடம் சொல்லி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கடைசியில் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்ற கொடுமைகளையும் இவ்வுலகத்தில்தான் பார்க்கிறோம். எனவே ஒரு பெண்ணை நமது வீட்டிற்கு மருமகளாக எடுத்துக் கொண்டால், அவள்தான் நமக்கு உறுதுணையானவள், மருமகள்தான் நமக்கு எதிர்காலம் என்று நினைத்து அவள்மீது பாசம் செலுத்தி நடந்துகொண்டால், குடும்பமும் நன்றாக இருக்கும்; அநீதி இழைத்தவராகவும் ஆகமாட்டோம்; நமது எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்.

இப்படி பலவகையில் இது நன்மையைப் பெற்றுத் தரும். உலகத்திலும் நன்மை, மறுமையிலும் அளவிலா நன்மையைப் பெற்றுத் தருகிறது. நமது ஆண் பிள்ளைகளும் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி மகிழ்ச்சியான குடும்பாக வாழ்வார்கள். அப்படி இல்லாமல் மருமகள் மாமியார் சண்டை நடக்கிற குடும்பங்களில் இவர்களது பஞ்சாயத்தைத் தீர்ப்பதிலேயே ஆண்கள் நிம்மதி இழந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதாவது திருமணம் முடித்து பத்து ஆண்டு இடைவெளியில் இருக்கிற பெரும்பாலான ஆண்கள் நிம்மதியாக இருக்க முடியாததற்குக் காரணம், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் சண்டைதான். வெளிநாட்டில் அல்லது வெளியூர்களில் சம்பாதிப்பதற்குச் சென்றவர்கள் இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் கழித்தாலும் சொந்த ஊருக்குச் செல்வதை வெறுப்பதற்குக் காரணமே இந்த மாமியார் மருமகள் சண்டைதான்.